சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் ஆடித்தவசு காட்சி - திரளான பக்தர்கள் தரிசனம்

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் ஆடித்தவசு காட்சி நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் ஆடித்தவசு காட்சி - திரளான பக்தர்கள் தரிசனம்
Published on

சங்கரன்கோவில்,

உலகத்தின் உயிர்களாகிய நாம் சிவன் வேறு, விஷ்ணு வேறு என்று வேறுபடுத்துவது தவறு என்பதை பக்தர்களுக்கு உணர்த்தும் பொருட்டு சிவபெருமான் கோமதி அம்பாளுக்கு சங்கர நாராயணராகவும், சங்கரலிங்க மூர்த்தியாகவும் காட்சி கொடுக்கும் வைபவம், ஆடித்தவசு காட்சியாக பக்தர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆடித்தவசு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆடிமாதம் தொடர்ந்து 12 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஆடித்தவசு திருவிழா கடந்த 3-ந்தேதி கோமதி அம்பாள் சன்னதி முன்பு அமைந்துள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழா நாட்களில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் காலை, மாலை இருவேளைகளிலும் வீதிஉலா நடைபெற்றது. அனைத்து நாட்களிலும் கோவிலிலும், மண்டகப்படியிலும் கோமதி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கோவில் யாகசாலை மண்டபத்தில் பக்தி சொற்பொழிவுகள், தேவார இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.

முக்கிய நிகழ்ச்சியாக 9-ந் திருநாளன்று தேரோட்டம் நடந்தது. சிகர நிகழ்ச்சியான ஆடித்தவசு திருவிழா நேற்று நடந்தது. இதனை முன்னினட்டு நேற்று அதிகாலை 5 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு விளா பூஜை நடைபெற்றது. 8.30 மணிக்கு சுவாமி, அம்பாள் மற்றும் ஸ்ரீசந்திரமவுலீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனைகள் நடந்தது. பின்னர் மதியம் 12.05 மணிக்கு மேல் தெற்கு ரதவீதியில் உள்ள தவசு மண்டபத்துக்கு கோமதி அம்பாள் தங்க சப்பரத்தில் எழுந்தருளினார்.

மாலை 5 மணிக்கு மேல் சங்கர நாராயண சுவாமி, தெற்கு ரதவீதியில் உள்ள தவசுக்காட்சி கொடுக்கும் பந்தலுக்கு புறப்பட்டார். அப்போது விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளைவித்த பருத்தி, வத்தல் உள்ளிட்டைவைகளை சப்பரத்தில் எறிந்தனர். தவசு பந்தலுக்கு சுவாமி வந்தடைந்ததும், சுவாமியை, கோமதி அம்பாள் 3 முறை வலம் வந்தார். அதனை தொடர்ந்து 6.30 மணிக்கு சிவபெருமான், கோமதி அம்பாளுக்கு ரிஷப வாகனத்தில் சங்கரநாராயணராக காட்சி கொடுத்தார். அப்போது பக்தர்கள் சங்கரா, நாராயணா என்று விண்ணதிர பக்தி கோஷங்களை எழுப்பினர்.

விழாவில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ராஜா, நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீன்குமார், நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இரவு 11 மணிக்கு மேல் சங்கரலிங்க சுவாமி யானை வாகனத்தில் எழுந்தருளி தவசு காட்சிக்கு நடைபெறும் இடத்துக்கு புறப்பட்டுச் சென்றார். 12 மணிக்கு மேல் சிவபெருமான், கோமதி அம்பாளுக்கு சங்கரலிங்க சுவாமியாக காட்சி கொடுத்தார்.

விழாவையொட்டி சங்கரன்கோவில் நகர் பகுதியின் 4 புறங்களிலும் தற்காலிக பஸ்நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 60-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com