ரெட்டியார்பாளையம் - மேட்டுப்பாளையம் சாலையில் 57 ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு - அதிகாரிகளுடன் வாக்குவாதம்

ரெட்டியார்பாளையம் - மேட்டுப்பாளையம் சாலையில் 57 ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் அங்கு வசித்தவர்கள் வாக்குவாதம் செய்தனர்.
Published on

புதுச்சேரி,

புதுவை ரெட்டியார்பாளையம் முதல் மேட்டுப்பாளையம் செல்லும் சாலையை ஆக்கிரமித்து ஏராளமான வீடுகள் கட்டப்பட்டிருந்தன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தது. இந்த வீடுகளை அகற்றுமாறு அங்கு குடியிருந்தவர்களுக்கு உழவர்கரை நகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனாலும் வீடுகளை காலி செய்யாமல் தொடர்ந்து குடியிருந்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை மாவட்ட கலெக்டர் அருண் உத்தரவின் பேரில் சப்-கலெக்டர் சஷ்வத் சவுரவ் தலைமையில் பொதுப்பணி, உள்ளாட்சி துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் ரெட்டியார்பாளையத்திற்கு பொக்லைன் எந்திரங்களுடன் வந்தனர். ஆக்கிரமிப்பு வீடுகளை அப்புறப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

இதுபற்றி தெரியவந்ததும் அந்த வீடுகளில் குடியிருந்தவர்கள் திரண்டு வந்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் போலீஸ் பாதுகாப்புடன் அந்த வீடுகள் பொக்லைன் எந்திரங்கள் மூலம் இடிக்கப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் சிலர் வீடுகளில் இருந்து கொண்டு வெளியேற மறுத்தனர். அவர்களை பெண் போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இதன்பின் அந்த வீடுகளும் இடித்து அகற்றப்பட்டன.

இதைப்பார்த்து அங்கு வசித்து வந்த மற்றவர்கள் தங்களது வீடுகளில் இருந்து துணிகள், பாத்திரங்கள், கட்டில்களை அவசர அவசரமாக எடுத்துக்கொண்டு வெளியேறினர். தொடர்ந்து அங்கிருந்த ஆக்கிரமிப்பு வீடுகளை உழவர்கரை நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினார்கள். மொத்தம் 57 வீடுகள் இடித்து தள்ளப்பட்டன. இந்த நடவடிக்கையையொட்டி மின்துறை ஊழியர்கள் மின்சார வயர்களை ஒழுங்குபடுத்தினர். போக்கு வரத்தும் தடை செய்யப்பட்டிருந்தது.

ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்டதால் ரெட்டியார்பாளையம் - மேட்டுப்பாளையம் சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com