சபரிமலை வழக்கு 13-ந்தேதி முதல் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பதற்கு எதிரான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் 9 நீதிபதிகள் அமர்வில் 13-ந் தேதி முதல் விசாரிக்கப்படுகிறது.
சபரிமலை வழக்கு 13-ந்தேதி முதல் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
Published on

புதுடெல்லி,

கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு 10 முதல் 50-க்கு வயதுக்கு உட்பட்ட பெண்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, சபரிமலையில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து கடந்த 2018-ம் ஆண்டு அதிரடியாக உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி இந்திய இளம் வக்கீல்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த 5 நீதிபதிகளை கொண்ட அமர்வு, இந்த விவகாரத்தை 7 நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வுக்கு மாற்றுவதாக கடந்த நவம்பர் 14-ந்தேதி தீர்ப்பளித்தது.

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது மட்டுமின்றி, மசூதி, தர்காக்களில் முஸ்லிம் பெண்களை அனுமதிப்பது, பிற மதங்களை சேர்ந்த ஆண்களை திருமணம் செய்த பார்சி பெண்களை தங்கள் வழிபாட்டு தலங்களில் அனுமதிப்பது குறித்தும் இந்த அமர்வு விசாரிக்கும் என நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து இந்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்க 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது. இந்த அமர்வில் மேற்படி வழக்குகள் வருகிற 13-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் விசாரிக்கப்படும் என சுப்ரீம் கோர்ட்டு நேற்று அறிவித்து உள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் 2018-ம் ஆண்டு தீர்ப்பை எதிர்த்து இந்திய இளம் வக்கீல்கள் சங்கம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு 13-ந்தேதி முதல் விசாரிக்கப்படும் என கூறப்பட்டு இருந்தது.

இதில் சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது மட்டுமின்றி முஸ்லிம் மற்றும் பார்சி பெண்களுக்கு வழிபாட்டு தலங்களில் இழைக்கப்படும் சர்ச்சைக்குரிய பாகுபாடுகள் குறித்தும் விசாரிக்கப்படும் என அதில் கூறப்பட்டு இருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com