புதுடெல்லி,
முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் நேற்று மாரடைப்பினால் காலமானார். அவருக்கு வயது 86. கேரளாவின் பாலக்காட்டில் திருநெல்லை என்ற கிராமத்தில் கடந்த 1932ம் ஆண்டு டிசம்பர் 15ந்தேதி பிறந்த டி.என். சேஷன் கடந்த 1990 மற்றும் 1996 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் நாட்டின் 10வது தலைமை தேர்தல் ஆணையராக பதவி ஏற்று கொண்டார்.
நாட்டின் தேர்தல் முறைகளில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்தவர் என்ற பெருமைக்கு உரியவர். உள்ளூர் குண்டர்களை ஒடுக்கவும் மற்றும் ஓட்டு பெட்டிகள் திருடு போவது போன்ற செயல்களை தடுக்கும் வகையிலும் மத்திய போலீஸ் படையை அனுப்பியவர். தேர்தலில் மதம் சார்ந்த பிரசாரத்திற்கும் தடை விதித்தவர்.
இவர் தலைமை தேர்தல் ஆணையராக பதவி வகித்தபோதுதான், வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் நடைமுறை தொடங்கியது. அதேபோல், ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் செலவு செய்ய வேண்டிய அதிகபட்ச தொகை குறித்த கட்டுப்பாடும் இவரது பதவி காலத்திலேயே விதிக்கப்பட்டது.
வாக்குகளை வாங்குவது தடுக்கப்படும் வகையில் கடுமையான நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார். தேர்தல் செவினங்கள் பற்றிய முழு கணக்குகளை வேட்பாளர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்ற நடைமுறையையும் அமல்படுத்தினார்.
தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்தி அரசியல் கட்சிகளுக்கு கட்டுப்பாட்டினை கொண்டு வந்தவர். இவரது காலத்தில் கள்ள ஓட்டுப்பதிவு பெருமளவில் தவிர்க்கப்படுவது உறுதி செய்யப்பட்டது. இந்த சீர்திருத்த நடைமுறைகள் இவர் பதவியேற்பதற்கு முன்பு வரை அமலில் இல்லை.
இதனால் சேஷன் ஆணவமுடன் செயல்படுகிறார் என மறைந்த அ.தி.மு.க. பொது செயலாளர் மற்றும் முன்னாள் முதல் அமைச்சரான ஜெயலலிதா அவரை கடுமையாக சாடினார்.
தேர்தல் சீர்திருத்தங்களை தைரியமுடன் நடைமுறைப்படுத்திய பெருமைக்கு உரியவராக திகழ்ந்தவர் டி.என். சேஷன் ஆவார்.
இந்நிலையில், உடல்நல குறைவு ஏற்பட்ட நிலையிலும் வீட்டில் இருந்தபடி, தனது வாழ்க்கை பயணம் மற்றும் அவர் அறிந்த நபர்கள் மற்றும் பணியாற்றிய காலத்தில் நடந்த நிகழ்வுகள் ஆகியவற்றை பற்றி ஆர்வமுடன் எழுதி வந்துள்ளார். எனினும் அது முழுமையடையவில்லை என சேஷனின் மகள் ஸ்ரீவித்யா கூறியுள்ளார்.
இவர் அரசு பணியில் சிறப்புடன் பணியாற்றியதற்காக கடந்த 1996ம் ஆண்டு ரமோன் மகசேசே விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.
ஓய்வுக்கு பின்னர் கடந்த 1997ம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தலில் கே.ஆர். நாராயணனுக்கு எதிராக போட்டியிட்டு தோல்வியுற்றார். கடந்த 1999ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வின் மூத்த தலைவரான எல்.கே. அத்வானிக்கு எதிராக குஜராத்தின் காந்திநகரில் போட்டியிட்டார். எனினும் அந்த தேர்தலில் சேஷன் தோற்று போனார்.