சேந்தமங்கலம், பள்ளிபாளையம், குமாரபாளையத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழை - மின்கம்பம், மரங்கள் சாய்ந்தன

சேந்தமங்கலம், பள்ளி பாளையம், குமாரபாளையம் பகுதிகளில் நேற்று சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் மின்கம்பம், மரங்கள் சாய்ந்தன. இதுபற்றிய விவரம் வருமாறு:-
சேந்தமங்கலம், பள்ளிபாளையம், குமாரபாளையத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழை - மின்கம்பம், மரங்கள் சாய்ந்தன
Published on

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் மற்றும் காளப்பநாயக்கன்பட்டி பகுதிகளில் நேற்று மாலை 5.30 மணியளவில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. அப்போது இடி, மின்னலும் ஏற்பட்டது. அந்த மழையால் ரோட்டில் நீர் வெள்ளமாக சென்றது.

காளப்பநாயக்கன்பட்டியில் இருந்து கொல்லிமலைக்கு செல்லும் பிரதான சாலையில் காற்று பலமாக வீசியது. அப்போது அங்குள்ள 7-வது வார்டு பகுதியில் ரோட்டு ஓரம் நின்ற வேப்பமரம் திடீரென்று முறிந்து விழுந்தது. அந்த மரம் அருகில் இருந்த மின் வயர் மீது விழுந்ததால் அங்கிருந்த மின்சார கம்பமும் முறிந்து விழுந்தது. இதை கண்டு அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து மின்சாரத்துறை மற்றும் நெடுஞ்சாலை துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் அந்த துறை பணியாளர்கள் விரைந்து வந்து ரோட்டின் குறுக்கே கிடந்த வேப்ப மரம் மற்றும் மின் கம்பத்தை அப்புறப்படுத்தினர். இதனால் நேற்று மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை அவ்வழியே 4 சக்கர வாகனங்கள் எதுவும் செல்ல முடியவில்லை. மாற்று வழியில் அவை சென்று வந்தன. சுமார் 2 மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மழை காரணமாக குப்பநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது.

பள்ளிபாளையத்தில் நேற்று மாலை 6 மணியளவில் சூறைக்காற்று வீசியது. சுமார் அரைமணிநேரம் வீசிய காற்றில் பஸ் நிலைய ரோட்டில் கடைகள் முன்பு போடப்பட்டிருந்த தார்ப்பாய், மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன. பெரிய போர்டுகளும் சேதம் அடைந்தன. அப்போது லேசான சாரல் மழையும் பெய்தது.

குமாரபாளையத்தில் மாலை 5 மணியளவில் பலத்த சூறைக்காற்று வீசியது. இதனால் குமாரபாளையம் பவர்அவுஸ், ஆனங்கூர் பிரிவு ரோடு, மேற்கு காலனி, காவிரி நகர் பகுதிகளில் மரங்கள் சாய்ந்தன. மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. மேலும் அந்த பகுதியில் லேசான சாரல் மழையும் பெய்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com