

டோக்கியோ
ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடுதலில் பட்டன் சரிவர வேலை செய்யாமல் இந்திய வீரருக்கு பதக்கம் நழுவிய சோகம் நடந்துள்ளது.
ஆசிய விளையாட்டு போட்டிகள் ஜப்பானில் நடந்து வருகின்றன. இதில், 50 மீட்டர் ரைபிள் பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய வீரர் ஐஷ்வரி பிரதாப் சிங் தோமர் சிறப்பாக விளையாடினார். அவர் தனி நபர் பதக்கத்திற்கான போட்டியின்போது, மேட்ச் பட்டன் சரியாக வேலை செய்யாமல் பதக்கம் பெறும் வாய்ப்பை இழந்த சோகம் ஏற்பட்டு உள்ளது.
அது என்ன மேட்ச் பட்டன்? அதனால் என்ன சிக்கல்? அதற்கும் பதக்கத்திற்கும் என்ன தொடர்பு? என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.
போட்டியில், டிரையல் ஷாட்டுகள் எனப்படும் ஷைட்டர் ஷாட்டுகள் சுடப்படும். ஏனெனில், காற்று எப்படி வீசுகிறது, சுற்றுச்சூழல் நிலைமை உள்ளிட்ட விசயங்களை பற்றி தெரிந்து கொள்வதற்காக இந்த டிரையல் ஷாட்டுகள் முறை உள்ளது.
டிரையல் ஷாட்டுகள் முடிந்ததும், புள்ளிகள் வழங்க கூடிய அதிகாரப்பூர்வ போட்டிக்கான ஷாட்டுகள் சுடப்படும். அதற்கு மின்னணு கட்டுப்பாட்டு முறையில் செயல்பட கூடிய மேட்ச் பட்டன் எனப்படும் போட்டிக்கான பட்டன் ஒன்று இருக்கும். அதனை அழுத்தி, போட்டிக்கு தயாராக வேண்டும். ஆனால், டிரையல் ஷாட்டுகள் முடிந்து, பதற்றமின்றி, போட்டிக்கு ஐஷ்வரி தன்னை தயார்படுத்திய சமயத்தில், மேட்ச் பட்டன் வேலை செய்யவில்லை.
இதனால், மீண்டும் போட்டி நடுவரை நோக்கி அதுபற்றி அவர் முறையிட வேண்டியிருந்தது. இறுதிப்போட்டியில், இதுபோன்ற சிக்கலால் அவருக்கு காலதாமதம், பதற்ற நிலை உள்ளிட்டவை ஏற்பட்டு, கவனம் தவறி போவதற்கான சூழல் உண்டானது. போட்டியிலும் அவர் சரிவர செயல்பட முடியாமல் போனது.
இதனை ஐஷ்வரியும் பேட்டியின்போது குறிப்பிட்டார். இதனால், தனிநபர் பிரிவில் இந்தியா சார்பில் பதக்கம் பெறுவதற்கான வலுவான தளத்தில் அவர் இருந்தபோதும், 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
கடந்த முறை ஹாங்சவ்வில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில், குழு போட்டிகளில் 2 தங்கம், தனிநபரில் ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் என மொத்தம் 4 பதக்கங்களை அவர் அள்ளினார். இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய அவர், குறைந்தபட்சம் வெள்ளியை வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது கைநழுவி போனது பெரிய அளவில் சோகம் ஏற்படுத்தியுள்ளது.