இன்று சர்வதேச யோகா தினம்.. “ஆரோக்கிய வாழ்வுக்கு யோகா”

பிரதான யோகா தின நிகழ்ச்சியானது கொல்கத்தாவில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறுகிறது.
சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம், International Yoga Day 2026
சர்வதேச யோகா தினம்
Published on

உலக அளவில் யோகாவின் முக்கியத்துவத்தை உணர்த்த ஆண்டுதோறும் ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.

மக்களின் தற்போதைய வாழ்க்கை முறை பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. நகர வாழ்க்கை மட்டுமல்ல, கிராமப்புற வாழ்க்கையும்கூட இயந்திரத்தனமாக மாறிபோய்விட்டது. இதன் விளைவு ஆரம்பத்தில் தெரிவதில்லை. நாளடைவில் இதன் தாக்கத்தை உணரத் தொடங்குகிறார்கள்.

யோகா அவசியம் ஏன்?

நெருக்கடியான வாழ்க்கை முறையால், தூக்கமின்மை, மனஅழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பெரும்பாலானோர் ஆளாகிறார்கள். இப்படி மன ரீதியில் ஏற்படும் பிரச்சினைகள் நாளடைவில் உடல் ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கிறார்கள்.

இன்று இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைவதற்கு இதுபோன்ற அசாதாரண வாழ்க்கை முறையே முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

உடல் ரீதியிலான பிரச்சினைக்கு மருந்துகள் பல இருக்கின்றன. ஆனால், மன ரீதியிலான பிரச்சினைக்கு இறை வழிவாடும், யோகாவும் தீர்வாக அமையும். இதில் யோகா என்பது இந்தியாவின் பழமையான கலைகளில் ஒன்று. உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதால், 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் யோகா பயிற்றுவிக்கப்படுகிறது.

சர்வதேச யோகா தினம் 2026

உலக அளவில் இதன் முக்கியத்துவத்தை உணர்த்த ஆண்டுதோறும் ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் 12-வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டும் வழக்கமான உற்சாகத்துடன் உலகம் முழுவதும் யோகா நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. வெளிநாடுகளில் உள்ள 210 இந்தியத் தூதரகங்கள் மற்றும் தூதரக அலுவலகங்கள் சார்பில் உலகம் முழுவதும் சுமார் 2,500 இடங்களில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்தியாவில் பிரதான யோகா நிகழ்ச்சி, கொல்கத்தாவில் நடைபெறுகிறது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள இந்நிகழ்ச்சியில் சுமார் 30,000 பேர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

யோகா தின கருப்பொருள்

இந்த ஆண்டின் யோகா தினத்திற்கான கருப்பொருள் “ஆரோக்கியமான முதுமைக்கான யோகா" (Yoga for Healthy Ageing) என்பதாகும். அனைத்து வயதினருக்கும் குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு நீண்ட ஆயுள், சிறப்பான உடல் இயக்கம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் யோகா வகிக்கும் பங்கை இந்த கருப்பொருள் உணர்த்துகிறது.

உலகம் முழுவதும் முதியோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், வழக்கமான யோகா பயிற்சி எவ்வாறு ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கைக்கு துணைபுரியும் என்பதை இக்கருப்பொருள் வலியுறுத்துகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com