

டிராவல்ஸ் அதிபர்
சென்னை மேற்கு அண்ணா நகர் 18-வது பிரதான சாலையை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 54). இவர், சொந்தமாக டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்திய ஆம்னி பஸ் சங்க பொதுச் செயலாளராகவும் உள்ளார். இவர், தன்னுடைய மனைவி சசிகலா, டாக்டரான தனது மகன் அரிகரன் ஆகியோருடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கீழ் தளத்தில் உள்ள கதவை பூட்டிவிட்டு மாடியில் உள்ள ஒரு அறையில் இளங்கோவன் தனது மனைவி மற்றும் மகனுடன் தூங்கினார்.
ரூ.48 லட்சம் நகை கொள்ளை
நேற்று காலை எழுந்து பார்த்தபோது அறையின் கதவு வெளிப்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். சிறிது நேரத்துக்கு பிறகு அங்கு வந்த பால்காரர் உதவியுடன் அறையின் கதவை திறந்து வெளியே வந்தனர்.
பின்னர் கீழ் தளத்துக்கு வந்து பார்த்தனர். அங்குள்ள அறையில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.28 லட்சம் மதிப்புள்ள 75 பவுன் தங்க நகை, ரூ.15 லட்சம் மதிப்பிலான வைர நகைகள் மற்றும் ரூ.5 லட்சம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் என மொத்தம் ரூ.48 லட்சம் மதிப்புள்ள தங்க, வைர நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
வெளிப்புறமாக தாழ்ப்பாள்
நேற்று முன்தினம் நள்ளிரவில் இளங்கோவன் வீட்டின் கீழ் தளத்தில் உள்ள கதவின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே புகுந்தனர். மாடியில் உள்ள அறையில் இளங்கோவன் குடும்பத்தினருடன் தூங்குவதை அறிந்த கொள்ளையர்கள், சத்தம் கேட்டு அவர்கள் வெளியே வராமல் இருக்க அந்த அறையின் கதவை வெளிப்புறமாக தாழ்ப்பாள் போட்டுவிட்டு, பின்னர் கீழ் தளத்துக்கு வந்து சாவகாசமாக கைவரிசையை காட்டி உள்ளனர்.
இது குறித்து இளங்கோவன் அளித்த புகாரின்பேரில் திருமங்கலம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இளங்கோவன் வீட்டில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. ஆனால் கடந்த சில நாட்களாக அவை செயல்படாததால் கொள்ளையர்களின் உருவம் அதில் பதிவாகவில்லை.
இதையடுத்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.