அரவக்குறிச்சி தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் இடப்பற்றாக்குறை தேர்தல் அதிகாரியிடம் செந்தில்பாலாஜி புகார்

அரவக்குறிச்சி தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் இடப்பற்றாக்குறை உள்ளது என்று தேர்தல் அதிகாரியிடம், தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜி புகார் மனு கொடுத்தார்.
Published on

கரூர்,

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு எந்திரங்கள், வி.வி.பேட் எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான கரூர் தளவாப்பாளையம் குமாரசாமி பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைத்து சீல் வைக்கப்பட்டுள்ளது.

நாளை மறுநாள் (வியாழக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்தநிலையில் வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடு ப ணிகள் குறித்து தேர்தல் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க.வேட்பாளர் வி.செந்தில்பாலாஜி, கரூர் தளவாப்பாளையம் பொறியியல் கல்லூரியில் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்திற்காக ஒதுக்கப்பட்ட அறையை பார்வையிட்டார். அப்போது அந்த அறை மிகச்சிறியதாக இருந்தது.

இதுகுறித்து வி.செந்தில்பாலாஜி, அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மீனாட்சியிடம் புகார் மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

அரவக்குறிச்சி தொகுதியில் மொத்தம் 63 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த நிலையில் அரவக்குறிச்சி தொகுதி வாக்கு எண்ணும் பணிக்கு ஒதுக்கப்பட்டுள்ள அறை மிகச்சிறியதாக உள்ளது.

இதனால் அங்கு வேட்பாளர்களின் முகவர்கள், ஊழியர்கள் யாரும் நிற்க முடியாத அளவுக்கு இடப்பற்றாக்குறை உள்ளது. எனவே பெரிய அறையோ அல்லது இடவசதி உள்ள அறைகளையோ ஒதுக்கி வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com