சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: கோவில்பட்டி கிளைச்சிறையில் சி.பி.ஐ. திடீர் விசாரணை - 10 போலீசாரிடம் மனித உரிமை ஆணையம் வாக்குமூலம் பதிவு

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு தொடர்பாக கோவில்பட்டி கிளை சிறையில் சி.பி.ஐ. அதிகாரிகள் திடீர் விசாரணை நடத்தினார்கள். மேலும், மதுரை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 10 போலீசாரிடம் மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தது.
Published on

கோவில்பட்டி,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ஜெயராஜ்-பென்னிக்ஸ் ஆகியோர் கொலை வழக்கில் கைதான போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 10 போலீசார், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 5 போலீசாரை மட்டும் சி.பி.ஐ. அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்கள் 10 பேரிடம் விசாரணை மேற்கொள்ள மாநில மனித உரிமை ஆணையம் சார்பில் துணை சூப்பிரண்டு குமார் தலைமையிலான குழுவினர் நேற்று காலை மதுரை மத்திய சிறைக்கு வந்தனர். அவர்கள் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தி விட்டு வெளியே வந்தனர். அப்போது மாநில மனித உரிமை ஆணைய துணை சூப்பிரண்டு குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

சாத்தான்குளம் விவகாரத்தில் சிறையில் உள்ள 10 போலீசாரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அவர்களிடம் எழுதி வாங்கி உள்ளோம். அதனை வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டு, கையெழுத்து வாங்கப்பட்டு உள்ளது. மேலும் ஜெயராஜ்-பென்னிக்ஸ் உடல்களை பிரேத பரிசோதனை மேற்கொண்ட டாக்டர்கள் 3 பேரிடமும் விசாரணை மேற்கொண்டு உள்ளோம்.

விசாரணையில் டாக்டர்கள் கூறியதும், போலீசார் கூறிய கருத்துகளும் ஒத்துபோகிறது. விசாரணையின் போது அனைவரும் ஒத்துழைப்பு அளித்தனர். மனித உரிமை ஆணையம் தரப்பில் விசாரணை மேற்கொள்ள 8 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது. அதற்குள் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் அடைக்கப்பட்டிருந்த கோவில்பட்டி கிளைச்சிறைக்கு சி.பி.ஐ. கூடுதல் சூப்பிரண்டு விஜயகுமார் சுக்லா, இன்ஸ்பெக்டர்கள் அனுராக் சின்கா, பூரண் குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுசில்குமார் வர்மா, சச்சின், சி.பி.ஐ. போலீசார் அஜய்குமார், சைலேந்திர குமார், பவன்குமார், திரிபாதி ஆகியோர் நேற்று இரவு 7 மணி அளவில் திடீரென்று வந்தனர்.

அவர்கள் சிறையில் தந்தை, மகன் அடைக்கப்பட்டிருந்தபோது பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்தனர். கடந்த மாதம் 20-ந் தேதி ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் சிறைக்கு அழைத்து வரப்பட்டபோது அவர்களுக்கு காயங்கள் ஏதும் இருந்ததா? என விசாரணை நடத்தினர். மேலும், சிறை சூப்பிரண்டு, வார்டன்களிடமும் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது அவர்களுடன் இருந்த கைதிகளிடமும் விசாரணை நடத்தினர். சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவர் கள் கார்களில் புறப்பட்டு சென் றனர். கோவில்பட்டி கிளை சிறையில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று இரவு திடீரென்று விசாரணை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com