உலகளவில் 3,226 மொழிகள் அழியும் அபாயம்

ஒரு மொழி அழிவது என்பது வெறும் சொற்களின் அழிவல்ல; அது அந்த இனத்தின் கலாசாரம், வரலாறு மற்றும் வாழ்வியல் அடையாளங்களின் அழிவு என்பதை மறந்துவிடக்கூடாது.
3,226 மொழிகள் அழியும் அபாயம்
Published on

சென்னை,

உலகளவில் அழியும் நிலையில் 3,226 மொழிகள் உள்ளன என்று எத்னலாக் என்ற அமைப்பு 2026-ம் ஆண்டு வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7,170 வாழும் மொழிகள்

உலகளவில் மொழிகள் குறித்து துல்லியமான ஆய்வுகளை 'எத்னலாக்' என்ற அமைப்பு வழங்கி வருகிறது. அதன்படி 2026-ம் ஆண்டுக்கான தரவுகள் வெளியிடப்பட்டதில், உலகளவில் 7,170 மொழிகள் பயன்பாட்டில் இருப்பதாக கணக்கிடப்பட்டு இருக்கிறது. உலகெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான மொழியியலாளர்கள், கள ஆய்வாளர்கள், அரசு மக்கள் தொகை கணக்கெடுப்புகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சி முடிவுகளை தொகுத்து இந்த தரவுகளை வெளியிடுகிறது.

149 கோடி மக்கள் பேசும் மொழி ஆங்கிலம்

அந்த வகையில் உலகளவில் அதிக மக்களால் பேசப்படும் மொழிகள் பட்டியலில் ஆங்கிலம் முதலிடத்தில் இருக்கிறது. இந்த மொழியை உலகம் முழுவதும் சுமார் 149 கோடி மக்கள் பேசுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கடுத்ததாக மாண்டரின் சீனம் மொழி உள்ளது. இதனை 118 கோடி மக்கள் பேசுகிறார்கள்.

61 கோடி மக்கள் பேசும் மொழி இந்தி

உலகளவில் அதிக மக்களால் பேசப்படும் மொழிகள் பட்டியலில் 3-வது இடத்தில் இந்தி மொழி இடம் பெற்றிருக்கிறது. இந்த மொழியை 61.1 கோடி மக்கள் பேசுவதாக சொல்லப்பட்டிருக்கிறது.

8.6 கோடி மக்கள் பேசும் மொழி தமிழ்

உலகளவில் அதிக மக்களால் பேசப்படும் மொழிகள் பட்டியலில் முதல் 20 மொழிகளில் இந்திய மொழிகள் வலுவான இடத்தை பிடித்திருக்கின்றன. அதில் வங்காள மொழி 7-வது இடத்திலும் (27.4 கோடி மக்கள்), மராத்தி 16-வது இடத்திலும், தெலுங்கு மொழி 18-வது இடத்திலும் உள்ளது. மேலும் தமிழ் மொழியை பொறுத்தவரையில் இந்த பட்டியலில் 24-வது இடத்தில் இடம் பெற்றுள்ளது. 8.6 கோடி மக்கள் தமிழ் மொழியை பேசுகிறார்கள்.

3 வகையான மொழிகள்

உலகளவில் பயன்பாட்டில் உள்ள 7,170 மொழிகளை 3 முக்கிய பிரிவுகளாகவும் எத்னலாக் அமைப்பு வகைப்படுத்தி இருக்கிறது. நிறுவன மொழிகள், நிலையான மொழிகள், அழிந்து வரும் மொழிகள் என அதனை 3 விதமாக வகைப்படுத்தி உள்ளது.

உலகளவில் 3,226 மொழிகள் அழியும் அபாயம்

அதன்படி 482 மொழிகள் அரசு, ஊடகம் மற்றும் கல்வி நிறுவனங்களால் அதிகாரப்பூர்வமாக பாதுகாக்கப்பட்டு வலுவாக இருப்பதை நிறுவன மொழிகள் என சுட்டிக்காட்டுகின்றன. இதேபோல் 3,462 மொழிகள் நிறுவன ஆதரவு இல்லாவிட்டாலும், வீடுகளிலும், சமூகங்களிலும் அடுத்த தலைமுறைக்கு இயல்பாக கொண்டு செல்லப்படுகின்றன. அதனை நிலையான மொழிகள் என்று சொல்கிறார்கள். அடுத்ததாக, அடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்லப்படாத 3,226 மொழிகள் அழிந்து வரும் அபாயத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

துடிப்புள்ள வாழும் மொழி தமிழ்

எத்னலாக் அமைப்பின் இந்த ஆய்வுத் தரவுகள் உலக அரங்கில் இந்திய மொழிகளின், குறிப்பாக இந்தி மற்றும் தமிழ் மொழிகளின் ஆதிக்கத்தையும் பெருமையையும் பறைசாற்றுகின்றன. 8.6 கோடிக்கும் அதிகமான மக்களால் பேசப்பட்டு, உலகளவில் 24-வது இடத்தைப் பிடித்துள்ள தமிழ் மொழி, காலத்தைத் தாண்டி இன்றும் ஒரு நிறுவன மொழியாகவும், துடிப்புள்ள வாழும் மொழியாகவும் விளங்குவது ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் பெருமிதமான விஷயமாகும்.

கவலைக்குரிய ஒன்று

இருப்பினும் இந்த ஆய்வறிக்கை நமக்கு ஒரு முக்கியமான எச்சரிக்கையையும் விடுக்கிறது. உலகில் 3,226 மொழிகள் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படாமல் அழியும் அபாயத்தில் இருப்பது கவலைக்குரிய ஒன்றாகும். ஒரு மொழி அழிவது என்பது வெறும் சொற்களின் அழிவல்ல; அது அந்த இனத்தின் கலாசாரம், வரலாறு மற்றும் வாழ்வியல் அடையாளங்களின் அழிவு என்பதை மறந்துவிடக்கூடாது.

X

Daily Thanthi
www.dailythanthi.com