“ரூ.3.16 லட்சம் கோடி வாராக்கடன் தள்ளுபடியா?” - ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு அருண் ஜெட்லி மறுப்பு

ரூ.3 லட்சத்து 16 ஆயிரம் கோடி வாராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக ராகுல் காந்தி கூறியதற்கு அருண் ஜெட்லி மறுப்பு தெரிவித்துள்ளார்.
Published on

புதுடெல்லி,

பா.ஜனதா ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகளில், 21 பொதுத்துறை வங்கிகள், ரூ.3 லட்சத்து 16 ஆயிரம் கோடி வாராக்கடன்களை தள்ளுபடி செய்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை சுட்டிக்காட்டி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். சாமானியர்களின் பணத்தை வீணடித்து விட்டதாக அவர் கூறினார்.

இந்நிலையில், இந்த குற்றச்சாட்டை மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி மறுத்துள்ளார். தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் கூறி இருப்பதாவது:-

வாராக்கடன்களை தங்களது வரவு-செலவு கணக்கு அறிக்கையில் இருந்து நீக்குவது பொதுத்துறை வங்கிகள் வழக்கமாக கடைபிடிக்கும் நடைமுறை. ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்படி இது நடக்கிறது.

வரி பயன் மற்றும் மூலதன மேம்பாட்டுக்காக வங்கிகள் இப்படி செய்கின்றன. இதற்கு கடன் தள்ளுபடி என்று அர்த்தம் அல்ல. இந்த கடனை பெற்றவர்கள், அதை திருப்பிச் செலுத்தியே ஆக வேண்டும்.

அந்த வகையில், நடப்பு நிதியாண்டின் முதலாவது காலாண்டில், இப்படி நீக்கப்பட்ட வாராக்கடன்களில் ரூ.36 ஆயிரத்து 551 கோடி திரும்ப வசூலிக்கப்பட்டு உள்ளது. கடந்த நிதியாண்டில் ரூ.74 ஆயிரத்து 562 கோடி கடன் வசூலிக்கப்பட்டு உள்ளது,

நடப்பு நிதியாண்டில், ரூ.1 லட்சத்து 81 ஆயிரத்து 34 கோடி வாராக்கடன்களை திரும்ப வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. எனவே, இத்தகைய கடன்களை திரும்ப வசூலிக்கும் பணியில் வங்கிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன என்று அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com