சேலம் மூக்கனேரி பகுதியில் நடைபயிற்சிக்கு செல்லும் நபர்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் - நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சேலம் மூக்கனேரி பகுதிக்கு தினமும் நடைபயிற்சிக்கு வரும் நபர்களை ஒரு கும்பல் மிரட்டி பணம் பறித்து செல்வதாகவும், இதற்கு போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Published on

சேலம்,

சேலத்தில் இருந்து கன்னங்குறிச்சிக்கு செல்லும் வழியில் மூக்கனேரி உள்ளது. மாநகராட்சி பகுதியில் உள்ள இந்த ஏரியில் தற்போது தண்ணீர் அதிகளவில் நிரம்பி கடல் போல் காட்சியளிக்கிறது. இதனால் அந்த ஏரிக்கு காலை மற்றும் மாலை வேளைகளில் சிறுவர்கள், பெரியவர்கள், முதியவர்கள் என ஏராளமானோர் நடைபயிற்சிக்கு வந்து செல்வது வழக்கம்.

மேலும், ஏரியில் மீன் பிடிக்கவும் சிலர் வருவார்கள். ஏரியை சுற்றியுள்ள கரை பகுதிகளில் பொதுமக்கள் நடந்து செல்வார்கள். மேலும் ஏரியை ஒட்டி தன்னார்வ அமைப்பு உதவியுடன் பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக பொழுது போக்கிற்காக மூக்கனேரிக்கு தினமும் பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். அவ்வாறு மாலை நேரங்களில் வரும் நபர்களிடம் அதே பகுதியை சேர்ந்த ஒரு கும்பல் மிரட்டி பணம் பறிப்பதை வழக்கமாக கொண்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் இரவு 7 மணிக்கு மேல் அந்த பகுதியில் ரவுடி கும்பல் அமர்ந்து மது அருந்துவது, சூதாடுவது போன்ற சமூக விரோத செயல்களிலும் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக நடந்து செல்லவும் மற்றும் மொபட், மோட்டார் சைக்கிளில் செல்லவும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மூக்கனேரியில் உள்ள பூங்காவிற்குள் இரவு நேரத்தில் சிலர் மது அருந்துவதை வழக்கமாக கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுமட்டுமின்றி இருசக்கர வாகனங்கள், கார்களில் செல்பவர்களை மறித்து, கொலை மிரட்டல் விடுப்பதுடன், அவர்களிடம் இருந்து பணத்தை பறிக்கும் செயலில் அந்த கும்பல் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. எனவே மூக்கனேரி பகுதிக்கு மாலை மற்றும் இரவு நேரங்களில் கன்னங்குறிச்சி போலீசார் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். பணம் பறிக்கும் கும்பலை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com