

இந்த வாரம் பேச்சுலர்ஸ் சமையல் டிப்ஸ் பகுதியில் சுவையான ஹோட்டல் ஸ்டைல் வெஜ் குருமா செய்வது எப்படி? என்பதை பார்க்கப்போகிறோம்.
நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
பிரியாணி இலை - 2
பட்டை - 1
ஏலக்காய் - 3
கிராம்பு - 3
சோம்பு - 1 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - ½ டீஸ்பூன்
சீரகப்பொடி - 1 டீஸ்பூன்
மிளகாய் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
மல்லிப்பொடி - 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 2
பீன்ஸ் - 100 கிராம்
கேரட் - 100 கிராம்
பச்சைப்பட்டாணி - 100 கிராம்
காலிபிளவர் - 100 கிராம்
உருளைக்கிழங்கு - 100 கிராம்
தண்ணீர் - 2 கப்
தேங்காய் - அரை மூடி
பொட்டு கடலை - 1 டேபிள் ஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
முந்திரி - 5
உப்பு - தேவையான அளவு
மல்லி இலை - சிறிதளவு
முதலில் 'கேஸ்' அடுப்பில் தீயை பற்றவைத்து, வாய் அகன்ற ஒரு பாத்திரத்தை வைக்கவும். அதில், நல்லெண்ணெயை ஊற்றவும். எண்ணெய் சூடாகியதும் பிரியாணி இலை, பட்டை, ஏலக்காய், கிராம்பு, சோம்பு ஆகியவை சேர்த்து லேசாக வறுக்கவும். அடுத்து பொடியாக வெட்டிவைத்த வெங்காயத்தை சேர்த்து, தேவையான அளவு உப்பையும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக மாற வேண்டும் என்ற அவசியம் இல்லை.
அடுத்து, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து நன்கு கிளறவும். தொடர்ந்து, மஞ்சள் பொடி, சீரகப் பொடி, மிளகாய் பொடி, மல்லிப் பொடி சேர்த்து நன்கு கிளறிவிடவும். அடுத்து பொடியாக வெட்டி வைத்த தக்காளியை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். வெங்காயம், தக்காளி நன்கு வதங்கிய உடன், காய்கறிகளை சேர்க்கவும். பொடியாக வெட்டிய பீன்ஸ், கேரட், பச்சை பட்டாணி, காலிபிளவர், உருளைக்கிழங்கு ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் ஊற்றி கிளறிவிட்டு நன்கு வேகவிடவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும்.
காய்கறி வெந்து கொண்டிருக்கும்போதே, மற்றொரு புறம் தேங்காயை சிறு சிறு துண்டுகளாக வெட்டி மிக்சி ஜாரில் எடுத்துக்கொள்ளவும். அத்துடன் பொட்டுக்கடலை, கசகசா, முந்திரி ஆகியவற்றை சேர்த்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றி மையாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். அதை காய்கறி கலவையுடன் சேர்த்து கிண்டிவிடவும். காய்கறி நன்றாக வேக வேண்டும். காய்கறி வெந்தவுடன் சிறிதளவு மல்லி இலையை தூவி இறக்கவும். சுவையான, மனமான ஹோட்டல் ஸ்டைல் வெஜ் குருமா ரெடி. புரோட்டா, சப்பாத்தி, இடியாப்பம், இட்லி, தோசைக்கு ஏற்ற சைடு டிஸ்.