உக்ரைன் - ரஷியா போரும்...! இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளும் - ஒரு அலசல்

உக்ரைன் மீது ரஷியா 33-வது நாளாக போர் தொடுத்து வருகிறது.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

புதுடெல்லி,

உக்ரைன் மீது ரஷியா 33-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர பல நாடுகள் முயற்சித்த போதும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன.

இதற்கிடையில், இந்த போர் உலக நாடுகளின் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கத்திய நாடுகள், ஆசிய நாடுகள், வளைகுடா நாடுகள் என பல்வேறு நாடுகளும் இந்த போரில் தங்கள் நிலைப்பாட்டை கவனமாக கையாண்டு வருகின்றன.

குறிப்பாக, இந்த போரில் இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகள் மிகவும் கூர்மையாக கண்காணித்து வருகின்றன.

இந்த போரில் இந்தியாவை தங்கள் பக்கம் கொண்டு வர அமெரிக்கா, மேற்கத்திய நாடுகளும் மற்றும் ரஷியாவும் முயற்சித்து வருகின்றன.

ஆனால், இந்தியா அதன் வெளியுறவுக்கொள்கைகளின் செயல்பாட்டால் தற்போது வரை இந்த விவகாரத்தை பெரும் சவாலுடனும், சிறப்பாகவும் கையாண்டு வருகிறது.

அமெரிக்கா மற்றும் ரஷியாவின் நட்பு நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவின் நட்பு நாடுகளில் முதன்மையானது ரஷியா. இந்தியாவின் பாதுகாப்பு உபகரணங்கள் பெரும்பாலும் ரஷியாவிடம் இருந்தே கொள்முதல் செய்யப்படுகிறது.

அதேபோல், இந்தியாவின் சோதனையான காலகட்டங்களில் (இந்தோ-பாகிஸ்தான் போர்) ரஷியா எப்போதும் துணை நின்றுள்ளது. இந்தியாவுக்கு எதிராக ஐநா சபையில் கொண்டு வரப்படும் தீர்மானங்களை தனது வீட்டோ அதிகாரத்தின் மூலம் ரஷியா தடுத்துள்ளது.

குறிப்பாக, காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா.சபையில் ரஷியா இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுத்துள்ளது. இதனால், உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பு விவகாரத்தில் இந்தியா நடுநிலை என்ற பாதையை தேர்ந்தெடுத்துள்ளது.

இதற்கிடையில், உக்ரைன் போரில் ஐநா சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் இந்தியா ரஷியாவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்தின.

ஆனால், ஐ.நா. சபையில் ரஷியாவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை. இது இந்த போரில் இந்தியா எந்த நாட்டுக்கும் ஆதரவாக இல்லை என்பதை வெளிப்படுத்தியது. ஐ.நா. சபையில் இந்தியாவின் நிலைப்பாட்டை ரஷியா வரவேற்றது.

இந்தியாவின் நிலைப்பாட்டை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டித்தார். ரஷிய அதிபர் புதினை கண்டிக்க இந்தியா நடுங்குகிறது என்று அவர் கூறினார். அவரது பேச்சு இந்தியா - அமெரிக்கா இடையே விரிசலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பைடனின் பேச்சுக்கு மறுநாளே இந்தியாவுடனான உறவு மிகவும் வலுவாக உள்ளது என அமெரிக்க வெள்ளைமாளிகை செய்தித்தொடர்பாளர் கூறினார்.

அதேபோல், இந்திய பிரதமர் மோடியுடன் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் காணொலி காட்சி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின் போது உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை புரிந்துகொள்ள முடிகிறது என்று ஆஸ்திரேலிய பிரதமர் தெரிவித்தார்.

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா கடந்த 19-ம் தேதி இந்தியா வந்தார். ஜப்பான் குவாட் அமைப்பில் உறுப்பினராக உள்ளது. புமியோ கிஷிடா இந்திய பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின் போது உக்ரைன் விவகாரத்தில் இந்தியா ரஷியா மீது கடுமையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். ஆனால், இந்த விவகாரத்தில் இந்தியா மென்மையான நிலைப்பாட்டிலேயே உள்ளது.

இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யீ கடந்த வியாழக்கிழமை இந்தியாவுக்கு வந்தார். அவரது பயணம் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி நடைபெற்றது. இந்தியா வந்த வாங் யீ உக்ரைன் விவகாரம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய் சங்கருடன் ஆலோசனை நடத்தினார்.

உக்ரைன் போரில் ரஷியாவுக்கு சீனா உதவினால் கடும் நடவடிக்கைகளை சந்திக்கும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், சீனாவில் பொருளாதார ரீதியில் தாக்கம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக இந்தியாவுடனான உறவை மேம்படுத்தி வணிக ரீதியில் தாக்கத்தை சரிகட்ட சீனா இந்தியாவுடன் இணைந்து செயல்பட விரும்புகிறது. ஆனால், எல்லை விவகாரத்தில் பிரச்சினை நிலவுவதால் முதலில் அந்த பிரச்சினையை தீர்த்துவிட்டு அடுத்தகட்டத்திற்கு செல்லலாம் என்று சீன வெளியுறவுத்துறை மந்திரியிடம் இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

அதேவேளை, இங்கிலாந்து வெளியுறவுத்துறை மந்திரி வரும் 31-ம் தேதி இந்தியா வர உள்ளார். இந்த வருகையின் போது அவர் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்திக்கிறார். இந்த சந்திப்பில் இரு நாட்டு உறவு, உக்ரைன் - ரஷியா போர் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் ஆலோசிக்கப்பட உள்ளது.

அதேபோல், ரஷியாவிடமிருந்து 3 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க கூடாது என அமெரிக்கா எச்சரித்துள்ள நிலையில் அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி இந்தியா கச்சா எண்ணெய் வாங்குகிறது. இந்த கொள்முதல் பணம் இந்திய ரூபாயில் செலுத்தப்படலாம் என தகவல் வெளியான நிலையில் பணம் ரூபாயில் செலுத்தப்படாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவ் இந்த வாரம் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீன வெளியுறவுத்துறை மந்திரி கடந்த வாரம் இந்தியா வந்த நிலையில் இந்த வாரம் ரஷிய வெளியுறவுத்துறை மந்திரியும் இந்தியா வர உள்ளார்.

உக்ரைன் போரில் அமெரிக்கா மற்றும் ரஷியா என்ற இரு வல்லரசு நாடுகளை பகைத்துக்கொள்ளாமல் இந்தியா நடுநிலை மற்றும் சொந்த நாட்டின் நலன் தொடர்பான முடிவுகளை எடுத்து வருவதாக சர்வதேச அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com