இருண்ட காலத்திலும் ஒளியைக் கண்ட ஆன் பிராங்க்... 13 வயது யூத சிறுமியின் டைரி வரலாற்று ஆவணமாக மாறிய கதை

ஆன் பிராங்க் எழுதிய டைரி புத்தகமாக வெளியிடப்பட்டு, இதுவரை சுமார் 75 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
இருண்ட காலத்திலும் ஒளியைக் கண்ட ஆன் பிராங்க்... 13 வயது யூத சிறுமியின் டைரி வரலாற்று ஆவணமாக மாறிய கதை
Published on

‘எல்லாவற்றிற்கும் மேலாக, மனிதர்கள் உண்மையில் நல்ல உள்ளம் கொண்டவர்கள் என்றே நான் இன்னும் நம்புகிறேன்’ - நாஜிக்களால் யூதர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில், 13 வயது யூத சிறுமி தனது டைரியில் எழுதிய வார்த்தைகள் இவை.

இரண்டாம் உலகப்போர்

அடால்ப் ஹிட்லர் தலைமையிலான ஜெர்மனியின் நாஜி படைகள், 1939-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந்தேதி போலந்து நாட்டின் மீது ​​படையெடுத்து சென்றன. இதற்கு பதிலடியாக, செப்டம்பர் 3-ந்தேதி இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் அரசுகள் ஜெர்மனி மீது போர் அறிவித்தன. இவ்வாறாக 2-ம் உலகப்போர் தொடங்கியது.

இந்த போரில் நாஜி படை அசுர பலத்துடன் முன்னேறி பல்வேறு ஐரோப்பிய நாடுகளை கைப்பற்றியது. குறிப்பாக 1940-ல் நெதர்லாந்து, பெல்ஜியம், டென்மார்க், நார்வே மற்றும் பிரான்ஸ் உள்பட பல நாடுகள் நாஜி படைகளிடம் வீழ்ந்தன. இவ்வாறு ஆக்கிரமித்த நாடுகளில் நாஜி அரசாங்கம் யூதர்களுக்கு எதிரான கடுமையான சட்டங்களை அமல்படுத்தியது.

வதை முகாம்கள்

பொது இடங்களில் யூதர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள தங்கள் உடையில் ஒரு நட்சத்திர பேட்ஜ் அணிய வேண்டும், தங்களிடம் உள்ள இருசக்கர வாகனங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும், பொது போக்குவரத்தை யூதர்கள் பயன்படுத்தக் கூடாது, நீச்சல் குளங்கள், விளையாட்டு மைதானங்களை யூதர்கள் பயன்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக யூதர்கள் கொத்து, கொத்தாக கைது செய்யப்பட்டு வதை முகாம்களுக்கு(Concentration Camps) அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த முகாம்கள் ஆரம்பத்தில் கைதிகளை அடைத்து வைக்கும் சிறைகளாக மட்டுமே இருந்தன. ஆனால் நாஜிக்களின் இனவெறி கொள்கை தீவிரமடையத் தொடங்கிய பின்னர், இவை யூதர்களுக்கான வதை முகாம்களாக மாறின. ஆஷ்விட்ஸ், பெல்செக், டிரெப்லின்கா உள்ளிட்ட பல்வேறு வதை முகாம்களில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

விஷ வாயுக்களை செலுத்தி யூதர்களை கொலை செய்வதற்காக பிரத்யேகமான கேஸ் சேம்பர்கள்(Gas Chambers) பயன்படுத்தப்பட்டன. இது தவிர பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் வதை முகாம்களில் போதிய உணவு, மருந்துகள் எதுவும் இல்லாததால், நோய் பரவல் ஏற்பட்டு ஏராளமானோர் உயிரிழந்தனர். கொல்லப்பட்டவர்களின் உடல்கள் மொத்தமாக எரியூட்டப்பட்டன.

