

சண்டே ஸ்பெஷல் பேச்சுலர்ஸ் சமையல் டிப்ஸ் பகுதியில், இந்த வாரம் தீபாவளி ஸ்பெஷலாக தீபாவளி லேகியம் செய்வது எப்படி என்பது பற்றி பார்க்கப்போகிறோம்.
தீபாவளி நன்னாளில் எல்லோரும் இனிப்பு மற்றும் கார பலகாரங்களை சாப்பிடுவது வழக்கம். இது சிலருக்கு அஜீரணம் மற்றும் வயிறு உப்பிசத்தை ஏற்படுத்திவிடும். அதில் இருந்து மீண்டு வரத்தான் இந்த தீபாவளி லேகியம்.
இதை பலகாரங்கள் சாப்பிடுவதற்கு முன்னால் உருண்டையாக உருட்டி சாப்பிடலாம். சிறியவர்களுக்கு சிறிய உருண்டையாகவும், பெரியவர்களுக்கு சற்று பெரிய உருண்டையாகவும் கொடுக்கலாம்.
சுக்கு - 25 கிராம்
மிளகு - 1 டீஸ்பூன்
திப்பிலி - 2
ஓமம் - 1 டீஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
கொத்தமல்லி (தனியா) - 2 டீஸ்பூன்
ஏலக்காய் - 3
வெல்லம் - 200 கிராம்
நெய் - 2 டீஸ்பூன்
முதலில் கேஸ் அடுப்பை 'ஆன்' செய்து, அதில் வாய் அகன்ற ஒரு பாத்திரத்தை வைக்கவும். அந்த பாத்திரத்தில் சுக்கு, மிளகு, திப்பிலி, ஓமம், சீரகம், கொத்தமல்லி, ஏலக்காய் ஆகியவற்றை போட்டு மிதமான சூட்டில் லேசாக வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். சூடு ஆறியதும் அவற்றை மிக்சி ஜாரில் போட்டு பவுடராக திறித்துக்கொள்ளவும்.
அடுத்து, பாகு காய்ப்பதற்காக ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து சூடாக்கவும். வெல்லம் நன்கு கரைந்த உடன் கொதிக்கத் தொடங்கும். அப்போது அரைத்து வைத்த பொடியை சிறிது சிறிதாக கட்டி விழாமல் சேர்த்து கிளறவும்.
கெட்டியாக தொடங்கும்போது நெய் சேர்த்து நன்கு கிளறவும். லேகியம் நன்கு பதத்திற்கு வரும்போது பாத்திரத்தில் ஒட்டாது. அதுதான் சரியான பதம். அடுப்பை 'ஆப்' செய்துவிடவும். உடல் நலத்துக்கு ஏற்ற தீபாவளி லேகியம் ரெடி.