

நாங்குநேரி,
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள ஆனைகுடியை சேர்ந்தவர்கள் ஜான்சிராணி. பானுமதி. அக்காள்தங்கையான இவர்கள் இருவரும் திசையன்விளையில் உள்ள சசிகலா புஷ்பா எம்.பி. வீட்டில் வேலை பார்த்து வந்தனர். அப்போது பாலியல் கொடுமை செய்யப்பட்டதாக திசையன்விளை போலீசில் அவர்கள் புகார் கொடுத்தனர். அதன் பேரில் சசிகலா புஷ்பா எம்.பி., அவரது கணவர் லிங்கேசுவரன், தாயார் கவுரி ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு சசிகலா புஷ்பா எம்.பி. திசையன்விளை போலீசில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
மேலும் இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு கடந்த மாதம் 13ந் தேதி, மதுரை ஐகோர்ட்டு கிளையில் சகிகலா புஷ்பா எம்.பி. மனு தாக்கல் செய்தார்.
மதுரை ஜகோர்ட்டு உத்தரவுப்படி நேற்று சசிகலா புஷ்பா எம்.பி., அவருடைய கணவர் லிங்கேசுவரன், தாயார் கவுரி ஆகிய 3 பேரும் நாங்குநேரி கோர்ட்டில் ஆஜராகினர். ஜாமீன் தொடர்பான ஆவணங்களை நீதிபதியிடம் தாக்கல் செய்தனர்.
நீதிபதி விசாரித்து, இந்த வழக்கில் 7 பேர் பிணையங்களாகவும், ரூ.50 ஆயிரம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக மறு உத்தரவு வரும் வரையில் சசிகலா புஷ்பா எம்.பி., அவருடைய கணவர் லிங்கேசுவரன், தாயார் கவுரி ஆகிய 3 பேரும் திங்கட்கிழமை தோறும் நாங்குநேரி கோர்ட்டில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். நாங்குநேரி கோர்ட்டுக்கு சசிகலா புஷ்பா எம்.பி. வந்து சென்றதையொட்டி கோர்ட்டு வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.