மகளிர் பிரீமியர் லீக் வரலாற்றில் புதிய சாதனை: 15 வயதிலேயே டெல்லி அணிக்கு தேர்வான இளம் புயல்... யார் இந்த உமா காஷ்வி?

மகளிர் பிரீமியர் லீக் (WPL) 2027 ஏலத்தில் டெல்லி அணி அவரை ரூ.10 லட்சத்துக்கு வாங்கியுள்ளது.
உமா காஷ்வி
Published on: 

கொச்சி,

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் 15 வயதிலேயே இடம் பிடித்து உமா காஷ்வி வியக்க வைத்துள்ளார்.

டெல்லி அணி

இந்திய கிரிக்கெட்டில் இளம் வயதிலேயே பல திறமைகள் உருவாகி வருகின்றன. அந்த வரிசையில், கர்நாடகாவை சேர்ந்த 15 வயது இளம் வீராங்கனை உமா காஷ்வி தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். மகளிர் பிரீமியர் லீக் (WPL) 2027 ஏலத்தில் டெல்லி அணி அவரை ரூ.10 லட்சத்துக்கு வாங்கியுள்ளது.

ஏலத்தில் புதிய வரலாறு

கொச்சியில் நடைபெற்ற மகளிர் பிரீமியர் லீக் 2027 ஏலத்தில், 15 வயது மற்றும் 202 நாட்களே ஆன உமா காஷ்வியை டெல்லி அணி அவரது அடிப்படை விலையான ரூ.10 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தது.

இதன் மூலம், மகளிர் பிரீமியர் லீக் ஏல வரலாற்றில் ஒப்பந்தம் செய்யப்பட்ட மிக இளைய வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன்பு 16 வயதில் டெல்லி கேபிடல்ஸ் அணியால் வாங்கப்பட்ட தீயா யாதவ் இந்த சாதனையை தக்கவைத்திருந்தார்.

12 வயதில் 217 ரன்கள்

பெங்களூருவில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில், தனது 12-வது வயதிலேயே ஆட்டமிழக்காமல் 217 ரன்கள் குவித்து உமா காஷ்வி கவனம் ஈர்த்தார்.

அதேபோல், தனது 9-வது வயதில் இந்தியா நிப்பான் கோப்பை தொடரில் சிறந்த இளம் திறமைக்கான விருதைப் பெற்றார். அப்போது வேதா கிருஷ்ணமூர்த்தி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மா, ஸ்ரேயங்கா பாட்டீல் உள்ளிட்ட இந்திய வீராங்கனைகளுடன் இணைந்து விளையாடும் வாய்ப்பையும் பெற்றார்.

யு15 தொடரில் 516 ரன்கள்

2025-26 மகளிர் யு15 ஒருநாள் தொடரில் கர்நாடக அணிக்காக விளையாடிய உமா காஷ்வி, 6 இன்னிங்ஸ்களில் 516 ரன்கள் குவித்து அதிக ரன்கள் எடுத்த வீராங்கனையாக திகழ்ந்தார். இதில் 3 சதங்களும், ஒரு அரைசதமும் அடங்கும்.

மணிப்பூர் அணிக்கு எதிரான போட்டியில் வெறும் 66 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 158 ரன்கள் விளாசினார். இதில் 23 பவுண்டரிகளும், 7 சிக்ஸர்களும் அடங்கும். அவரது அதிரடியால் கர்நாடக அணி 275 ரன்கள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றி பெற்றது.

இந்திய யு19 அணியிலும் இடம்

வலதுகை பேட்டிங் மற்றும் வலதுகை ஆப்-ஸ்பின் பந்துவீச்சு என ஆல்ரவுண்டராக திகழும் உமா காஷ்வி, இந்திய யு19 அணிக்காகவும் விளையாடியுள்ளார்.

2026-ம் ஆண்டு இலங்கை யு19 அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்ற அவர், 3 டி20 போட்டிகளில் 4 விக்கெட்டுகளையும், 2 ஒருநாள் போட்டிகளில் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

மேலும், கர்நாடக யு19 அணிக்காக விளையாடியபோது விதர்பா அணிக்கு எதிரான டி20 காலிறுதிப் போட்டியில் 4 ஓவர்களில் 18 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த ஆட்டத்துக்காக ஆட்டநாயகி விருதையும் பெற்றார்.

டெல்லி அணியில் வாய்ப்பு

15 வயதிலேயே இத்தனை சாதனைகளைப் படைத்துள்ள உமா காஷ்விக்கு டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஒப்பந்தம் முக்கியமான வாய்ப்பாக அமைந்துள்ளது. சர்வதேச அனுபவம் வாய்ந்த வீராங்கனைகளுடன் இணைந்து பயிற்சி பெறுவதும், விளையாடுவதும் அவரது கிரிக்கெட் பயணத்துக்கு உதவியாக இருக்கும்.

இளம் வயதிலேயே உள்ளூர் கிரிக்கெட்டில் தனது திறமையை நிரூபித்துள்ள உமா காஷ்வி, மகளிர் பிரீமியர் லீக் தொடரில் களமிறங்கும் வாய்ப்பைப் பெறுவாரா, தனது ஆட்டத்தின் மூலம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவாகியுள்ளது.

X