

செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி சினிமா மற்றும் கலைத்துறையில் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழலில், சினிமா ஆர்வலர்களுக்காக டெல்லி பல்கலைக்கழகம் 'ஏ.ஐ. பிலிம் மேக்கிங்' என்ற புதிய சான்றிதழ் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
டெல்லி பல்கலைக்கழகத்தின் திறந்தநிலைக் கற்றல் பிரிவு மூலம் நடத்தப்படும் இப்படிப்பின் முக்கிய விவரங்களைப் பார்ப்போம்.
திரைப்படத் தயாரிப்பின் பல்வேறு நிலைகளில் செயற்கை நுண்ணறிவை எவ்வாறு பயன்படுத்துவது என்பதைக் கற்றுக்கொடுப்பதே இந்த படிப்பின் நோக்கம். மூன்று மாதங்கள் நடைபெறும் இப்படிப்புக்கான வகுப்புகள் நேரடியாக நடத்தப்படும். மொத்தம் 30 இடங்கள் மட்டுமே உள்ளன. பயிற்சிக் கட்டணம் ரூ.15 ஆயிரம். விண்ணப்பப்பதிவு 2026 அக்டோபர் 5-ம் தேதி தொடங்கியுள்ள நிலையில், அக்டோபர் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். வகுப்புகள் தொடங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். டெல்லி பல்கலைக்கழக மாணவர்களும் சேரலாம். அடிப்படைக் கணினி அறிவு கட்டாயம். சமூக ஊடகங்களுக்கான உள்ளடக்கம் தயாரித்தல், ஒளிப்படம் மற்றும் காணொளித் தொகுப்பு போன்ற அனுபவங்கள் கூடுதல் தகுதியாகக் கருதப்படும். காலியிடங்களின் அடிப்படையில், முதலில் விண்ணப்பிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
விருப்பமுள்ளவர்கள் டெல்லி பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான oldcdu.ac.in-க்குச் சென்று, 'சர்டிபிகேட் கோர்ஸ் இன் ஏ.ஐ. பிலிம் மேக்கிங்' படிப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் கணக்கை உருவாக்கி, தேவையான விவரங்கள் மற்றும் ஆவணங்களைப் பதிவேற்றி, கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம்.
திரைப்படம், விளம்பரம், டிஜிட்டல் ஊடகம் மற்றும் சமூக ஊடகங்களுக்கான உள்ளடக்கத் தயாரிப்பில் ஆர்வமுள்ளவர்கள், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள்ள இந்தப் படிப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
கதை உருவாக்கம், திரைக்கதை எழுதுதல், காட்சிகளைத் திட்டமிடும் ஸ்டோரி போர்டு தயாரித்தல், ஏ.ஐ. கருவிகளுக்கான வழிமுறைகளை எழுதுதல், படங்கள் உருவாக்குதல், காணொளித் தொகுப்பு, ஒலித் தயாரிப்பு, பின்னணி இசை அமைத்தல் போன்ற திறன்களைக் கற்றுக்கொள்ளலாம். செய்முறைப் பயிற்சிகள் மற்றும் திட்டப்பணிகள் மூலமாகவும் அனுபவம் பெறலாம்.