கலவரம், பொருளாதார மந்தநிலை, கொரோனா வைரஸ்: இந்தியாவுக்கு மும்முனை ஆபத்து - மன்மோகன் சிங் சொல்கிறார்

கலவரம், பொருளாதார மந்தநிலை, கொரோனா வைரஸ் என மும்முனை ஆபத்துகளை இந்தியா சந்தித்து வருவதாக மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
Published on

புதுடெல்லி,

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், கட்டுரை ஒன்றை எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

திட்டமிட்டு உருவாக்கப்பட்ட சமூக பதற்றம், மோசமான பொருளாதார நிர்வாகம், தொற்று நோய் ஆகிய உடனடி மும்முனை ஆபத்துகளை இந்தியா சந்தித்து வருகிறது.

சமூக விரோதிகளும், அரசியல்வாதிகளும் மத வன்முறையை தூண்டி விடுகிறார்கள். பல்கலைக்கழக வளாகங்கள், பொது இடங்கள், வீடுகள் என எல்லாவற்றிலும் மத வன்முறையின் கோர முகத்தை காண முடிகிறது. இது, இந்திய வரலாற்றின் இருண்ட பக்கங்களை நினைவுபடுத்துகிறது.

மக்களை பாதுகாக்க வேண்டிய தர்மத்தை பாதுகாப்பு படைகள் கைவிட்டு விட்டன. நீதித்துறையும், ஜனநாயகத்தின் நான்காம் தூணான பத்திரிகை துறையும் கூட நம்மை கைவிட்டு விட்டன. சமூக பதற்றம் நாடு முழுவதும் வேகமாக பரவி, நாட்டின் ஆன்மாவை அச்சுறுத்தி வருகிறது. யார் பற்ற வைத்தார்களோ, அவர்களால்தான் இதை அணைக்க முடியும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, உலகத்துக்கே முன்னுதாரணமான பொருளாதார வளர்ச்சியை கண்ட இந்தியா, தற்போது பொருளாதார சீரழிவை சந்தித்துள்ளது. பொருளாதாரம் பின்னடைவை சந்திக்கும்போது, அதை மதமோதல்கள் மேலும் அதிகரித்து விடும். முதலீட்டாளர்கள், தொழிலதிபர்கள் புதிய திட்டங்களை மேற்கொள்ள தயங்குகிறார்கள். மத மோதல்கள், அவர்களின் அச்சத்தை அதிகரிக்கிறது.

கொரோனா வைரசை பொறுத்தவரை, மத்திய அரசு உடனடியாக ஒரு அவசர குழுவை உருவாக்க வேண்டும். பிரச்சினையை கையாளும் பொறுப்பை அதனிடம் ஒப்படைக்க வேண்டும். இதர நாடுகளிடம் இருந்து நல்ல வழிமுறைகளை பின்பற்றலாம்.

பிரதமர் மோடி, வெறும் வார்த்தைகளால் இல்லாமல், தனது செயல்களால் நாட்டு மக்களிடம் நம்பிக்கை உருவாக்க வேண்டும். நாம் சந்திக்கும் ஆபத்துகளை உணர்ந்துள்ளதாகவும், இதில் இருந்து மீள நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளிக்க வேண்டும்.

முதலில், கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் முழு கவனம் செலுத்த வேண்டும். குடியுரிமை சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் அல்லது திருத்தி அமைக்க வேண்டும். நுகர்வு தேவையை அதிகரித்து, பொருளாதாரத்துக்கு புத்துயிரூட்ட ஊக்கச்சலுகைகளை அறிவிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com