கப்பலில் ‘தீ’ விபத்து; கடலில் குதித்ததால் ஒருவர் சாவு - 13 பேர் படுகாயம்; ஒருவர் மாயம்

விசாகப்பட்டணம் துறைமுகத்தில் கப்பலில் ‘தீ’ விபத்து ஏற்பட்டது. அந்த கப்பலில் இருந்து கடலில் குதித்ததால் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 13 பேர் படுகாயம் அடைந்தனர். அதில் ஒருவர் மாயமாகி உள்ளார்.
Published on

விசாகப்பட்டணம்,

ஆந்திராவின் விசாகப்பட்டணம் துறைமுகத்தில் பணியில் இருந்த இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தின் இழுவை கப்பல் ஒன்று, நேற்று காலையில் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை ஏற்றிக்கொண்டு கடலில் சென்று கொண்டிருந்தது. 29 பேருடன் சென்ற இந்த கப்பல் ஆழ்கடலில் சென்றபோது திடீரென அதில் தீப்பிடித்தது.

இதில் 13 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. எனவே மீதமுள்ளவர்கள் அனைவரும் தீயில் இருந்து தங்களை காத்துக்கொள்வதற்காக கடலில் குதித்தனர். இந்த விபத்து குறித்து உடனடியாக கடலோர காவல் படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

உடனே அங்கு விரைந்து வந்த அவர்கள், கப்பலில் பிடித்த தீயை அணைத்தனர். மேலும் காயமடைந்த 13 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இதைப்போல கடலில் தத்தளித்தவர்களையும் அவர்கள் மீட்டனர். எனினும் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார். மற்றொருவர் மாயமாகி உள்ளார்.

உயிரிழந்தவரின் உடலை மீட்ட கடலோர காவல்படையினர், மாயமானவரை தேடும் பணியை முடுக்கி விட்டுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து தெரியவில்லை. அது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com