அழிவின் விளிம்பில் கடமான்

தெற்கு ஆசியா கண்டத்தின் அடையாளங்கள் பல. அதில் கடமானும் ஒன்று. இதை இரட்டைக் கொம்பன் என்றும் அழைப்பார்கள்.
அழிவின் விளிம்பில் கடமான்
Published on

ஆங்கிலத்தில் சாம்பர் டீர் (Sambar Deer) என்று அழைக்கப்படுகிறது. இமயமலை முதல் தெற்கு பர்மா, தாய்லாந்து வரை ஒரு காலத்தில் பெருங்கூட்டமாக கடமான்கள் வாழ்ந்தன. மலாய்த் தீவுகள், தென் சீனம், தைவான் இங்கெல்லாம் கடமான்கள் தேசிய விலங்காக அறிவிக்கப்பட்டன. மழைக்காடுகளின் அடர்ந்த பிரதேசங்களின் நீர் நிலைக்கு அருகிலேயே கூட்டமாக வாழும் தன்மை கொண்டவை.

கிடா வகை (ஆண்) மான்களுக்கு முன்னந்தலையின் இரண்டு புறமும் நீண்டு கிளை விட்ட கொம்பும், கூடவே வளரும் சிறு கொம்புமாக இரட்டைக் கொம்புகள் இருக்கும். உடல் முழுக்க ஒரே நிறத்தில் (சாம்பல்) பளபளக்கும் மான் இனம் இவைதான். முதுமலை, பழனி மலைப் பகுதியில் மட்டுமே, ஒரு காலத்தில் லட்சக்கணக்கில் சுற்றி திரிந்த இந்த கடமான்கள் இப்போது அரிதிலும் அரிதாகிவிட்டன.

பெரும்பாலும் புற்கள், புதர்செடிகள், பழங்கள்தான் இவைகளின் உணவு. வங்காளப் புலிகள், சிறுத்தைகள் முதல் ஓநாய் கழுதைப் புலிகள் வரை பலவற்றின் பிரதான உணவு இவைகள்தான். மற்ற மான் வகைகளைப் போலன்றி பெண் கடமான் தங்கள் உயிரைக் கொடுத்தாவது வேட்டையாடும் பெரிய விலங்குகளிடமிருந்து தங்கள் குட்டி களைக் காப்பாற்றும்.

இப்படி காலங்காலமாக புலி, சிங்கம் போன்ற வேட்டை விலங்குகளால் வேட்டையாடப்பட்டும் கடமான் இனம் அழியவில்லை. ஆனால், மனிதர்களால் சந்தைப் பொருளாகி வேட்டையாடப்பட்டதால், முற்றிலும் அழிந்து வருகின்றன.

கத்திகளுக்கும், துப்பாக்கிகளுக்கும் கைப்பிடிகளாக, சூட்கேஸ், பயணப்பொதி பைகள் என, கடமான் உறுப்புகளால் பல பயன்பாட்டுப் பொருள்கள் உருவாகி லட்சம் லட்சமாக விலைபோகின்றன என்பதால், வேகவேகமாக அழிக்கப்படுகின்றன. இதன் தோலினால் செய்யப்பட்ட உறை, தைக்கப்பட்ட படுக்கை சூடேறுவதே இல்லை என்பன போன்ற சிறப்பு தகவல்களுக்குப் பின்னே கடமான் இனத்தின் பேரழிவு நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com