தேசத்தை உலுக்கிய மும்பை பயங்கரவாத தாக்குதல்; 18 ஆண்டுகள் ஆகியும் ஆறாத காயங்கள்

மும்பை பயங்கரவாத தாக்குதலில் 166 அப்பாவி மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 300-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
தேசத்தை உலுக்கிய மும்பை பயங்கரவாத தாக்குதல்; 18 ஆண்டுகள் ஆகியும் ஆறாத காயங்கள்
Published on: 

மும்பை,

இந்திய நாட்டின் அமைதியை சீர்குலைக்க பயங்கரவாதிகள் ஏராளமான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். எல்லையில் நமது ராணுவ வீரர்கள் பயங்கரவாத தாக்குதல்களை முறியடித்தாலும், நாட்டின் எல்லைக்குள் ஊடுருவி அப்பாவி பொதுமக்கள் மீது பயங்கரவாதிகள் நிகழ்த்திய கோழைத்தனமான தாக்குதல்களை இந்த நாடு ஒருபோதும் மறக்காது.

அந்த வகையில், கடந்த 2008-ம் ஆண்டு இந்தியாவின் நிதி தலைநகரான மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய மிருகத்தனமான தாக்குதலால் ஏற்பட்ட காயங்கள், 18 ஆண்டுகள் ஆகியும் இன்றுவரை நமது தேசத்தின் ஆன்மாவிற்கு தீராத வலியை தருவதாக உள்ளது.

இரவில் ஊடுருவிய பயங்கரவாதிகள்

பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி இரவு படகு மூலம் அரபிக்கடல் வழியாக 10 பயங்கரவாதிகள் மும்பைக்குள் ஊடுருவினர். நவீன துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் மற்றும் வெடிகுண்டுகளுடன் வந்த அவர்கள், மும்பையின் முக்கிய இடங்களை குறிவைத்து ஒரே நேரத்தில் தாக்குதலை தொடங்கினர்.

மும்பையின் அடையாளமாக திகழும் தாஜ் ஓட்டல், ஓபராய் ஓட்டல், சத்ரபதி சிவாஜி ரெயில் நிலையம், லியோபோல்ட் கபே, காமா ஆஸ்பத்திரி மற்றும் நரிமன் ஹவுஸ் ஆகிய இடங்களில் பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினர். வெடிகுண்டுகளையும் வீசினர்.

ரத்த வெள்ளத்தில் மிதந்த மும்பை

குறிப்பாக, பயணிகள் கூட்டம் அலைமோதிய சத்ரபதி சிவாஜி ரெயில் நிலையத்தில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் அப்பாவி மக்கள் கொத்துக்கொத்தாக சுட்டு வீழ்த்தப்பட்டனர். 60 மணிநேரத்திற்கும் மேலாக மும்பை நகரை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்து தாக்குதல் நடத்தினர். இதன் முடிவில், 6 அமெரிக்கர்கள் உள்பட 166 அப்பாவி மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 300-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மும்பை நகரமே ரத்த வெள்ளத்தில் மிதந்தது.

வீரர்களின் உயிர் தியாகம்

முன்னதாக மும்பை போலீசார், தேசிய பாதுகாப்புப் படை கமாண்டோக்கள் மற்றும் ராணுவத்தினர் பயங்கரவாதிகளுடன் உயிரை பணயம் வைத்து துப்பாக்கி சண்டை நடத்தினர். துப்பாக்கி சண்டையில் இளம் பயங்கரவாதி அஜ்மல் கசாப்பை உயிருடன் பிடிக்க போராடிய உதவி சப்-இன்ஸ்பெக்டர் துக்காராம் ஓம்லே உள்ளிட்ட 18 பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அவர்கள் தங்கள் உயிரை தியாகம் செய்து மும்பை நகரை பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்டனர்.

பாதுகாப்பு படையினரின் அதிரடி நடவடிக்கையில் 9 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பயங்கரவாதி அஜ்மல் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டான். பின்னர் நீண்ட விசாரணைக்குப் பிறகு 2012-ம் ஆண்டு நவம்பர் 21-ந்தேதி அவன் தூக்கிலிடப்பட்டான்.

சோகத்தின் சாட்சி

மும்பை நகர மக்களின் மனதில் இந்த சோகத்தின் வடு இன்னும் ஆறாமலேயே உள்ளது. சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையத்தில் ரெயில்வே அறிவிப்பாளராக பணியில் இருந்த பப்லு குமார் தீபக்(வயது 51), இந்த சோக சம்பவத்திற்கு சாட்சியாக உள்ளார். அவர் தனது நினைவலைகளை பகிர்ந்து கொண்டார்.

"அன்று இரவு 8.45 மணியளவில் 12 மற்றும் 13-வது நடைமேடைகள் அருகே அடர்ந்த புகைமூட்டத்தையும், பயங்கர வெடிச்சத்தத்துடன் தொடர்ச்சியான துப்பாக்கிச்சூடு சத்தத்தையும் கேட்டேன். ரெயில் நிலையத்திற்குள் பயங்கரவாதிகள் புகுந்து, உயிருக்கு பயந்து ஓடிய பயணிகள் மீது கண்மூடித்தனமாக சுட்டுக்கொண்டிருந்தனர்.

முதல் மாடியில் உள்ள எனது அறையில் இருந்து பார்த்தபோது, மக்கள் ரத்தவெள்ளத்தில் சரிந்து கிடந்ததை கண்டேன். அந்த நொடியில், இன்றுதான் எனது கடைசி நாளாக இருக்கும் என்று நான் நினைத்தேன். இன்றும் கூட யாராவது அந்த சம்பவத்தைப்பற்றி பேசினால், என் உடல் நடுங்க ஆரம்பித்து விடுகிறது” என்று அவர் கூறினார்.

நினைவஞ்சலி

மும்பை தாக்குதல் நடந்து 18 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்று(வியாழக்கிழமை) உயிரிழந்த அப்பாவி மக்களுக்கும், வீரமரணம் அடைந்த பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் நினைவஞ்சலி செலுத்தியுள்ளனர்.

X