இனிமை வாழ்க்கைக்கு வழிகாட்டும் செயல்பாடுகள்

நெருங்கிய நட்பு, உறவாக இருக்கும்பட்சத்தில் அவர்கள் உதவி கோரும் முன்பே தாமாக சென்று உதவுவது இன்னும் சிறப்பானது.
இனிமை வாழ்க்கைக்கு வழிகாட்டும் செயல்பாடுகள்
Published on

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு தெளிவான எல்லைகளை வரையறை செய்வது அவசியமானது. அதற்கு கவனத்தில் கொள்ள வேண்டிய வாழ்வியல் வரம்புகள் பற்றி பார்ப்போம்.

இன்றைய வாழ்க்கை சூழலில் உடல் நலத்தையும், மனநலத்தையும் பேணி பாதுகாப்பது சவாலான விஷயமாக இருக்கிறது. குடும்பத்தை நிர்வகிக்கவும், எதிர்கால திட்டமிடலுக்காகவும் நிதி திரட்ட ஓய்வறியாமல் உழைக்கும் நிலைக்கு பலரும் தள்ளப்பட்டுள்ளனர். அதனால் குடும்பத்தினருடன் நேரம் செலவிடவோ, தனக்காக தனிப்பட்ட நேரத்தை ஒதுக்கவோ பலராலும் முடிவதில்லை.

அலுவலக பணி, தொழில் நிமித்தமாக செலவிடும் நேரத்தை தவிர்த்து மற்ற சமயங்களில் குடும்பம், உறவு, நட்பு வட்டத்தின் நலன் சார்ந்த விஷயங்களிலேயே கவனம் செலுத்துகிறார்கள். தம்மை கவனிக்காமல் பிறருக்காக தொடர்ந்து வாழ்வின் பெரும் பகுதியை செலவிடுவது ஏற்புடையதாக இருக்காது. அது மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழிவகுக்காது. அதற்கு இடம் கொடுக்காமல் தெளிவான எல்லைகளை வரையறை செய்வது அவசியமானது. அதற்கு கவனத்தில் கொள்ள வேண்டிய வாழ்வியல் வரம்புகள் பற்றி பார்ப்போம்.

1. நேர வரம்புகள்-எல்லைகள்

சில சமயங்களில் நமக்கு விருப்பமில்லாத விஷயமாக இருந்தாலும் நிர் பந்தத்தின் பேரில் அதனை செய்து கொடுப்பதற்கு சம்மதம் தெரிவித்து விடுகிறோம். குறிப்பாக உறவினர்களிடமோ, வேலை செய்யும் இடத்திலோ அவர்களி டம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதற்காக உடனே ஒப்புக்கொண்டு விடுவோம். அவர்களிடம் நேருக்கு நேர் சட்டென்று 'முடியாது' என்று கூறிவிட முடியாது. ஆனால் உடனே சம்மதிக்காமல் சற்று யோசிக்க நேரம் எடுத்துக்கொள்வதே சரியானது. அதற்கு 24 மணி நேர விதி' உதவும்.

எந்த முடிவாக இருந்தாலும் ஒரு நாள் கால அவகாசம் எடுத்து முடிவை சொல்வது சிறப்பானது. உடனடியாக முடிவெடுக்க வேண்டிய சமயத்தில் மட்டும் சில நிமிடங்கள் யோசித்து விட்டு உங்கள் விருப்பத்தை தெரிவிக் கலாம். நம் நேரம் நமக்கானது. அதனை எல்லோரும் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கக்கூடாது.

2. உணர்ச்சி எல்லைகள்

பிறருக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர்களாக இருக்க வேண்டும். நெருங்கிய நட்பு, உறவாக இருக்கும்பட்சத்தில் அவர்கள் உதவி கோரும் முன்பே தாமாக சென்று உதவுவது இன்னும் சிறப்பானது. ஆனால் அதி லேயே மூழ்கி போகக்கூடாது. அவர்களின் பிரச்சினையை பற்றி தொடர்ந்து சிந்தித்து கொண்டிருப்பது உடலையும், மனதையும் சோர்வாக் கும். நாம் மனிதர்கள், உணர்ச்சிகளை உறிஞ்சும் பஞ்சுகள் அல்ல. மற்றவர்கள் மீது அக்கறை காட்டலாம். ஆனால் அவர்களின் துயரத்தை முழு வதும் மனதில் சுமக்க வேண்டியதில்லை. அப்படி சுமப்பது சமயோசித மாக முடிவெடுத்து தக்க சமயத்தில் அவர்களுக்கு உதவ முடியாமல் போகலாம்.

3. வேலை

வேலையில் அதிக நேரம் மூழ்கி இருப்பது பல இடங்களில் பெருமை யாக பார்க்கப்படுகிறது. ஆனால் வேலை மட்டுமே வாழ்க்கை அல்ல. வேலைக்கும், தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இடையில் தெளிவான எல்லை வரையறை இருக்க வேண்டும். குடும்பத்துடன் நேரத்தை செலவிடும் போது வேலை பற்றியே நினைத்தால், வாழ்க்கை சமநிலை குலையும். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வேலையை முடித்து அதிலிருந்து முழுவதுமாக வெளியேற பழக வேண்டும். வார இறுதி நாட்களை குடும்பத்துக்காக முழுவதும் செலவிட கற்றுக்கொள்ளவும் வேண்டும்.

