15-வது நிதிக்குழு பரிந்துரைப்படி 14 மாநிலங்களுக்கு ரூ.6,195 கோடி விடுவிப்பு - மத்திய அரசு நடவடிக்கை

15-வது நிதிக்குழு பரிந்துரைப்படி, 14 மாநிலங்களுக்கு ரூ.6 ஆயிரத்து 195 கோடியை மத்திய நிதி அமைச்சகம் விடுவித்துள்ளது.
Published on

புதுடெல்லி,

ஒவ்வொரு மாநிலத்துக்குமான வருடாந்திர வரவு-செலவு அறிக்கையின் நிதி பற்றாக்குறையை ஈடு செய்ய மத்திய அரசின் நிதி பற்றாக்குறை மானியம், மாதந்தோறும் தவணை முறையில் வழங்கப்படுவது நடைமுறை ஆகும்.

15-வது நிதிக்குழு பரிந்துரை அடிப்படையில் இது வழங்கப்படுகிறது. நடப்பு நிதியாண்டின் முதல் இரண்டு தவணைகள், கடந்த ஏப்ரல் 3, மே 11 ஆகிய தேதிகளில் விடுவிக்கப்பட்டன.

இந்நிலையில், 3-வது தவணை நேற்று விடுவிக்கப்பட்டது. தமிழ்நாடு, ஆந்திரா, அசாம், இமாசலபிரதேசம், கேரளா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, பஞ்சாப், சிக்கிம், திரிபுரா, உத்தரகாண்ட், மேற்கு வங்காளம் ஆகிய 14 மாநிலங்களுக்கு மொத்தம் ரூ.6 ஆயிரத்து 195 கோடி விடுவிக்கப்பட்டது.

இத்தகவலை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனின் அலுவலகம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு சமயத்தில், இந்த தொகை கூடுதல் நிதி ஆதாரமாக பயன்படும் என்று கூறியுள்ளது.

இதற்கிடையே, நடப்பு நிதியாண்டில் சொட்டு நீர்ப்பாசன திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு மத்திய அரசு ரூ.4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

மேலும், நபார்டுடன் இணைந்து ரூ.5 ஆயிரம் கோடி நுண் நீர்ப்பாசன நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிதியத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு நபார்டு மூலம் இதுவரை ரூ.478 கோடியே 79 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் ஹெக்டேர் விளைநிலங்கள் பயனடையும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com