குடியுரிமை திருத்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு: வட கிழக்கு மாநிலங்களில் முழு அடைப்பு - இயல்பு வாழ்க்கை பாதிப்பு

குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வட கிழக்கு மாநிலங்களில் முழு அடைப்பு நடைபெற்றது. அங்கு இயல்பு வாழ்க்கை பாதித்தது.
Published on

கவுகாத்தி,

பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி, இந்தியாவில் தஞ்சம் புகுந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்தியில் உள்ள பாரதீய ஜனதா அரசு குடியுரிமை திருத்த மசோதா கொண்டு வந்துள்ளது. இந்த மசோதா நாடாளுமன்ற மக்களவையில் நேற்று முன்தினம் நிறைவேறியது.

இந்தியாவில் தஞ்சம் புகுந்தவர்களில் பெரும்பாலோர் வடகிழக்கு மாநிலங்களில் குடியேறி உள்ளனர். இவர்களுக்கு குடியுரிமை வழங்குகிறபோது, தங்கள் நலன் பாதிக்கப்படும் என அந்த மாநில மக்கள் எதிர்க்கின்றனர். இருப்பினும் இந்த மசோதா வரம்பில் இருந்து அசாம், மேகாலயா, மிஜோரம், திரிபுரா ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் பழங்குடியினர் வசிக்கிற வரம்புக்கு உட்பட்ட பகுதிகளில் விலக்கு தரப்பட்டுள்ளது.

இதே போன்று அருணாசல பிரதேசம், நாகலாந்து, மிஜோரம் ஆகிய மாநிலங்களில் நுழைவு அனுமதி மூலம் பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கும் விலக்கு தரப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்துக்கும் கலாசார பாதுகாப்பு அடிப்படையில் விலக்கு தரப்படுகிறது.

இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அசாம், வட கிழக்கு மாநிலங்களில் நேற்று முழு அடைப்பு நடத்துவதற்கு அனைத்து இந்திய மாணவர்கள் அமைப்பு, வடகிழக்கு மாணவர்கள் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் அழைப்பு விடுத்திருந்தனர்.

அசாமில் முழு அடைப்பால் இயல்பு வாழ்க்கை முடங்கிப்போனது. கடைகள், வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன. ஒரு ஸ்கூட்டர் தீயிட்டு கொளுத்தப்பட்டது. கல்வி நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. பல்கலைக்கழக தேர்வுகள், முழு அடைப்பால் ஒத்தி போடப்பட்டன.

பல இடங்களில் கண்டன பேரணிகள் நடந்தன.

கவுகாத்தியில் சட்டசபை வளாகம், தலைமைச் செயலகம் அமைந்துள்ள பகுதியில் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

மாநிலம் முழுவதும் ரெயில் சேவை பாதித்தது.

தனியார், பொது போக்குவரத்து வாகனங்கள் இயங்காததால் சாலைகள் வெறிச்சோடின. அரசு பஸ்கள் ஓடின.

கவுகாத்தி பல்கலைக்கழகம், காட்டன் பல்கலைக்கழகம், அசாம் விவசாய பல்கலைக்கழகம் ஆகியவற்றை சேர்ந்த மாணவர்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

நெடுஞ்சாலைகளில் போராட்டக்காரர்கள் டயர்களை எரித்து போட்டனர். நடிகர், நடிகைகள் உள்ளிட்ட கலைத்துறையினர் பேரணி நடத்தினர்.

வங்காள மக்கள் ஆதிக்கம் மிகுந்த பராக் பள்ளத்தாக்கு பகுதியில் முழு அடைப்பின் தாக்கம் இல்லை.

மணிப்பூர்

மணிப்பூரில் தொடர்ந்து 3-வது நாளாக நேற்று போராட்டங்கள் நடந்தன. கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், எண்ணெய் கிடங்குகள், வங்கிகள் மூடிக்கிடந்தன. மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக்கிடந்ததால் வீதிகள் வெறிச்சோடின.

மணிப்பூரில் நுழைவு அனுமதி மூலம் பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு மசோதாவில் விலக்கு அளிக்கப்பட்டதை கொண்டாடும் வகையில் நேற்று ஒரு நாள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

திரிபுரா

திரிபுராவிலும் பல இடங்களில் நேற்று போராட்டம் நடந்தது. மனுகாட் பகுதியில் திறந்திருந்த கடைகள் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். கடைகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இந்த வன்முறையில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

நூற்றுக்கணக்கான பழங்குடியினர், மசோதாவை எதிர்த்து கண்டன பேரணி நடத்தினர். பல இடங்களில் போராட்டங்களில் வன்முறை வெடித்ததாக தகவல்கள் கூறுகின்றன. ரெயில் போக்குவரத்து நடைபெறவில்லை. சாலை போக்குவரத்தும் பெருமளவில் பாதித்தது.

மேகாலயா

மேகாலயாவிலும் மாணவர்கள் அமைப்பினரின் அழைப்பால் முழு அடைப்பு நடைபெற்றது. அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள் திறக்கவில்லை. நெடுஞ்சாலைகள் போக்குவரத்து இன்றி முடங்கின.

மேகாலயாவில் பாரதீய ஜனதா ஆதரவை பெற்றுள்ள ஆளும் மேகாலயா ஜனநாயக கூட்டணி அரசு, மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com