சுவையான சாம்பார் சாதம் செய்வது எப்படி..?

இந்த வாரம் பேச்சுலர்ஸ் சமையல் டிப்ஸ் பகுதியில் சுவையான சாம்பார் சாதம் செய்வது எப்படி என்பதை பற்றி பார்க்கப்போகிறோம்.
சாம்பார் சாதம்
Published on

தேவையான பொருட்கள்:-

புழுங்கல் அரிசி - ¾ கப்

துவரம் பருப்பு - ½ கப்

தண்ணீர் - தேவையான அளவு

கடலை எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

கடலை பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்

கொத்தமல்லி - 1 டேபிள் ஸ்பூன்

மிளகு - 2 டீஸ்பூன்

உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

பெருஞ்சீரகம் (சோம்பு) - 1 டீஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 7

காஷ்மீர் மிளகாய் - 5

துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் பொடி - ½ டீஸ்பூன்

காயப்பொடி - ¼ டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 2

சின்ன வெங்காயம் - 10

கேரட் - 2

பீன்ஸ் - 10

வெள்ளரிக்காய் - பாதி

கத்தரிக்காய் - 2

முருங்கைக்காய் - 4 துண்டு

வாழைக்காய் - 1

உருளைக்கிழங்கு - 1

தக்காளி - 2

பச்சைப் பட்டாணி - ஒரு கைப்பிடி

புளி - நெல்லிக்காய் அளவு

நெய் - 1 டேபிள் ஸ்பூன்

முந்திரி பருப்பு - 15

கடுகு, உளுந்தம் பருப்பு - சிறிதளவு

கருவேப்பிலை - சிறிதளவு

கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி அளவு

செய்முறை:-

முதலில், சாதம் தயார் செய்துகொள்ள வேண்டும். அதற்கு, புழுங்கல் அரிசி மற்றும் துவரம் பருப்பை நன்கு தண்ணீரில் கழுவி, அதை வடிகட்டி ஒரு குக்கரில் எடுத்துக்கொள்ளவும். அத்துடன் 4 கப் தண்ணீரை சேர்த்து, குக்கரை மூடி கேஸ் அடுப்பில் வைத்து, 4 விசில் வரும் வரை வேகவிடவும்.

மற்றொரு புறம் மசாலா தயாரிக்க, ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் 1 டேபிள் ஸ்பூன் கடலை எண்ணெய் எடுத்துக்கொள்ளவும். எண்ணெய் சூடாகியதும் கடலை பருப்பு, கொத்தமல்லி, மிளகு, உளுந்தம் பருப்பு, பெருஞ்சீரகம், சீரகம், காய்ந்த மிளகாய் 4, காஷ்மீர் மிளகாய் ஆகியவற்றை சேர்த்து லேசாக சிவக்கும் வரை வறுக்கவும்.

கரிந்துவிடக்கூடாது. எனவே, அடுப்பில் தீயை குறைத்துக்கொள்ளவும். அத்துடன் துருவிய தேங்காயை சேர்த்துக்கொள்ளவும். நன்கு வதங்கிய பிறகு, ஆறவைத்து மிக்சி ஜாரில் போட்டு பவுடராக அரைக்கவும். சாம்பார் சாதத்திற்கான மசாலா தயார். அதை தனியாக வைத்துக்கொள்ளவும்.

அடுத்து சாம்பார் சாதம் செய்த ஒரு பெரிய பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய்யை சேர்க்கவும். எண்ணெய் சூடாகியதும் மஞ்சள் பொடி, காயப்பொடி ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்துவிட்டு, வெட்டி வைத்த பச்சை மிளகாய், தோல் உரித்த சின்ன வெங்காயத்தை சேர்த்து கிளறவும்.

அடுத்து வெட்டி வைத்த கேரட், பீன்ஸ், வெள்ளரிக்காய், கத்தரிக்காய், முருங்கைக்காய், வாழைக்காய், உருளைக்கிழங்கு, தக்காளி, பச்சைப் பட்டாணி ஆகியவற்றை சேர்த்து கிளறவும். அடுத்து, அரைத்து வைத்த மசாலாவையும் சேர்த்து நன்கு கிளறிவிடவும். காய்கறி மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி, சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வேகவிடவும்.

காய்கறி நன்கு வெந்தவுடன் புளி தண்ணீரை சேர்க்கவும். தேவையான அளவு உப்பையும் சேர்த்து, நன்கு கலந்துவிடவும். அதன்பிறகு, வேகவைத்த சாதத்தை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து, கட்டி விழாத அளவுக்கு கிளறிவிடவும். அதன்பிறகு, 5 நிமிடம் வேகவிடவும். ரொம்ப கெட்டியாகிவிடக்கூடாது. சிறிது கொள கொளப்பாக இருக்க வேண்டும்.

அதன்பிறகு தாளிக்க, ஒரு பாத்திரத்தில் நெய்யை உருக்கவும். அதில் முந்திரி பருப்பு சேர்த்து வறுக்கவும். சிறிது பொன் நிறமானதும், அதை வெளியே எடுத்துவைத்துவிட்டு, அதே நெய்யில் கடுகு, உளுந்தம் பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாய் 3, கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வறுக்கவும். அதன்பின்னர், சாம்பார் சாதத்துடன் வறுத்து வைத்த முந்திரி, சாளிப்பை சேர்க்கவும். நிறைவாக, கொத்தமல்லி இலையை சேர்த்து கிளறிவிடவும். சுவையான, மணமான சாம்பார் சாதம் ரெடி.

X

Daily Thanthi
www.dailythanthi.com