உயரமான இடத்தில் இருந்து கொட்டும் அருவி நீரானது ஆர்ப்பரித்து ஓடிவருவதே ஆறு எனப்படுகிறது. ஆற்றின் நீர் அளவைக் கொண்டு வற்றும் ஆறுகள், வற்றாத ஆறுகள் என்று வகைப்படுத்தப்படுகின்றன. எல்லா ஆறுகளிலும் மழைக்காலத்திலும், வசந்த காலத்திலும் அதிகமான நீரோட்டம் இருக்கும். கோடையில் நீரோட்டம் குறைவாக இருக்கும். சில ஆறுகள் கோடையில் வறண்டு விடும்.
ஆறுகளின் நீள, அகலம் மற்றும் நீரோட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் அதன் பயன்பாடு அதிகமாகவோ, குறைவாகவோ இருக்கிறது.
பலவித பயன்பாடுகளுக்கு ஆறு உதவுகிறது, மீன்பிடித்தல், குளித்தல், போக்குவரத்து, நீந்துதல், பாசனம் உள்ளிட்ட பல்வேறு பயன்களுக்கு ஆறுகள் உபயோகமாகின்றன.
ஆறுகள் பெரும்பாலும் நன்னீர் கொண்டவையாகும். எனவே ஆற்று நீர், ஏராளமான மக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்கிறது.
பல சிறிய ஆறுகள் சேர்ந்து பெரிய நதியை உருவாக்குவது உண்டு. சில இடங்களில் பெரிய நதிகள் பிரிந்து கிளை ஆறுகளை உருவாக்குவதும் உண்டு.
உலகின் நீளமான ஆறு நைல் நதியாகும். இது 6 ஆயிரத்து 650 கிலோமீட்டர் நீளம் கொண்டதாகும். உலகின் இரண்டாவது நீளமான ஆறு அமேசான் ஆறு. இது 6 ஆயிரத்து 400 கிலோமீட்டர் நீளம் கொண்டது.
இந்தியாவின் நீளமான ஆறு கங்கை. இது 2 ஆயிரத்து 525 கிலோமீட்டர் நீளம்கொண்டது. 12 சிறிய ஆறுகள் இணைந்து கங்கை பெருக்கெடுக்கிறது.
உலகின் பல்வேறு முக்கியமான நகரங்கள், ஆற்றின் கரையோரமாக அமைந்துள்ளன. ஏனெனில் மக்களின் வாழ்வுக்கும், வசதிக்கும் நீராதாரம் மிக அத்தியாவசியமாகும். எனவே ஆரம்பகால நகரங்கள் ஆற்றங்கரை நாகரிகமாக விளங்கின. தற்போது நீராதாரங்களை நிலத்தடியில் இருந்தும், குழாய் வழியாகவும் தருவித்துக் கொண்டு சாலை நாகரீகத்துக்கு மாறிக் கொண்டிருக்கிறோம். தற்போதைய நகரங்கள் விசாலமான சாலைப் போக்குவரத்துடன் நிறுவப்படுகின்றன.
2009-ம் ஆண்டு ஜனவரி 15-ந் தேதி, அமெரிக்க விமான நிறுவனம், அவசர தேவைக்காக ஹட்சன் ஆற்றில் விமானத்தை இறக்கி விபத்தில் இருந்து தற்காத்தது. அந்த விமானம் நியூயார்க் சென்று கொண்டிருந்தது. பறவைகள் விமானத்தில் மோதியதால் விபத்தை தவிர்க்க விமானம் ஆற்றில் இறக்கப்பட்டது. விமானியின் சாதுரியமான இந்த திட்டத்தால் பயணிகள் அனைவரும் தப்பித்தார்கள்.
உலகின் பழமையான நாகரிகமான சிந்துசமவெளி நாகரிகம் இந்துஸ் (சிந்து) ஆற்றங்கரையில் தோன்றியதாகும். இந்த நதியின் வெள்ளப் பெருக்கால் அவை அழிவுற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கங்கை, சிந்து மற்றும் யாங்க்ஸி ஆகியவை உலகின் மிக மாசு அடைந்த ஆறுகளாக கருதப்படுகின்றன. இந்தியாவில் கங்கையும், யமுனையும் அதிகம் மாசுபட்ட நதிகளாகும்.
