அறிவியல் ரீதியான சிந்தனை மாணவர்களுக்கு அவசியம் - மயில்சாமி அண்ணாத்துரை பேச்சு

மாணவர்களுக்கு அறிவியல் ரீதியான சிந்தனை அவசியம் என்று திண்டுக்கல்லில் நடந்த புத்தக திருவிழாவில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாத்துரை பேசினார்.
Published on

திண்டுக்கல்,

திண்டுக்கல் இலக்கிய களம் சார்பில், திண்டுக்கல் டட்லி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த 28-ந்தேதி புத்தக திருவிழா தொடங்கியது. இதையொட்டி நேற்று காலை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் அறிவியல் கருத்தரங்கு நடந்தது. இதில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாத்துரை கலந்து கொண்டு, சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம் எனும் தலைப்பில் பேசியதாவது:-

இந்தியாவுக்கு முன்னதாக மற்ற நாடுகள் நிலவுக்கு 69 முறை செயற்கைக்கோள்களை அனுப்பின. ஆனால், நிலவை முழுமையாக ஆராய்ச்சி செய்ய முடியவில்லை. மேலும் அமெரிக்கா 5 முறையும், ரஷியா 9 முறையும் முயன்ற பின்னர் தான் வெற்றி கண்டன. ஆனால், இந்தியா கடந்த 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 22-ந்தேதி அனுப்பிய சந்திரயான்-1 முதல் முயற்சியில் வெற்றி பெற்றது.

எனவே, மாணவர்களும் பாடங்களை முழுமையாக ஆராய்ந்து படித்தால் மட்டுமே வெற்றிபெற முடியும். ஆதிகாலத்தில் மனிதன் உடல் வலிமை மிக்கவனாய் இருந்தான். பின்னர் பரிணாம வளர்ச்சியால் மூளையின் செயல்பாடு மாறியது. மேலும், மனித செயல்பாடுகளை எளிதாக்க, அறிவியல் ரீதியான சிந்தனைகளை பெருக்கினான். ஒவ்வொரு துறையிலும் அறிவியல் ரீதியாக, மாணவர்கள் சிந்திக்க வேண்டும்.

அதன்மூலம் அறிவாற்றல் பெருகுவதோடு பல்வேறு கேள்விகளும் எழும். அந்த கேள்விக்கான தேடலுக்கு, மூளைக்கு வேலை கொடுங்கள். அந்த பழக்கத்தை சிறு வயதில் இருந்தே வளர்க்க வேண்டும். பூமி சுழன்று கொண்டே இருப்பதால் பகல், இரவு வருகிறது. எனவே, மாற்றம் ஒன்று தான் நிலையானது. அந்த மாற்றங்கள் நமக்குள் நிகழ செய்ய வேண்டும். அது உங்களின் அறிவை பெருக்க உதவும்.

ஒரு ராக்கெட்டின் வெற்றி என்பது, சரியான திசை, சரியான நேரம், சரியான வேகத்தை பொறுத்தே அமைகிறது. அதையே அடிப்படையாக கொண்டு, கிடைக்கும் வாய்ப்புகளை சரியான பாதையில், சரியான நேரத்தில், சரியான முயற்சி செய்தால் வாழ்வில் நிச்சயமாக வெற்றி பெறலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் திண்டுக்கல் இலக்கிய கள நிர்வாகிகள், தமிழ்நாடு அறிவியல் இயக்க நிர்வாகிகள், மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த புத்தக திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு வரை நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com