சமூக இடைவெளியுடன் வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருக்கை ஒதுக்கீடு பயணிகள் வலியுறுத்தல்

மதுரையில் இருந்து விழுப்புரம் வரை இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் சமூக இடைவெளியை பின்பற்றி இருக்கை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Published on

மதுரை,

கொரோனா ஊரடங்கால், கடந்த 75 நாட்களுக்கும் மேலாக ரெயில்கள் இயக்கப்படவில்லை. இதற்கிடையே மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள், உணவுப்பொருள்களுக்காக சென்னையில் இருந்து மதுரை வழியாக நெல்லை மற்றும் நாகர்கோவிலுக்கு சிறப்பு பார்சல் ரெயில்கள் இயக்கப்பட்டன. அதேபோல, சரக்கு ரெயில்கள் மட்டும் முழுமையாக இயக்கப்பட்டன. இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டது. இதையடுத்து, மதுரையில் இருந்து விழுப்புரம் வரை பயணிகளுக்கான சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

மதுரையில் இருந்து சென்னை வரை இயக்கப்பட்ட வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் தற்போது விழுப்புரம் வரை சிறப்பு ரெயிலாக இயக்கப்படுகிறது. இந்த ரெயிலில் 15 இரண்டாம் வகுப்பு உட்காரும் வசதி கொண்ட பெட்டிகளும், 3 உட்காரும் வசதி கொண்ட குளிரூட்டப்பட்ட பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளன.

காற்றில் பறக்கிறது

2-ம் வகுப்பு பெட்டியில் 108 இருக்கைகளும், குளிரூட்டப்பட்ட பெட்டியில் 80 இருக்கைகளும் உள்ளன. இந்த ரெயிலில் தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பயணிகள் சென்று வருகின்றனர். சுமார் 1,500 பயணிகள் செல்ல வேண்டிய ரெயிலில் மூன்றில் ஒரு பங்கு பயணிகள் மட்டுமே பயணம் செய்கின்றனர். இருப்பினும் சமூக இடைவெளி பின்பற்றாமல் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. அதாவது, ரெயிலுக்கான முன்பதிவை பொறுத்தமட்டில், அனைத்து இருக்கைகளுக்கும் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது.

இதனால் 3 பேர் செல்ல வேண்டிய இருக்கையில் ஒரு நபர் மட்டும் உட்கார்ந்து செல்வது சாத்தியமில்லாமல் உள்ளது. ஜன்னலோர இருக்கைகளுக்கு மட்டும் முன்பதிவு செய்ய முடியும் என கம்ப்யூட்டர் சாப்ட்வேரில் திருத்தம் செய்தால் மட்டுமே சமூக இடைவெளி சாத்தியமாகும். தற்போது, 4 பெட்டிகளில் அனைத்து பயணிகளும் அருகருகே உட்கார்ந்து பயணம் செய்ய வேண்டியுள்ளது.

கொரோனா பரவும்

பிற பெட்டிகள் முழுவதும் காலியாக செல்கிறது. ஒரே பெட்டியில் அனைத்து பயணிகளும் பயணம் செய்வதால், கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளது. முன்பதிவுக்கான சாப்ட்வேரில் சிறிய திருத்தம் செய்தால் பயணிகள் சமூக இடைவெளியை பின்பற்றி உட்காரும் வகையில் இருக்கை கிடைக்க வாய்ப்புள்ளது.

ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்தாலும், பயணிகளின் பயண விவர அட்டைப்படி டிக்கெட் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மதுரை கோட்ட ரெயில்வேயை பொறுத்தமட்டில், டிக்கெட் பரிசோதகர்கள் விரும்பினால் மட்டுமே வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் பணி ஒதுக்கப்படுகிறது.

அச்சத்தில் பயணிகள்

ஆனால், ஒரே இடத்தில் அதிக பயணிகள் இருப்பதால் அச்சத்துடன் பணியாற்ற வேண்டிய சூழல் உள்ளது. அத்துடன் ரெயில் நிலைய பிளாட்பாரங்களிலும் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை செய்ய வேண்டியுள்ளது. இதற்கிடையே, இந்த ரெயிலில் விழுப்புரத்தில் ஏறும் பயணிகளில் பெரும்பாலானோர் சென்னையில் இருந்து வருவதாக தெரிவிக்கின்றனர். இது சக பயணிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து ரெயில்வே நிர்வாகத்துக்கு பயணிகள் புகார்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, மதுரையில் இருந்து விழுப்புரம் வரை இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் இருக்கை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று பயணிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com