

இன்று மனிதர்களின் கைகளில் கட்டப்படும் கடிகாரங்கள் வெறும் நேரத்தை காட்டும் கருவி மட்டுமல்ல; அது அவர்களின் அந்தஸ்தையும், கம்பீரத்தையும் பறைசாற்றும் ஒரு அடையாளமாக மாறிவிட்டது. உலகளவில் புகழ்பெற்ற பல வாட்ச் பிராண்டுகள் இருந்தாலும், ஒவ்வொரு இந்தியரின் வீட்டிலும், நெஞ்சிலும் நீங்காத இடம்பிடித்த ஒரு பெயர் உண்டென்றால் அது ‘டைட்டன்’ ஆகும்.
இந்த உலகத்தரம் வாய்ந்த பிரம்மாண்ட நிறுவனம் உருவாவதற்கும், அதன் அசுர வளர்ச்சிக்கும் நமது தமிழ்நாடுதான் அடித்தளம் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?
மறுக்கப்பட்ட உரிமமும்... கைகொடுத்த தமிழகமும்!
அன்று 1970 மற்றும் 80-களில் இந்திய வாட்ச் சந்தையில் ‘ஹெச்.எம்.டி’ நிறுவனம் மட்டுமே அசைக்க முடியாத ராஜாவாக திகழ்ந்தது. ஒரு சாதாரண வாட்ச் வாங்குவதற்கு கூட மக்கள் பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. இந்த ஏகபோக நிலையை உடைத்து, இந்தியர்களுக்கு அதிநவீன ‘குவார்ட்ஸ்’ தொழில்நுட்பத்தில் உலகத்தரம் வாய்ந்த கடிகாரங்களை வழங்க டாடா குழுமத்தின் ஜெர்க்ஸஸ் தேசாய் திட்டமிட்டார். டாடாவின் இந்த பிரம்மாண்ட திட்டத்திற்கு பல மாநிலங்கள் தயக்கம் காட்டிய நிலையில், தமிழக அரசு தொலைநோக்கு பார்வையுடன் கைகொடுக்க முன்வந்தது.
கடந்த 1984-ம் ஆண்டு ஜூலை 26-ந் தேதி, டாடா குழுமமும், தமிழக அரசின் தொழில் வளர்ச்சி நிறுவனமான ‘டிட்கோ’ அமைப்பும் இணைந்து வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
தமிழகத்தின் எல்லைப் பகுதியான ஓசூரில் இதற்கான பிரம்மாண்ட தொழிற்சாலை அமைக்கப்பட்டது. 1988-ம் ஆண்டு மார்ச் 11-ந் தேதி ஜே.ஆர்.டி. டாடா இந்த தொழிற்சாலை முறைப்படி திறந்து வைக்கப்பட்டது.
இந்த பெயர் வெறும் தற்செயலாக வைக்கப்பட்டது அல்ல. இது தமிழக அரசுக்கும், டாடா நிறுவனத்திற்கும் இடையே இருந்த வரலாற்று சிறப்புமிக்க கூட்டாண்மையை குறிக்கும் ஒரு சுருக்கக் குறியீடு ஆகும்.
TI: தமிழக அரசின் தொழில் வளர்ச்சி நிறுவனமான (TIDCO) டிட்கோ.
TAN: இந்தியாவின் (TAta) டாடா குழுமம்.
இந்த இரு நிறுவனங்களின் பெயர்களையும் இணைத்து, தங்களின் கூட்டு முயற்சியின் அடையாளமாக ‘TITAN’ என்று பெயரிட்டனர்.
கிராமத்துப் பெண்களை ‘வாட்ச் மேக்கர்களாக’ மாற்றிய அற்புதம்!
டைட்டன் நிறுவனம் வெறும் வாட்ச் மட்டும் தயாரிக்கவில்லை, ஓசூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பின்தங்கிய கிராம மக்களின் வாழ்க்கையையே மாற்றி அமைத்தது. தொழிற்சாலை அமைக்கப்பட்ட ஆரம்ப காலத்தில், கடிகாரம் தயாரிப்பில் எந்தவொரு முன் அனுபவமும் இல்லாத உள்ளூர் கிராமத்து இளைஞர்களுக்கும், குறிப்பாக ஆயிரக்கணக்கான இளம்பெண்களுக்கும் டைட்டன் நிறுவனம் உலகத்தரம் வாய்ந்த பயிற்சியை இலவசமாக வழங்கியது. மிகவும் நுணுக்கமான வாட்ச் உதிரிபாகங்களை அசெம்பிள் செய்யும் வல்லுநர்களாக அந்த கிராமத்து பெண்கள் உருவெடுத்தனர். தமிழக பெண்களின் உழைப்பும், டாடாவின் நம்பிக்கையும் இணைந்து டைட்டனை உச்சத்திற்கு கொண்டு சென்றது.
அன்று ஓசூரில் ஒரு சிறிய ஆலையாக தொடங்கப்பட்ட டைட்டன், இன்று இந்தியாவின் மிகப்பெரிய கடிகார உற்பத்தியாளராகவும், உலகின் 5-வது மிகப்பெரிய வாட்ச் நிறுவனமாகவும் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது! வாட்ச் மட்டுமின்றி தங்கம், கண்ணாடி , வாசனை திரவியங்கள் எனப் பல துறைகளில் கொடிகட்டிப் பறக்கிறது.
தன்னை வாழவைத்த தமிழக மண்ணையும், தமிழ் மொழியையும் டைட்டன் ஒருபோதும் மறக்கவில்லை. அதன் வெளிப்பாடாக, ‘டைட்டன் தமிழ்நாடு’ என்ற பெயரில், வாட்ச் டயலில் தூய தமிழ் எண்களையும், தமிழ் எழுத்துக்களையும் பொறித்து, தமிழ் கலாச்சாரத்தை பெருமைப்படுத்தும் சிறப்புப் பதிப்பு வாட்ச்களை அறிமுகம் செய்து தமிழர்களை நெகிழ செய்தது.