எறும்புகள் கற்றுத்தரும் பாடம்

பூமியில் சுமார் பத்தாயிரம் ட்ரில்லியன் எண்ணிக்கையில் எறும்புகள் உள்ளன. உலகின் எல்லாப் பகுதிகளிலும் எறும்புகள் காணப்பட்டாலும் பெரும்பாலானவை வெப்பப் பிரதேசங்களில் வாழ்கின்றன.
எறும்புகள் கற்றுத்தரும் பாடம்
Published on: 

2009-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, எறும்புகளில் கிட்டத்தட்ட 22 ஆயிரம் இனங்கள் உள்ளன. தாவர இனங்கள் பூமியில் தோன்றிப் பரவிய பின்னரே (சுமார் 100 முதல் 140 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்) எறும்புகள் பல்வேறு இனங்களாக வளர்ச்சி பெற்றன.

எறும்புகள் தங்கள் பண்ணையை 60 மில்லியன் ஆண்டு களுக்கு முன்பே அமைக்க ஆரம்பித்துவிட்டன. இதற்காக ஒரு கூட்டத்தைத் தக்கவைத்துக் கொள்கின்றன. இந்த கூட்டத்திற்கு ஆஃபிட்ஸ் (Aphids) என்று பெயர். இந்தக் கூட்டத்தை இனிப்பு தாவரங்களுக்கு இடையே கொண்டு சென்று பிற உயிரினங்களுக்கு இரையாகாமல் பாதுகாக்கின்றன. ஒரு பரிவர்த்தனையாக அந்த ஆஃபிட்ஸ்களிலிருந்து சத்தான தேன் துளிகளை கரந்துவிடுகின்றன. இந்தத் தேன், எறும்பு களுக்கு உணவாகவும் மருத்துவப் பொருளாகவும் பயன்படுகிறது.

மனிதர்கள் மற்றும் தேனீக்களைப் போலவே எறும்புகளுக்கு மொழியியல் இடப்பெயர்ச்சி உண்டு. இதன் மூலம் அவை ஒன்றுக்கொன்று தொடர்புகொண்டு, தொலைதூரப் பொருள் மற்றும் நிகழ்வுகளை பரிமாறிக்கொள்ள இயலும்.

எறும்புகள் ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்ள பெரமோன்ஸ் (Pheremones) என்ற ரசாயனம் பயன்படுகிறது. இந்த ரசாயனத்தின் மூலம் தன் சக எறும்புகளுடன் சிறுசிறு செய்தி களைப் பரிமாறிக் கொள்கின்றன.

எறும்புகளுக்கு அற்புதமான சூப்பர் சக்தியும் உண்டு. மிக உயரத்தில் இருந்து பூமியில் விழுந்தாலும் எறும்புகள் படுகாயம் என்று அடைவதேயில்லை. இதற்கு காரணம் அதன் உடல் எடை மிகக்குறைவாக இருப்பதுதான்.

எறும்புகள் தங்கள் உடம்பை நீரில் மூழ்காமல் இருக்கப் பல்வகை உடல் அமைப்புகளை மாற்றிக் கொள்ள இயலும். நெருப்பு எறும்புகள் (Fire Ants) என்னும் ஒருவகை எறும்புகள் ஒரு குழுவாக இருக்கும்போது ஒரு நீர் நிலையைக் கண்டால் அவை ஒன்றோடொன்று பிணைந்து காற்றுப்புகா வண்ணம் ஒரு அமைப்பை உருவாக்குகின்றன. இவை ஒரு எறும்புப் படகாக மாறி எந்த ஒரு தீவிரமான மழை, புயல் மற்றும் பயங்கர வெள்ளத்தில் இருந்து தப்பித்துக்கொள்கின்றன. அந்த எறும்புப்படகின் கீழ் பல நூறு எறும்புகள் கொண்ட ஒரு அடுக்கு சுற்றிச்சுற்றி மற்ற எறும்புகளுக்கு ஒரு அடிவாரமாக பணியாற்றும்.

எறும்புகளின் உடல் வெளிப்புற அமைப்பு கொஞ்சம் நீர் எதிர்ப்பு சக்தியை இயற்கையாகவே கொண்டுள்ளன. ஏனைய பூச்சிகளை போலவே எறும்புகள் உடலுக்கு வெளியே எலும்புக்கூட்டையும் மூன்று ஜோடி கால்களையும் துண்டு களால் ஆன உடலையும் தலைப்பகுதியில் இரு கூட்டு கண்களையும் இரு உணர் உறுப்புக் களையும் கொண்டிருக்கின்றன. தன்னைச் சுற்றியிருக்கும் காற்றுக்குமிழிகளை எறும்புகளால் சமம் செய்ய இயலும். இதை ஒரு குழுவாக நீர் எதிர்ப்பு சாதனமாக அவைகளால் பயன்படுத்த முடியும்.

பொற்தாடை என்னும் எறும்புகள் இரு கொடுக்குகள் கொண்டவை. இவை எதிரிகளுக்கு இரையாகாமல் இருக்க, குதித்து தப்பிக்கும் கலையைப் பெற்றுள்ளன. இந்த குதிக்கும் கலைத்திறமை அவைகளின் சக்தி வாய்ந்த தாடைகளால் நிகழ்த்தப்படுகின்றது. 180 டிகிரியில் திறக்கப்பட்ட தாடையை வேகமாக மூடும் நிகழ்வு மணிக்கு சுமார் 225 கிலோ மீட்டர் வேகத்தில் நிகழ்கிறது. இதனால் சக்தி வாய்ந்த வலிமையுடன் எறும்புகள் காற்றில் தூக்கி எறியப்பட சாத்தியமாகிறது.

அந்த எறும்புகள் தப்பிக்க நிகழ்த்தும் இந்த குதிப்பு முயற்சி பவுன்சர் டிபன்ஸ் ஜம்ப் (Bouncer Defence Jump) என்று அழைக்கப்படுகிறது. கிரிக்கெட்டில் வீசப்படும் பவுன்சர் (bouncer) பந்து தரையில் பட்டு எப்படி துள்ளி எழுகிறதோ அதுபோல ஆபத்தான இடத்தில் இருந்து எறும்புகள் துள்ளிக் குதித்து தப்பிக்கும். இந்த குதித்தல் நாம் கண் சிமிட்டும் நேரத்தை விட 2300 மடங்கு வேகத்துடன் நிகழ்கிறது.

எறும்புகளின் சுறு சுறுப்புத் தன்மை என்றுமே நம்மை ஈர்த்து அதன்பால் ஆய்வுகளை மேற்கொள்ள உதவி வருகிறது. நாமறிந்த எறும்புகளில் சுள்ளெறும்பு என்பது அசைவ உண்ணிகள், சாமி எறும்பு என்பவை சைவ உண்ணிகள். உலக அளவில் எறும்பைப் பற்றி குறிப்பாக ஒவ்வொரு வகை எறும்பு களைப் பற்றியும் பல ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

முனைவர் ராஜன் ராமசுவாமி, சென்னை.

X

Daily Thanthi
www.dailythanthi.com