நாஜிக்களின் கோரப்பிடி

நாஜிக்களிடம் பிடிபடாமல் தப்பிக்க யூதர்கள் தங்களால் இயன்ற முயற்சிகளை செய்தனர். சிலர் அமெரிக்கா, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு தப்பிச் சென்றனர். அவ்வாறு தப்ப முடியாதவர்கள் மறைவிடங்களில் பதுங்கி வாழத் தொடங்கினர். இப்படி பதுங்கியிருந்த யூதர்களுக்கு நல்ல உள்ளம் படைத்த ஜெர்மானியர்கள் சிலரே உதவியும் செய்து வந்தனர். இப்படி உதவி செய்யும் ஜெர்மானியர்கள் நாஜிக்களிடம் பிடிபட்டால், அவர்கள் பொது இடங்களில் சுட்டுக் கொல்லப்பட்டனர், அல்லது சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டனர். எனவே யூதர்களுக்கு உதவி செய்வது ஆபத்தான காரியமாக இருந்தது.

ஓட்டோ பிராங்க் குடும்பம்

இத்தகைய சூழலில்தான், நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாம் நகரில் உள்ள அலுவலக கட்டிடத்தின் ரகசிய அறை ஒன்றில் ஓட்டோ பிராங்க் என்ற யூதர், தனது மனைவி எடித் பிராங்க், மகள்கள் மார்காட் பிராங்க் மற்றும் ஆன் பிராங்க் ஆகியோருடன் பதுங்கி இருந்தார். ஜெர்மனி நாட்டை சேர்ந்தவரான ஓட்டோ பிராங்க், 1933-ம் ஆண்டு ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சிக்கு வந்த பிறகு, தனது குடும்பத்துடன் நெதர்லாந்து நாட்டிற்கு குடிபெயர்ந்தார்.

அவர் ஆம்ஸ்டர்டாம் நகரில் உள்ள ‘ஒபெக்டா’(Opekta) ஜாம் தொழிற்சாலையில் மேலாளராக பணியில் சேர்ந்தார். தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் ஓட்டோ பிராங்க் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். ஆனால் 1940-ம் ஆண்டு நெதர்லாந்து நாட்டை ஜெர்மனி கைப்பற்றிய பிறகு எல்லாமே மாறிப்போனது.

ஆன் பிராங்க்

ஓட்டோ பிராங்க்கின் இளைய மகள் ஆன் பிராங்க்(Annelise Marie Frank). இவர் 1929-ம் ஆண்டு ஜூன் 12-ந்தேதி பிறந்தார். இந்த சிறுமி எழுதிய டைரிதான் பின்னாட்களில் உலகப் புகழ் பெற்ற புத்தகமாகவும், வரலாற்றின் இருண்ட காலத்திற்கான நேரடி சாட்சியாகவும் மாறியது. உலகப்போரின்போது யூத இனப்படுகொலையை நேரில் கண்டவர்கள் பலர் போருக்கு பிறகு நேரடி சாட்சிகளாக மாறி, பல புத்தகங்களை எழுதியுள்ளனர். ஆனால் ஆன் பிராங்க், தனது அன்றாட வாழ்வியலை பதிவு செய்வதற்கு பயன்படுத்திய டைரியும் இந்த சோக வரலாற்றின் சாட்சியாக மாறிப்போனது.

‘சுத்தமான காற்றும், சிரிப்பொலியும் நிறைந்த இடத்தில் என்னை விட்டுவிடுங்கள் என எனக்குள் ஒரு குரல் கதறிக் கேட்கிறது’

- ஆன் பிராங்க்

பரிசாக கிடைத்த டைரி

1942-ம் ஆண்டு, ஜூன் 12-ந்தேதி ஆன் பிராங்கின் 13-வது பிறந்தநாளில், அவருக்கு ஒரு டைரி பரிசாக கிடைத்தது. அன்று தொடங்கி 1944 ஆகஸ்ட் 1-ந்தேதி வரை ஆன் பிராங்க் டைரி குறிப்புகளை எழுதி வந்துள்ளார். தொடக்கத்தில் ஒரு 13 வயது சிறுமிக்கே உரிய குறும்புத்தனங்கள், ஆசைகளுடன் எழுதப்பட்ட அந்த டைரி, நாளடைவில் நாஜிக்களிடம் இருந்து தப்பிக்க ரகசிய அறைக்கு சென்றது பற்றியும், அங்கு உணவு, இருப்பிடத்தை பகிர்ந்து கொண்டது பற்றியும், குண்டுவெடிப்புகள், துப்பாக்கிச் சத்தங்களுக்கு மத்தியில் உயிர் பயத்துடன் பல இரவுகளை கழித்தது பற்றியும் விவரிக்கும் ஆவணமாக மாறியது.

