ஊத்துக்கோட்டை,
ஊத்துக்கோட்டை நகர எல்லையில் ஆரணி ஆறு பாய்கிறது. மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போது வாகன போக்குவரத்து ரத்து செய்யப்படும். இதனை கருத்தில் கொண்டு உயர் மட்ட மேம்பாலம் அமைக்க தமிழக அரசு ரூ.28 கோடி ஒதுக்கியது. ஈரோட்டை சேர்ந்த நிறுவனத்துக்கு பாலம் அமைக்கும் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேம்பாலம் 452 மீட்டர் நீளத்தில் 11 மீட்டர் அகலத்தில் கட்டப்பட உள்ளது. மேம்பாலம் மீது பொதுமக்கள் நடந்து செல்ல ஏதுவாக இரு புறங்களிலும் நடைபாதை அமைய உள்ளது.
தரை மட்டத்தில் இருந்து 20 அடி உயரத்தில் அமைய உள்ள மேம்பாலத்தை 19 தூண்கள் தாங்கி நிற்கும். பாலத்தின் இரு புறங்களில் 400 மீட்டர் தூரத்துக்கு சாலை அமைக்க உள்ளனர். மேம்பாலப்பணிகள் கடந்த நவம்பர் மாதம் தொடங்கி இரவு, பகலாக நடைபெற்று வருகின்றன.
பாலத்தின் வடபுறத்தில் மின்கம்பங்கள் உள்ளன. இதில் இருந்து வரும் மின்வயர்கள் பாலத்தின் மீது தொங்கி கொண்டு செல்கின்றன. இதனால் மேம்பால பணிகளை தொடரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மின்கம்பங்கள் மற்றும் மின்வயர்களை அகற்றினால்தான் மேம்பாலப்பணிகளை தொடர முடியும் நிலை ஏற்பட்டுள்ளது.
மின்கம்பங்களை அகற்றக்கோரி மேம்பாலம் அமைக்கும் நிறுவனம் மின்சார வாரியத்துக்கு 3 மாதங்களுக்கு முன்னர் கோரிக்கை மனு அளித்தும் அதிகாரிகள் இது வரை எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் மேம்பாலம் அமைக்கும் பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. மின்வாரிய அதிகாரிகள் மின்கம்பம் மற்றும் மின் வயர்களை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.