நொய்யல் ஆறு
கோவை அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் நொய்யல் ஆறு, மத்வராயபுரம், ஆலந்துறை, பேரூர், கோவை, சூலூர் வழியாக திருப்பூர் செல்கிறது. பின்னர் அது கரூர் அருகே காவிரி ஆற்றில் கலக்கிறது. உற்பத்தியாகும் இடத்தில் இருந்து காவிரி ஆற்றில் சேரும் இடம் வரை 158 கி.மீ. தூரம் நொய்யல் ஆறு பயணிக்கிறது.
இந்த ஆற்றில் சித்திரைச்சாவடி, தண்ணீர் பந்தல், குனியமுத்தூர், குறிச்சி, சுண்ணாம்பு காளவாய், பட்டணம், ஒட்டர்பாளையம் உள்பட 22 தடுப்பணைகள் உள்ளன. இவை மூலம் குளங்களுக்கு தண்ணீர் திருப்பி விடப்படுகிறது.
சீரமைக்க கோரிக்கை
ஆனால் தடுப்பணைகள் மணல் மூடியும், சேதமடைந்தும் காணப்படு கிறது. இதன் காரணமாக நொய்யல் ஆற்றில் இருந்து செல்லும் தண்ணீர் தடுப்பணைகளில் தேங்காமல் வீணாகிறது. இதனால் தடுப்பணைகள் இருந்தும் பயனற்ற நிலை உள்ளது. மேலும் நொய்யல் ஆற்றிலும் ஆக்கிரமிப்பு மற்றும் ஆகாயத்தாமரை செடிகள் நிறைந்து உள்ளன.
எனவே நொய்யல் ஆற்றை சீரமைத்து, அதில் உள்ள தடுப்பணைகளை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நொய்யல் ஆற்றை சீரமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப் பட்டு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதையடுத்து நொய்யல் ஆற்றை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
ரூ.230 கோடி ஒதுக்கீடு
புராணத்தில் காஞ்சிமா நதி என்று அழைக்கப்பட்ட நொய்யல் ஆற்றை சீரமைக்க ரூ.230 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. கோவை மாவட்டத்தில் நொய்யல் ஆற்றின் குறுக்கே மொத்தம் 18 தடுப்பணைகள் உள்ளன. அவற்றை தூர்வாரி, தண்ணீரை சேமிக்க தடுப்புச்சுவரும் அமைக்கப்படுகிறது.
மேலும் தடுப்பணையில் இருந்து குளங்களுக்கு தண்ணீர் செல்லும் வாய்க்கால்கள் மற்றும் குளங்கள் தூர்வாரப்பட்டு கரைகள் பலப்படுத்தப்படுகிறது. குறிப்பாக சித்திரைச்சாவடி தடுப்பணை 20 அடிக்கும் மேல் ஆழம் கொண்டது ஆகும். தற்போது அது மண் மூடி கிடக்கிறது. இதை தூர்வாரும்போது தண்ணீரை அதிகளவில் சேமிக்க முடியும். இதனால் நிலத்தடி நீர்மட்டமும் உயரும்.
2 ஆண்டுகளில் முடிக்கப்படும்
தடுப்பணையை சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த விவசாயிகளும் பயன் பெறுவார்கள். இதுதவிர வாய்க்கால்களை தூர்வாரி, கரைகளை பலப்படுத்துவதால், தடுப்பணையில் இருந்து குளங்களுக்கு தண்ணீர் திறக்கும்போது எவ்வித தடையும் இல்லாமல் தண்ணீர் செல்லும்.நொய்யல் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கவும் வழிவகை செய்யப்படும். இதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணிகள் தொடங்கப்படும். அந்த பணிகள் 2 ஆண்டுகளில் முடிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.