சாத்தான்குளம் சம்பவம்: சி.பி.சி.ஐ.டி. விசாரணை தொடங்கியது

சாத்தான்குளம் சம்பவத்தில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை நேற்று தொடங்கியது.
Published on

நெல்லை,

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பான வழக்கு மதுரை ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு ஆஜரானார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றும் வரை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். இதையடுத்து கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபுவிடம் ஒப்படைக்கப்பட்டது.

பின்னர் அவர் மதுரையில் இருந்து பாளையங்கோட்டையில் உள்ள நெல்லை சரக டி.ஐ.ஜி. அலுவலகத்துக்கு வந்தார். அங்கு டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபுநபு, சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு அனில்குமாரிடம் சாத்தான்குளத்தில் வியாபாரிகள் இறந்தது தொடர்பான முக்கிய ஆவணங்களை ஒப்படைத்தார். அதை பெற்றுக்கொண்டு துணை போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார் விசாரணையை தொடங்க தூத்துக்குடிக்கு புறப்பட்டார்.

அப்போது அவர் கூறுகையில், சாத்தான்குளம் வியாபாரிகள் இறந்தது தொடர்பான ஆவணங்களை டி.ஐ.ஜி. என்னிடம் கொடுத்தார். இதுதொடர்பான ஆவணங்களை நாங்கள் சேகரித்து வருகிறோம். கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டிடம் சில ஆவணங்களை கேட்டு இருக்கிறோம். அவர் தூத்துக்குடிக்கு வந்து தருவதாக கூறி இருக்கிறார். இந்த வழக்கை 4 இன்ஸ்பெக்டர் உள்பட 30 பேர் கொண்ட குழு விசாரணை நடத்த முடிவு செய்து இருக்கிறோம். 6 குழுக்களாக பிரிந்து விசாரணை நடத்துவோம் என்றார்.

பின்னர் துணை போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார் தலைமையிலான குழுவினர் தூத்துக்குடிக்கு புறப்பட்டு சென்றனர். நேற்று இரவு தூத்துக்குடி சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு வந்த அவர் விசாரணையை தொடங்கினார்.

இதையடுத்து வழக்கு விசாரணைக்காக சென்னையில் இருந்து சி.பி.சி.ஐ.டி. டி.ஐ.ஜி. சங்கர், போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் ஆகியோர் விமானம் மூலம் இன்று (புதன்கிழமை) தூத்துக்குடி வருகின்றனர். அவர்கள் சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரி, போலீஸ் நிலையம், ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரது கடைகள் மற்றும் கோவில்பட்டியில் அவர்கள் இருந்த சிறை அறைகள், கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரி உள்ளிட்ட சம்பவ நிகழ்விடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து தடயங்களை சேகரிக்கின்றனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்த உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com