மும்பை அணியின் வெற்றிகரமான கேப்டன் ரோஹித் - ஒரு பார்வை

மும்பை அணி மீண்டும் சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.
ரோஹித் சர்மா
Published on: 

மும்பை,

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். 2027-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் அணியை அவர் வழிநடத்த உள்ளார். இதன் மூலம் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தனது பழைய கேப்டன் பொறுப்புக்குத் திரும்பியுள்ளார்.

ரிக்கி பாண்டிங்

2011-ம் ஆண்டு டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வந்தார் ரோஹித் சர்மா. ஆரம்பத்தில் ஒரு வீரராக விளையாடி வந்த அவருக்கு, 2013-ம் ஆண்டு சீசனின் பாதியில் கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது. அப்போது கேப்டனாக இருந்த ரிக்கி பாண்டிங் அந்தப் பொறுப்பிலிருந்து விலகியதைத் தொடர்ந்து ரோஹித் அணியை வழிநடத்தினார்.

ஐந்து முறை கோப்பை

2013-ம் ஆண்டு மும்பை அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்ற ரோகித், அப்போது வான்கடே மைதானத்தை மும்பை அணியின் கோட்டையாக மாற்ற வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் வெளிப்படுத்தியிருந்தார்.

“வான்கடே மைதானத்தை எங்களது கோட்டையாக மாற்ற விரும்புகிறோம். அதை எங்களது சொந்தக் களமாக மாற்றி, மும்பைக்கு வந்து எங்களுடன் விளையாடுவதற்கே மற்ற அணிகள் அஞ்சும் நிலையை உருவாக்க வேண்டும்” என்று 2013-ம் ஆண்டு ரோகித் கூறியிருந்தார்.

ரோகித் தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி 2013-ம் ஆண்டு முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது. தொடர்ந்து 2015, 2017, 2019 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளிலும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதன் மூலம் மும்பை அணியின் வெற்றிகரமான கேப்டனாக ரோஹித் உருவெடுத்தார்.

தொடர்ந்து 2023-ம் ஆண்டு வரை அணியை வழிநடத்திய அவர், அந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான தகுதிச் சுற்று 2-ல் தோல்வியடைந்ததை தொடர்ந்து கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார்.

ஹர்திக் பாண்ட்யாவிடம் சென்ற கேப்டன் பொறுப்பு

2024-ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ஹர்திக் பாண்ட்யா குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பினார். அவருக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டதால், ரோஹித் சர்மா சாதாரண வீரராகத் தொடர்ந்தார்.

ஹர்திக் தலைமையில் 2024-ம் ஆண்டு மும்பை அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்தது. 2025-ம் ஆண்டு பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியபோதும் கோப்பையை வெல்ல முடியவில்லை. 2026-ம் ஆண்டு தொடரிலும் அணியின் செயல்பாடு எதிர்பார்த்த அளவில் அமையவில்லை.

மீண்டும் ரோஹித்துக்கு வாய்ப்பு

இந்த நிலையில், 2027-ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ஹர்திக் பாண்ட்யா பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு வர்த்தக முறையில் மாற்றப்பட்டார். இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வந்தார்.

இதையடுத்து புதிய கேப்டன் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், ரோகித் சர்மாவையே மீண்டும் கேப்டனாக நியமிப்பதாக மும்பை இந்தியன்ஸ் அணி அறிவித்துள்ளது.

அணியின் 20-வது ஐபிஎல் சீசனில் ரோஹித் மீண்டும் தலைமைப் பொறுப்பை ஏற்க உள்ளார். ஏற்கெனவே ஐந்து முறை கோப்பையை வென்று கொடுத்த தனது பழைய கேப்டனின் தலைமையில் மும்பை அணி மீண்டும் சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

X