பாதுகாப்பு குளறுபடி: இங்கிலாந்து மந்திரிகள் தொலைபேசி எண்கள் கசிந்ததால் சர்ச்சை

பாதுகாப்பு குளறுபடி காரணமாக, இங்கிலாந்து மந்திரிகளின் தொலைபேசி எண்கள் கசிந்ததால் சர்ச்சை எழுந்துள்ளது.
Published on

லண்டன்,

இங்கிலாந்து நாட்டை ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் மாநாட்டையொட்டி மூத்த மந்திரிகள், முன்னாள் மந்திரிகள், எம்.பி.க்கள் ஆகியோரின் தனிப்பட்ட தொலைபேசி எண்கள், அந்தரங்க தகவல்களை கொண்டு ஒரு மொபைல் செயலி உருவாக்கி உள்ளனர்.

ஆனால் அந்த செயலியில் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்கள் இப்போது சர்வ சாதாரணமாக எல்லோருக்கும் கிடைக்கிற நிலை உருவாகி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு காரணம் மொபைல் செயலியின் பாதுகாப்பு குளறுபடிகள்தான் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

பொதுமக்கள் தங்கள் இ-மெயில் முகவரியை பயன்படுத்தி, கன்சர்வேடிவ் கட்சியின் அத்தனை பிரபலங்களின் அந்தரங்க தகவல்களையும் பெற முடிகிறதாம்.

முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி போரிஸ் ஜான்சன், வாழ்க்கை குறிப்புகள், அவரது பதவி பெயர் அவமதிக்கும் விதத்தில் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக டுவிட்டர் உபயோகிப்பாளர்கள் பலரும் தகவல் தெரிவித்துள்ளனர்.

சுற்றுச்சூழல் மந்திரி மைக்கேல் கோவின் புகைப்படத்துக்கு பதிலாக ஊடக அதிபர் ரூபர்ட் முர்டோச்சின் படத்தை யாரோ மாற்றி வைத்துள்ளனர். இந்த ரூபர்ட் முர்டோச்சிடம் மந்திரி மைக்கேல் கோவ் பத்திரிகையாளராக பணியாற்றி இருக்கிறார்.

பல எம்.பி.க்களுக்கு தேவையற்ற தொலைபேசி அழைப்புகள் வந்து, அவை இடையூறாக அமைந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த பிரச்சினையை டான் பாஸ்டர் என்ற கட்டுரையாளர்தான் கண்டுபிடித்து அம்பலப்படுத்தி உள்ளார்.


Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com