பதுங்கி வாழ முடிவு

1942-ம் ஆண்டு, ஜூலை மாதம், ஆன் பிராங்கின் மூத்த சகோதரியான மார்காட் பிராங்கை அரசாங்கத்திடம் சரணடையுமாறு அவர்களின் வீட்டிற்கு நோட்டீஸ் ஒன்று வந்தது. அரசாங்கத்திடம் சரணடைபவர்கள் நேராக வதை முகாம்களுக்கு அனுப்பப்படுவார்கள் என்பதால், என்ன செய்வதென்று தெரியாமல் ஆன் பிராங்கின் குடும்பம் நிலைகுலைந்து போனது. அந்த சமயத்தில்தான், ஓட்டோ பிராங்க் ஒரு யோசனையை முன்வைத்தார்.

அவர் வேலை செய்துவரும் ஜாம் தொழிற்சாலையின் மாடியில், உணவு பொருட்களை சேமித்து வைக்கும் கிடங்கு இருந்தது. அங்கு பெரும்பாலும் யாரும் செல்வதில்லை என்பதால், அந்த இடம் பயன்பாடு இல்லாமல் இருந்தது. அங்கே சென்று குடும்பத்துடன் பதுங்கிக் கொள்ளலாம் என்று அவர் முடிவெடுத்தார். அந்த தொழிற்சாலையில் இருந்த பணியாளர்களான கிளெய்மான்(Kleiman), மீயப் கீஸ்(Miep Gies), பெப் வாஸ்குஜில்(Bep Voskuijil), கூக்லர்(Kugler) உள்ளிட்டோர் ஓட்டோ பிராங்கின் குடும்பம் அங்கே பதுங்கி இருப்பதற்கு உதவி செய்தனர்.

இதில் பெப் என்ற 23 வயது பெண்மணியின் தந்தை அதே தொழிற்சாலையில்தான் வேலை செய்து வந்தார். ஆனால் அவரிடம் கூட இந்த விஷயத்தை பெப் கூறவில்லை. உள்ளே பதுங்கி இருந்தவர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் உள்ளிட்ட அனைத்தையும் வெளியில் இருந்து இவர்கள் வாங்கிக் கொடுத்தனர். வெளியே இருப்பவர்களுக்கு சிறிதும் சந்தேகம் வராத அளவிற்கு மிக நேர்த்தியாக திட்டமிட்டு ஓட்டோ பிராங்கின் குடும்பத்தினர் அந்த தொழிற்சாலையின் மாடியில் பதுங்கி இருந்தனர்.

ஓட்டோ பிராங்க் குடும்பத்தினரை தவிர இன்னும் 4 யூதர்கள் அவர்களுடன் தங்கி இருந்தனர். அவர்கள் அகஸ்ட் வான் பெல்ஸ், அவரது மனைவி ஹெர்மான், மகன் பீட்டர் மற்றும் ஒரு பல் மருத்துவர் ஆல்பிரட் டஸல் ஆகியோர் ஆவர். இந்த விவரங்கள் அனைத்தையும் ஆன் பிராங்க் தனது டைரியில் எழுதியுள்ளார்.

உருக்கமான டைரி குறிப்புகள்

ஒரு சிறிய இடத்திற்குள் 8 பேர் தங்கள் வாழ்க்கையை எவ்வாறு அமைத்துக் கொண்டனர் என்பது பற்றி ஆன் பிராங்க் விவரமாக தனது டைரியில் எழுதியுள்ளார். அந்த இடத்தில் தன்னுடன் இருந்த, தனது வயதையொத்த பீட்டர் வான் பெல்ஸ் மீது தனக்கு ஏற்பட்ட ஈர்ப்பு குறித்தும், தனது பள்ளிப்பருவ காதல் குறித்தும் ஆன் பிராங்க் எழுதியுள்ளார்.

‘எனக்கு நிறைய கனவுகள் இருக்கின்றன, ஆனால் எதார்த்தம் என்னவென்றால், போர் முடியும் வரை நாங்கள் இங்குதான் இருந்தாக வேண்டும்’ என்று தனது ஏக்கத்தை விவரித்துள்ளார். அதே சமயம், ‘எந்த நேரத்திலும் நாங்கள் கண்டுபிடிக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்படுவோம் என்று பயப்படுகிறேன்’ என தனது அச்சத்தையும் பதிவு செய்துளார்.

