சில தினங்களில் காஷ்மீரில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

ஜம்மு காஷ்மீர் கட்டுப்பாடுகளை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த மனு மீது இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது.
சில தினங்களில் காஷ்மீரில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
Published on

புதுடெல்லி,

இந்திய அரசியல் சட்டம் 370-வது பிரிவின்படி காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு சமீபத்தில் ரத்து செய்தது. இதைப்போல அந்த மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்படுகிறது. கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

காஷ்மீர் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு இருக்கும் இந்த நடவடிக்கைகளை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன. குறிப்பாக சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து எம்.எல்.சர்மா என்ற வக்கீல் மனு தாக்கல் செய்துள்ளார். காஷ்மீர் சட்டசபையின் ஒப்புதல் இல்லாமல் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு இருப்பதாக அவர் தனது மனுவில் குற்றம் சாட்டி உள்ளார்.

இதைப்போல காஷ்மீரிலும், ஜம்மு பகுதியின் சில மாவட்டங்களிலும் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகக்குழுவினர் சுதந்திரமாக சென்று வருவதற்காக, கட்டுப்பாடுகளை விலக்கக்கோரி பத்திரிகை ஆசிரியர் ஒருவரும் வழக்கு தொடர்ந்து உள்ளார். கடந்த 4-ந் தேதி முதல் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு உள்ளதால் காஷ்மீரின் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக அவர் தனது மனுவில் குற்றம்சாட்டி இருந்தார்.

இதைத்தவிர காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது சட்டவிரோதமானது என அறிவிக்கக்கோரி தேசிய மாநாடு கட்சி தலைவரும், முன்னாள் சபாநாயகருமான முகமது அக்பர் லோன் மற்றும் சிலரும் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.

இந்த வழக்குகள் அனைத்தும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, எஸ்.ஏ.நசீர் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜம்மு காஷ்மீர் கட்டுப்பாடுகளை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த மனு மீது இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது. இந்த மனு மீதான விசாரணையின் போது, காஷ்மீரில் எந்தவித பத்திரிகைகளும் முடக்கப்படவில்லை என்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் தெரிவித்தார். மேலும், இன்னும் சில தினங்களில் ஜம்மு காஷ்மீரில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் எனவும் மத்திய அரசின் வழக்கறிஞர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com