4. டிஜிட்டல்

இணையமும், சமூகவலைத்தளமும் இன்று பலருடைய வாழ்க்கையின் ஒரு பகுதியாகி விட்டது. அவைதான் எப்போதும் நம் கவனத்தை பிடித்து வைத்திருக்கிறது. அதுபோல் சிலருக்கு ஓயாமல் செல்போன் ஒலித்துக் கொண்டே இருக்கும். ஒவ்வொரு அழைப்புக்கும் அல்லது குறுஞ்செய்திக் கும் உடனே பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. தேவையற்ற அழைப்புகளை, மெசேஜ்களை தவிர்க்கலாம். இரவு நேரங்களில் படுக்கையறையை 'செல்போன் இல்லாத பகுதி'யாக மாற்றலாம். அந்த சமயத்தில் இணையத்திலிருந்து விலகி இருப்பது மன அமைதிக்கும், நல்ல உறக்கத் திற்கும் உதவும்.

5. உறவு-நட்பு

நட்போ, உறவோ சில சந்திப்புகள் நம்மை உற்சாகப்படுத்தும். மகிழ்ச்சி யில் திளைக்க செய்யும். அதற்கு நேர்மாறாக சில சந்திப்புகள் நம்மை மகிழ்ச்சியாக்காமல், மேலும் சோர்வடைய செய்யலாம். எல்லோருடனும் கலந்து பழக வேண்டிய அவசியம் இல்லை. நமக்கு நல்வழிகாட்டும் மனி தர்களுடன் அதிக நேரம் செலவிட வேண்டும். எப்போதும் குறை கூறுப வர்கள் அல்லது மன அழுத்தத்துக்கு ஆளாக்குபவர்களிடம் இருந்து மரி யாதையாக விலகி இருக்கலாம்.

6. குடும்பம்

குடும்பங்களில் அன்பு மிகுந்திருக்கும். அதிலும் ஒருசில உறவுகளிடத்தில் பாசம் அதிகம் இருக்கும். ஆனால் சில நேரங்களில் அதிக கட்டுப்பாடும் இருக்கும். நம் தொழில், நிதி, திருமணம் போன்ற விஷயங்களில் எல் லோரும் கருத்து சொல்லலாம். ஆனால் அதற்கும் ஒரு வரம்பு வேண் டும். குடும்பத்தினர் முக்கியமான ஒரு விஷயத்தை பேசும்போது உங்க ளுக்கு ஆட்சேபனை இருக்கலாம். அல்லது அந்த விஷயத்தை பேச விருப்பமில்லாமல் இருக்கலாம். அந்த சமயத்தில் “இன்று இந்த விஷயத் தைப் பற்றி பேச விரும்பவில்லை” என்று அமைதியாக சொல்லலாம். இது மரியாதையின்மை அல்ல. ஆரோக்கியமான உறவை பாதுகாப்ப தற்கு அடிகோலும்.

7. நிதி எல்லைகள்

பணம் பற்றிய விஷயங்களை பேசுவதற்கு பல சமயங்களில் சங்கடமாக இருக்கும். குறிப்பாக உறவினர்கள் கடன் கேட்கும்போது 'இல்லை' என்று சொல்லி மறுப்பதற்கு கடினமாக இருக்கும். ஆனால் நம் வரவு செலவு விஷயத்தில் திட்டமிடுதலுடனும், பாதுகாப்புடனும் இருப்பது முக்கியமா னது. உறவினர்கள் அவசரமாக கேட்டார்கள் என்பதற்காக கடன் கொடுத் துவிட்டு நம் செலவுகளுக்கு மற்றவர்களிடம் கடன் வாங்கும் நிலை ஏற்பட் டுவிடக்கூடாது. எல்லோரையும் கவர்வதற்காக தேவையற்ற செலவுகளை யும் செய்யக்கூடாது. குடும்பத்தினர் ஏதேனும் திட்டமிட்டால் கூட 'இது இப்போது நம் பட்ஜெட்டில் இல்லை' என்று கூறுவதற்கு தயக்கக்கூடாது. எந்த சூழலிலும் கடன் சுமைக்கு ஆளாகாமல் சேமிப்புக்கு முக்கியத் துவம் கொடுக்க முன்வர வேண்டும். குடும்ப உறவினர்களையும் செலவை குறைத்து, சேமிப்பதற்கு ஊக்குவிக்க வேண்டும். ஏனெனில் சேமிப்புதான் பாதுகாப்பான எதிர்காலத்திற்கு அடித்தளம்.

8. உறவு எல்லைகள்

காதல் உறவாக இருந்தாலும், நட்பாக இருந்தாலும், ஆரோக்கியமான உறவுக்கு தெளிவான வரம்புகள் தேவை. சூழ்ச்சி செய்தல், தொடர்ந்து குறை கூறுதல், மரியாதையின்மையுடன் நடத்தல் போன்றவற்றை சகித் துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. நல்ல உறவு என்பது அன்பு டன் சேர்ந்து மரியாதையையும் கொண்டிருக்க வேண்டும். நம்மை மதிக் காத இடத்தில் இருப்பது நல்லதல்ல. அது அன்பும் அல்ல.

மகிழ்ச்சியான வாழ்க்கையை கட்டமைக்க எல்லைகளை-வரம்புகளை அமைப்பது சுயநலம் அல்ல. அது சுயமரியாதை. நம் நேரம், மனம், ஆற் றல் மற்றும் அமைதியை பாதுகாக்க இந்த வரம்புகள் அவசியம். வாழ்க் கையை உண்மையாக மகிழ்ச்சியாக வாழ, முதலில் நம்மை நாமே மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com