சோர்வு.. மன அழுத்தம்: மன நிலையை மாற்றும் டீ வகைகள்

தேநீருக்கு மன நிலையை மேம்படுத்தும் தன்மை உண்டு. தூங்குவதற்கு சிரமப்பட்டாலோ, மன அழுத்தத்துடன் வேலை செய்தாலோ குறிப்பிட்ட வகை தேநீர் அருந்துவது பலன் தரும். சில டீ வகைகளில் காபின் உள்ளடங்கி இருக்கும்.
சோர்வு.. மன அழுத்தம்: மன நிலையை மாற்றும் டீ வகைகள்
Published on

அவை உடல் ஆற்றல் திறனை அதிகரிக்கவும், வேலையில் சிறப்பாக கவனம் செலுத்தவும் உதவும். மன நிலைக்கு ஏற்ப எந்த வகையான டீயை பருலாம் என்பது பற்றி பார்ப்போம்.

1. துளசி டீ: மூலிகை குணம் கொண்ட துளசியை தேநீராக தயாரித்து அருந்துவது, மன நலத்திற்கும் நன்மைகளை வழங்கும். மனச்சோர்வு மற்றும் பதற்றத்தை குறைக்க துளசி உதவும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. அறிவாற்றல் மற்றும் மன நிலையை மேம்படுத்தும் தன்மையும் துளசிக்கு உண்டு. கொதிக்கும் நீரில் ஒரு கைப்பிடி அளவு துளசி இலைகள், சிறி தளவு இஞ்சி, ஏலக்காய் தூள் சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடவும். பின்பு அதனை வடிகட்டி, தேன் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து பருகலாம்.

2. சாமந்தி டீ: கெமோமில் டீ எனப்படும் இது மன அழுத்தத்தை குறைப்பது முதல் தூக்கத்தை தூண்டுவது வரை பல்வேறு நன்மைகளை வழங்கக்கூடியது. மன அழுத்த உணர்வுகளை குறைப்பதில் பெரும் பங்கு வகிப்பதாக ஆய்வு களும் உறுதிபடுத்தியுள்ளன. இரவில் சாமந்தி டீ பருகுவது ஆழ்ந்த தூக்கத்திற்கு வித்திடும். கொதிக்கும் நீரில் கெமோமில் டீ தூள்களை சேர்த்து 10 நிமிடங்களில் கொதிக்கவிட்டு, பின்னர் வடிகட்டி பருகலாம்.

3. கிரீன் டீ: நீங்கள் எப்போதாவது சோர்வாக இருப்பதாக உணர்கிறீர்களா? அப்போது கிரீன் டீ பருகுவது சிறந்த தீர்வாக அமையும். கிரீன் டீயில் உள்ள காபின் நுட்பமான ஆற்றலையும், ஊக்கத்தையும் வழங்கும். உடலில் உள்ள நச்சுக்களை நீக்கவும் உதவும். மனதிற்கு புத்துணர்ச்சியையும் அளிக்கும். மன அமைதிக்கும் வித்திடும். கிரீன் டீ பதற்றத்தின் அளவை குறைக்க உதவும். மன அழுத்தத்தை குறிக்கும் எ-அமிலேஸ் செயல்பாட்டை தடுக்கும் என்று ஆய்வுகளும் கூறுகின்றன. கொதிக்கும் நீரில் கிரீன் டீ தூள் போட்டு வடிகட்டி பருகலாம். சூடான நீரில் கிரீன் டீ பேக் ஒன்றை போட்டும் அருந்தலாம்.

4. பிளாக் டீ: லண்டன் யுனிவர்சிட்டி காலேஜ் வெளியிட்ட ஆய்வில், தினமும் பிளாக் டீ அருந்துபவர்கள், தங்கள் மன அழுத்த அளவுகளில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை உணரலாம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மன அழுத்த ஹார்மோன் அளவுகள் இயல்பு நிலைக்கு திரும்ப இந்த தேநீர் உதவுகிறது. அதனால்தான் நீங்கள் வித்தியாசத்தை உணர்கிறீர்கள் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொதிக்கும் நீரில் தேயிலையை கொட்டி ஐந்து நிமிடங்கள் வேகவிடவும். பின்பு தேநீரை வடிகட்டி அதனுடன் எலுமிச்சை சாறு அல்லது சர்க்கரை சேர்த்து பருகலாம்.

5.பெப்பர் மிண்ட் டீ: புதினாவின் குளிர்ச்சியான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் பண்புகள், உணர்ச்சிகளை சமநிலைப்படுத்த உதவும். இந்த தேநீர் நோய் அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டது. அவை கார்டிசோல் அளவை குறைக்கும். அதனால் இந்த டீயை பருகும்போது மன நிலை உடனடியாக மேம்படும். குடல் பிரச்சினைகளை தடுப்பதிலும் இந்த டீ முக்கிய பங்கு வகிக்கக்கூடியது. சூடான நீரில் புதினா இலைகளை 10 நிமிடங்கள் ஊறவைத்து, டீயாக தயாரித்து பருகலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com