

புதுடெல்லி,
இயர்பட்ஸ் பயன்படுத்தி அதிக அளவு சத்தத்துடன் பாடல் கேட்பதால் நிரந்தர காது கேளாமை ஏற்படும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
உலகளவில் 100 கோடிக்கும் அதிகமான இளைஞர்கள் பாதுகாப்பற்ற முறையில் இயர்பட்ஸ்கள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் மூலம் ஆடியோக்களைக் கேட்பதால், மிகக் குறுகிய காலத்திலேயே நிரந்தரக் காது கேளாமைப் பிரச்சினையைச் சந்திக்க நேரிடும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்கால இளைஞர்களின் அத்தியாவசியப் பொருளாக மாறிவிட்ட இயர்பட்ஸ்களின் அதிக அளவு பயன்பாடு, எதிர்காலத் தலைமுறையின் கேட்கும் திறனைக் கேள்விக்குறியாக்கியுள்ளதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இயர்பட்ஸ்களை அதிக சத்தத்துடனும், நீண்ட நேரம் தொடர்ந்து பயன்படுத்தும்போது, காதின் உட்பகுதியில் உள்ள மிக நுட்பமான 'காக்லியர் ஹேர் செல்கள்' சேதமடைகின்றன. மனித உடலில் இந்த செல்கள் ஒருமுறை சேதமடைந்தால், அவற்றை மீண்டும் இயற்கையாக உருவாக்கவோ அல்லது மருத்துவ முறையிலோ சரிசெய்ய முடியாது. இதன் இறுதி விளைவாக, கேட்கும் திறன் முழுமையாகப் பாதிக்கப்பட்டு நிரந்தரக் காது கேளாமை பிரச்சினை ஏற்படுகிறது.
அதிக அளவு சத்தத்தில் பாடல்கள் கேட்பதால் காதுகளில் இரைச்சல் ஏற்படும். இதில் பாதிக்கப்படுபவர்களுக்கு 'டின்னிடஸ்' என்ற தீவிரக் குறைபாடு ஏற்படுகிறது. இக்குறைபாடு உள்ளவர்களுக்குக் காதுகளில் எப்போதும் ஒருவித இரைச்சலோ, மணி அடிப்பது போன்ற சத்தமோ கேட்டுக்கொண்டே இருக்கும். இது ஒருகட்டத்தில் மனிதர்களின் மன அமைதியைக் குலைத்து, தூக்கமின்மை மற்றும் கடுமையான மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
பேருந்து, ரெயில் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சத்தமான பொது இடங்களில் பயணிக்கும்போது, வெளியிலிருந்து வரும் இரைச்சலைத் தவிர்ப்பதற்காகப் பலர் தங்களது இயர்பட்ஸின் சத்தத்தை 80% முதல் 90% வரை மிக அதிகமாகக் கூட்டுகின்றனர். இது காதுகளுக்கு மிகத் தீவிரமான அழுத்தத்தை நேரடியாகக் கொடுத்து, கேட்கும் திறனை அதிவேகமாகப் பறித்துவிடுகிறது.
இந்தக் கடுமையான பாதிப்பிலிருந்து இளைஞர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக உலக சுகாதார நிறுவனம் 60:60 விதியை பின்பற்றுமாறு கூறியுள்ளனர். உலக சுகாதார நிறுவனம் மற்றும் நிபுணர்கள் மொபைல் அல்லது லேப்டாப்பில் ஆடியோக்களைக் கேட்கும்போது, அதன் அதிகபட்ச சத்தத்தில் 60 சதவீதத்திற்கும் குறைவாகவே ஒலியை வைத்திருக்க வேண்டும்.
தொடர்ந்து 60 நிமிடங்களுக்கு மேல் இயர்பட்ஸ்களைப் பயன்படுத்தக் கூடாது. ஒரு மணி நேரம் பயன்படுத்திய பின், குறைந்தபட்சம் 10 முதல் 15 நிமிடங்கள் காதுகளுக்கு முழுமையான ஓய்வு அளிக்க வேண்டும். மேலும், பொது இடங்களில் இரைச்சலைத் தவிர்க்க விரும்புபவர்கள், சாதாரண இயர்போன்களுக்குப் பதிலாகச் சுற்றுப்புறச் சத்தத்தைக் குறைக்கும் 'நாய்ஸ்-கேன்சலிங்' தொழில்நுட்பம் கொண்ட ஹெட்போன்களைப் பயன்படுத்தலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நாம் அன்றாடம் ரசித்துக் கேட்கும் பாடல்களை விட, அதைக் கேட்க உதவும் நம்முடைய காதுகள் தான் மிக முக்கியம். எனவே, இன்றிலிருந்தே இந்த 60:60 விதியைக் கடைப்பிடித்து, காதுகளின் ஆரோக்கியத்தை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகும்.