ஊரக உள்ளாட்சி தேர்தல்: ஊட்டியில் வாக்கு எண்ணும் பணி தாமதமாக தொடங்கியது

ஊட்டியில் வாக்கு எண்ணும் பணி தாமதமாக தொடங்கியது.
Published on

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல் கட்டமாக குன்னூர் மற்றும் கோத்தகிரி ஊராட்சி ஒன்றியங்களில் 218 பதவிகளுக்கும், இரண்டாம் கட்டமாக ஊட்டி மற்றும் கூடலூர் ஊராட்சி ஒன்றியங்களில் 275 பதவிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்காக அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவுக்கு பிறகு வாக்குப்பெட்டிகள் அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, அறையில் வரிசையாக வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டன. அந்த அறை முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

நீலகிரியில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. கோத்தகிரியில் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், குன்னூரில் புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியிலும், கூடலூரில் புனித தாமஸ் மேல்நிலைப்பள்ளியிலும் வாக்கு எண்ணிக்கை நடந்தது. இந்த பணி கூடலூர் மற்றும் கோத்தகிரியில் காலை 8 மணிக்கும், குன்னூரில் காலை 9 மணிக்கும் தொடங்கியது.

ஊட்டி ஊராட்சி ஒன்றிய வாக்கு எண்ணும் மையமான ஊட்டி பிங்கர்போஸ்ட் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் காலை 7 மணி முதலே முகவர்கள் கூட்டம், கூட்டமாக வர தொடங்கினர். உள்ளே செல்போன் அனுமதிக்கப்படவில்லை. முகவர்களிடம் அடையாள அட்டை உள்ளதா? என்று போலீசார் சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதித்தனர். இதற்காக தடுப்புகள், மெட்டல் டிடெக்டர் அமைக்கப்பட்டு இருந்தது.

அதனை தொடர்ந்து காலை 8 மணியளவில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்ட அறையின் சீல் அகற்றப்பட்டது. பின்னர் ஊராட்சிகள் வாரியாக வாக்குப்பெட்டிகள் வாக்குச்சீட்டுகள் பிரிப்பு அறைக்கு எடுத்து செல்லப்பட்டன. அங்கு 45 மேஜைகள் போடப்பட்டு இருந்தது. ஒரு மேஜையில் 3 அலுவலர்கள் பணியில் இருந்தனர். வாக்குப்பெட்டிக்குள் இருந்த வாக்குச்சீட்டுகள் கொட்டப்பட்டு, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என வாக்குச்சீட்டுகள் நிறங்கள் அடிப்படையில் பிரிக்கப்பட்டன.

இதையடுத்து வாக்குச்சீட்டுகள் பெரிய பெட்டியில் கொட்டப்பட்டு, தரைத்தளத்தில் ஒதுக்கப்பட்ட 4 அறைகள், முதல் தளத்தில் இருந்த 2 அறைகளுக்கு கொண்டு செல்லப்பட்டது. அறையில் தலா 18 மேஜைகள் போடப்பட்டு இருந்தது. அங்கு வாக்கு எண்ணும் அலுவலர்கள் வாக்குச்சீட்டுகளை பிரித்து வாக்குகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அப்போது செல்லத்தகாத வாக்குச்சீட்டுகள் தனியாகவும், செல்லத்தக்க வாக்குச்சீட்டுகள் சின்னங்கள் வாரியாகவும் அடுக்கி வைக்கப்பட்டது.

முகவர்கள் உரிய நேரத்தில் வாக்கு எண்ணும் அறைகளுக்கு வராததாலும், வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் எண்ணிக்கைக்கும், வாக்குப்பெட்டிகளில் இருந்த வாக்குச்சீட்டுகள் எண்ணிக்கைக்கும் வித்தியாசம் இருந்ததாலும் வாக்கு எண்ணும் பணி தாமதமாக காலை 11 மணிக்கு தொடங்கியது. வாக்கு பிரிப்பு அறை, வாக்கு எண்ணும் அறைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. ஊட்டி ஒன்றியத்தில் 35 தபால் ஓட்டுகள் பதிவாகி இருந்தது.

ஊட்டி, குன்னூர், கோத்தகிரி வாக்கு எண்ணும் மையங்களுக்கு மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேரில் சென்று வாக்குச்சீட்டுகளை பிரிப்பது, வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை பார்வையிட்டார். அப்போது கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறும்போது, நீலகிரி மாவட்டத்தில் 4 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் முடிவுகளின் முழுமையான விவரம் நள்ளிரவில் தெரியவரும். கிராம ஊராட்சி தலைவர்களின் வெற்றி விவரம் அவ்வப்போது தெரிவிக்கப்படும் என்றார்.

வாக்கு எண்ணிக்கையை அடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com