

இந்த வாரம் சண்டே ஸ்பெஷல் பேச்சுலர்ஸ் சமையல் டிப்ஸ் பகுதியில் தீபாவளி ஸ்பெஷலாக தித்திப்பான ரசகுல்லா செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.
பால் - 3½ லிட்டர்
எலுமிச்சை சாறு - 3 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 5 கப்
தண்ணீர் - 12 கப்
ஏலக்காய் - 5
முதலில் கேஸ் அடுப்பை 'ஆன்' செய்து, அதில் ஒரு பாத்திரத்தை வைத்து, பாலை தண்ணீர் சேர்க்காமல் ஊற்றி அடிப்பிடிக்காமல் கொதிக்கவிடவும். அடுத்து அடுப்பை 'ஆப்' செய்துவிட்டு, ஒருசில நிமிடங்கள் கழித்து சூடான பாலுடன் எலுமிச்சை சாறு சேர்க்கவும். பால் திரிந்துவிடும். அதை ஒரு துணியில் வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். அதை 2 முறை தண்ணீர் சேர்த்து கழுவவும். அப்போதுதான் புளிப்பு சுவை போகும். தண்ணீர் நன்கு வடிந்ததும் அப்படியே துணியுடன் 30 நிமிடங்கள் கட்டி தொங்கவிடவும்.
மற்றொரு புறம், சர்க்கரை பாகு காய்க்கவும். அதற்கு, அடுப்பை 'ஆன்' செய்து வாய் அகன்ற ஒரு பாத்திரத்தை வைக்கவும். அதில் தண்ணீர் ஊற்றி, சர்க்கரையை தட்டி பாகு காய்க்கவும். மிதமான சூட்டில் கொதிக்க விடவும்.
அந்த இடைப்பட்ட நேரத்தில், துணியில் உள்ள திரிந்த பால் கட்டியை மற்றொரு பாத்திரத்தில் எடுத்து நன்றாக உடைத்துவிட்டு சுமார் 10 நிமிடங்கள் பிசையவும். அப்போதுதான் உருண்டை பிடிக்கும் பதத்திற்கு வரும்.
அதனைத் தொடர்ந்து, சிறிய எலுமிச்சை பழம் அளவுக்கு சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும். அதை கொதித்துக் கொண்டிருக்கும் சர்க்கரை பாகில் சேர்க்கவும். 15 நிமிடங்கள் நன்கு வேகவிடவும். இடையில், ஏலக்காயை பொடியாக்கி சேர்த்துக்கொள்ளவும். அடுத்து அடுப்பை 'ஆப்' செய்து, பாத்திரத்தில் உள்ள பால் உருண்டை மற்றும் சர்க்கரை பாகை அப்படியே மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றவும். ஒரு நாள் முழுவதும் அந்த சர்க்கரை பாகில் பால் உருண்டைகள் ஊற வேண்டும். அப்போதுதான் பாகில் நன்கு ஊறி பெரிய உருண்டைகளாக வரும். தித்திப்பான ரசகுல்லா ரெடி.