வெளி உலக நடப்புகளை ரேடியோ மூலமாகவும், செய்தித்தாள்கள் மூலமாகவும் அவர்கள் அறிந்து வந்தனர். யூதர்களின் இனப்படுகொலை தொடர்பான செய்திகளை அறிந்த ஆன் பிராங்க் தனது டைரியில் இவ்வாறு எழுதியுள்ளார்; ‘எனது நண்பர்களும், சொந்தங்களும் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்படுகிறார்கள். ஆனால் நானோ நல்ல கதகதப்பான மெத்தையில் உறங்குகிறேன். இதை நினைக்கும்போது எனக்கு கொடுமையாக இருக்கிறது.’

பிடிபட்ட குடும்பம்

கடைசியாக 1944-ம் ஆண்டு ஆகஸ்ட் 1-ந்தேதி ஆன் பிராங்க் தனது இறுதி டைரி குறிப்பை எழுதியுள்ளார். ஆகஸ்ட் 4-ந்தேதி, ஆன் பிராங்கின் குடும்பத்தினர் போலீசாரிடம் பிடிபட்டுவிட்டனர். அவர்கள் பதுங்கியிருந்த தொழிற்சாலையில் வேலை செய்த யாரோ ஒருவர்தான் அதிகாரிகளிடம் அவர்களை காட்டிக் கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. நாஜிக்களிடம் பிடிபட்ட ஆன் பிராங்கின் குடும்பத்தினர் நேரடியாக வதை முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். வதை முகாமில் ஓட்டோ பிராங்க் தவிர மற்ற 7 பேரும் கொல்லப்பட்டனர்.

இந்த சூரிய ஒளியும், மேகமில்லாத வானமும் இருக்கும் வரை, இவற்றை என்னால் அனுபவிக்க முடியும் வரை, நான் எப்படி சோகமாக இருக்க முடியும்?

- ஆன் பிராங்க்

புத்தகம்

போர் முடிந்த பிறகு வதை முகாமில் இருந்த யூதர்கள் விடுதலை செய்யப்பட்ட நிலையில், ஓட்டோ பிராங்க் தனது குடும்பத்தில் யாரேனும் உயிர் பிழைத்தார்களா என தேடி அலைந்தார். ஆனால் அவர்கள் யாரும் உயிருடன் இல்லை என்பது அவருக்கு தெரியவந்தது. ஆம்ஸ்டர்டாமில் அவர்கள் பதுங்கி இருந்த இடத்திற்கு அவர் மீண்டும் திரும்பி வந்தபோது, அங்கு தனது மகள் ஆன் பிராங்க் எழுதிய டைரி அவருக்கு கிடைத்தது. அந்த டைரி குறிப்புகளை தொகுத்து புத்தகமாக வெளியிட்டார்.

வரலாற்று ஆவணமாக மாறிய டைரி

அந்த புத்தகம் இதுவரை சுமார் 75 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதை மையமாக வைத்து திரைப்படங்களும் எடுக்கப்பட்டுள்ளன. ஆன் பிராங்க் அந்த டைரியை டச்சு மொழியில் எழுதியிருந்தார். எதிர்காலத்தில் ஒரு எழுத்தாளராக வேண்டும் என்ற ஆசை உள்ளதாக அவர் தனது டைரியில் குறிப்பிட்டிருந்தார். இன்று டச்சு மொழியில் அதிக மொழிபெயர்ப்புகளைக் கண்ட புத்தகம் என்ற பெருமையை அவரது டைரி பெற்றுள்ளது. மேலும், உலகப்போரின் வரலாற்று ஆவணங்களில் ஒன்றாகவும் மாறியுள்ளது.

“டைரி எழுதுவது ஒரு கனவு போன்ற விசித்திரமான உணர்வைத் தரக்கூடும். அது உங்களுடன் நீங்களே பேசிக் கொள்வதைப் போன்றது. அதே சமயம், ஒரு 13 வயது பள்ளிச் சிறுமியின் உளறல்களை கேட்க பிற்காலத்தில் யாருக்கும், ஏன் எனக்கே கூட ஆர்வம் இருக்காதோ என்று தோன்றுகிறது.”

- ஆன் பிராங்க்

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com