

இது மாம்பழ சீசன் என்பதால் பலரும் விதவிதமான மாம்பழங்களை ருசிக்க ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் அளவோடு சாப்பிடுவது தான் ஆரோக்கியத்திற்கு ஏற்புடையது. தினமும் எத்தனை மாம்பழங்கள் சாப்பிடலாம் தெரியுமா? ஒன்று அல்லது இரண்டு நடுத்தர அளவிலான மாம்பழங்களை சாப்பிடலாம். அதாவது சுமார் 2 கப் அல்லது 330 கிராம் நறுக்கிய மாம்பழம் சாப்பிடுவதே பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான அளவாகும்.
இந்த அளவுக்குள் மாம்பழம் உட்கொள்வது கலோரி மற்றும் இயற்கையான சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க உதவிடும். மாம்பழங்களை ஜூஸாகவோ அல்லது மில்க் போன்ற ஷேக்குகளாகவோ அருந்துவதற்குப் பதிலாக. அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது. அப்படி சாப்பிடும்போது அதிலிருக்கும் நார்ச்சத்து, சர்க்கரை உறிஞ்சப்படுவதை மெதுவாக்க உதவும்.
ரத்தச் சர்க்கரை திடீரென அதிகரிப்பதை தடுக்கவும், நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வை பெறவும் வெறுமனே மாம்பழம் சாப்பிடாமல் அதனுடன் தயிர் அல்லது பாதாம் உள்ளிட்டவற்றை சேர்த்து உண்ணலாம். அதேவேளையில் மாம்பழங்களுடன் சர்க்கரை, ஐஸ்கிரீம், பால் போன்றவற்றை சேர்க்க வேண்டாம். ஏனெனில் இவை கலோரி அளவை அதிகரிக்க செய்துவிடும்.
தினமும் 2 மாம்பழங்களுக்கு மேல் உட்கொண்டால் அதில் உள்ளடங்கி இருக்கும் அதிக இயற்கையான சர்க்கரை மற்றும் கலோரிகள் காரணமாக, சிலருக்கு சர்க்கரை அளவு திடீரென அதிகரித்துவிடும். தேவையற்ற உடல் எடை அதிகரிப்புக்கும் வழிவகுக்கும். வயிறு உப்புசம், வயிற்று வலி அல்லது வயிற்றுப்போக்கு போன்ற செரிமான பிரச்சினைகளை உண்டாக்கும்.
மாம்பழங்கள் இயற்கையாகவே இனிப்பானவை மற்றும் அதிக சர்க்கரை கொண்டவை என்பதால் அதிகமாக சாப்பிடும்போது குளுக்கோஸ் அளவை கடுமையாக உயர்த்தும். அதிலும் நீரிழிவு நோய் அல்லது இன்சுலின் எதிர்ப்பு உள்ளவர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.