

இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி பண்டிகையில் பட்டாசுகள், புத்தாடைகள் மற்றும் பலகாரங்களுடன் ‘எண்ணெய் குளியல்’ முக்கியத்துவம் வாய்ந்தது.
தீபாவளி எண்ணெய் குளியலுக்கு நல்லெண்ணெய்தான் பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படுகிறது. நல்லெண்ணெயுடன் சிறிதளவு சீரகம் சேர்த்து லேசாக சூடேற்றி வடிகட்டி வைத்துக்கொள்ளவேண்டும். பின்னர் எண்ணெய் மிதமான சூட்டில் இருக்கும்போது உடலில் தேய்க்க வேண்டும். பிறகு, வெதுவெதுப்பான வெந்நீரில் குளிக்கவேண்டும்.
சிலர் கொதிக்க கொதிக்க வெந்நீரை வைத்து குளிப்பார்கள். அசதி போகும் என நினைத்து இவ்வாறு சூடாகக் குளிப்பவர்கள் இருக்கிறார்கள். அது, தவறு. வெதுவெதுப்பான நீரில் குளிப்பதே நல்லது. சிலருக்கு வெந்நீர் ஒத்துக்கொள்ளாது. அவர்கள் சாதாரண தண்ணீரில் குளிக்கலாம்.
எண்ணெய் தேய்த்து நீண்ட நேரம் ஊற வைத்து குளித்தால் நல்லது என சிலர் நினைத்து மணிக்கணக்கில் ஊறவைப்பதுண்டு. எண்ணெய் தேய்த்த அரைமணி நேரத்துக்கு மேல் ஊற வைக்கக்கூடாது. அதற்குள் குளித்துவிட வேண்டும். அதிக நேரம் ஊறவிட்டால் உடல் அதீத குளிர்ச்சி அடைந்து, சளி உள்ளிட்ட தொந்தரவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அதேபோல் எண்ணெய் தேய்த்து குளிக்கும்போது ஷாம்பு, சோப்பு பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. ஷாம்புகளைவிட சீயக்காள் தூளும், அரப்புத் தூளும் எண்ணெய்க்குளியலுக்கு ஏற்றவை. பரம்பரிய முறைப்படி தயாரிக்கப்பட்ட குளியல் பொடியையும் பயன்படுத்தலாம். பெண்கள் நலங்கு மாவு, பாசிப்பருப்பு மாவு ஆகியவற்றையும் பயன்படுத்தலாம்.
சூரிய உதயத்திற்கு முன்பாக (அதிகாலை 3 மணி முதல் 5 மணிக்குள்) எண்ணெய் தேய்த்து குளிப்பது பாரம்பரிய முறை. சிலருக்கு அதிகாலை குளிர்ந்த வேளையில் எண்ணெய் நீராடல் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். அவர்கள் சூரிய உதயத்திற்கு பின் நல்ல நேரம் பார்த்து குளிக்கலாம். தற்போது மழைக்காலம் என்பதால், காலை சூரிய வெளிச்சம் வந்தபின் நீராடுவது உடலுக்கு நல்லது.
பச்சிளம் குழந்தைகள், வயதானவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், மாதவிடாய் காலப் பெண்கள் எண்ணெய் குளியலை தவிர்ப்பது நல்லது. நல்லெண்ணெய் தவிர தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் தேய்த்தும் குளிக்கலாம்.