பெரும்பாலான ஆறுகள் நிலங்களை வளப்படுத்தி கடலில் கலந்துவிடுகின்றன. இந்தியாவின் யமுனை மற்றும் உலகின் சில ஆறுகள் மட்டுமே கடலில் கலக்காமல் முழுவதும் நிலத்திற்கு வளம் சேர்க்கின்றன. சில ஆறுகள் இறுதியாக ஏரியாக மாறி சேகரமாகின்றன.
ஆறுகள், குடிநீராகவும், ஆற்றலாகவும், உணவுப் பொருட்களின் ஊற்றுக்காலாகவும் விளங்குகின்றன. போக்குவரத்து மற்றும் சேவைகளின் அடிப்படையில் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தவையாகவும் விளங்குகின்றன.
ஆறுகளை இடைமறித்தே அணைகள் கட்டப்பட்டுள்ளன. சிறிய ஆறுகளில் தடுப்பணைகளும், கால்வாய்களும் உருவாக்கி பாசன நிலங்கள் வளப்படுத்தப்படுகின்றன. அது விவசாய வளர்ச்சிக்கும், மனிதனின் உணவுத் தேவைக்கும் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது.
ஆற்றை நம்பி மனிதர்கள் மட்டுமல்லாமல், எண்ணற்ற உயிரினங்களும் வாழ்கின்றன.
கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதா, பிரம்மபுத்திரா, மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, சபர்நேகா உள்ளிட்ட பல்வேறு ஆறுகள் இந்தியாவின் முக்கிய நதிகளாகும்.
இந்தியாவில் ஆறுகளை புனிதமாக கருதுகிறார்கள். ஆறு சார்ந்த பண்டிகைகள், விளையாட்டுகள் நிறைய உள்ளன. கும்பமேளா, மகாமகம், ஓணம் என பல்வேறு பண்டிகைகள் நதிக்கரையில் கொண்டாடப்படுகின்றன. முன்னோர் வழிபாடு உள்ளிட்ட சடங்கு முறைகளும் ஆறு சார்ந்ததாக பின்பற்றப்படுகிறது. இதுபோல நீச்சல், படகுப்போட்டி உள்ளிட்ட விளையாட்டுகளும் ஆறுகளில் நடத்தப்படும்.
பரிசல், படகு, விசைப்படகு, குடில் படகுகள் ஆற்றுப் போக்குவரத்திற்கு பயன்படுகின்றன.
ஆறுகளை ஒன்றிணைப்பதும், நீர் வழிப் போக்குவரத்தும், நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றும் என்று நம்பப்படுகிறது. ஆனால் இந்த திட்டங்களை நிறைவேற்றுவது மிகவும் சவால் நிறைந்த பணியாகும்.
நீண்டகாலமாக ஓடி வரும் ஆறுகள், வளமான சமவெளிகளையும், செழிப்பான மணல்பரப்பையும் உருவாக்குகிறது. இந்த மண்வளமானது நாட்டின் முக்கிய இயற்கை வளமாகும். அளவு கடந்து ஆற்று மணலை அள்ளியெடுப்பது ஆறுகளை வற்றச் செய்துவிடும். இது பலவிதங்களில் மனிதகுலத்தை பாதிக்கும். மேலும் பலவித பயன்பாடுகளாலும் ஆறுகள் மனிதர்களால் மாசடையச் செய்யப்படுகின்றன. இத்தகைய சீர்கேடுகளில் இருந்து தற்காத்துக் கொள்ளவே ஆறுகளை பாதுகாக்கும் சர்வதேச தினம் (மார்ச் 14) கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளில் நாமும் ஆறு களையும், நீர்நிலைகளையும் மாசு படுத்துவதில்லை என்று உறுதியேற்று செயல்படலாம்.