புதுடெல்லி,
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது கொரோனா பரவ தொடங்கியது. இதைத்தொடர்ந்து இரு சபைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன.
அதன்பிறகு நாடாளுமன்ற கூட்டம் நடைபெறவில்லை. மழைக்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தை நடத்துவது குறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும், மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவும் ஆலோசனை நடத்தினார்கள்.
அப்போது, கொரோனா பரவலை தொடர்ந்து சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் மக்களவை கூட்டத்தை நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்திலும், மாநிலங்களவை கூட்டத்தை மக்களவையிலும் நடத்துவது பற்றி அவர்கள் ஆலோசித்தனர். மைய மண்டபம் 800 பேர் அமரும் வசதி கொண்டது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் 543 பேரையும் அங்கு போதிய இடைவெளி விட்டு அமர வைக்க முடியும் என்பதால், மையமண்டபத்தில் மக்களவை கூட்டத்தை நடத்துவது வசதியாக இருக்கும் என்று அவர்கள் கருதுகிறார்கள்.
இதேபோல் மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கையில் பாதிக்கும் குறைவுதான் என்பதால், மாநிலங்களவை கூட்டத்தை தற்போது மக்களவை கூட்டம் நடைபெறும் மண்டபத்தில் நடத்தலாம் என்று அவர்கள் விரும்புவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
மக்களவை கூட்டத்தையும், மாநிலங்களவை கூட்டத்தையும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் மாறி மாறி நடத்துவது குறித்தும் அவர்கள் ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள்.
இது தவிர காணொலி காட்சி மூலம் இரு சபைகளின் கூட்டத்தையும் நடத்தலாமா? எம்.பி.க்கள் தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே கூட்டத்தில் கலந்து கொள்வது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது குறித்தும் ஓம் பிர்லாவும், வெங்கையா நாயுடுவும் ஆலோசித்து உள்ளனர்.
23 நாடுகளில் நாடாளுமன்ற கூட்டமும், நாடாளுமன்ற நிலைக்குழுக்களின் கூட்டமும் காணொலி காட்சி மூலம் நடைபெறுவதாகவும், தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் அதேபோல் இந்தியாவிலும் நடத்த வேண்டும் என்றும், இதுதொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என்றும் கோரி பாரதீய ஜனதா தலைவர்களில் ஒருவரான பர்த்துருஹரி மகதாப் சமீபத்தில் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதி இருந்தார்.
மக்களவை, மாநிலங்களவை கூட்டங்கள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதால் அதில் ரகசியம் காக்க தேவை இல்லை என்றும், ஆனால் நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் முக்கியமான விஷயங்கள் பற்றி பேசுவதால் அதில் ரகசியம் காப்பது அவசியம் என்றும் ஓம் பிர்லாவும், வெங்கையா நாயுடுவும் கருதுவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.