சண்டே ஸ்பெஷல்: சுவையான கத்தரிக்காய் தொக்கு எப்படி செய்வது..?

இந்த வாரம் பேச்சுலர்ஸ் சமையல் டிப்ஸ் பகுதியில், சுவையில் சுண்டி இழுக்கும் கத்தரிக்காய் தொக்கு எப்படி செய்வது என்பதை பற்றி பார்க்கப்போகிறோம்.
சண்டே ஸ்பெஷல்: சுவையான கத்தரிக்காய் தொக்கு எப்படி செய்வது..?
Published on

தேவையான பொருட்கள்:-

கத்தரிக்காய் - 4 (பெரியது)

நல்லெண்ணெய் - 6 டேபிள் ஸ்பூன்

சின்ன வெங்காயம் - 20

வேர்க்கடலை - ¼ கப்

தக்காளி - 2 (பெரியது)

கடுகு - சிறிதளவு

சோம்பு - ½ டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 2

கறிவேப்பிலை - சிறிதளவு

பெரிய வெங்காயம் - 1

இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு

மஞ்சள் பொடி - சிறிதளவு

மல்லி பொடி - ஒரு டேபிள் ஸ்பூன்

மிளகாய் பொடி - 2 டேபிள் ஸ்பூன்

புளி - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:-

அடுப்பை 'ஆன்' செய்து, அதில் வாய் அகன்ற பாத்திரம் ஒன்றை வைக்கவும். அதில், 3 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும், நீட்டு நீட்டாக வெட்டிவைத்த கத்தரிக்காயை சேர்த்து பொன் நிறமாக வரும்வரை நன்கு வதக்கவும். அதை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

அடுத்து, சின்ன வெங்காயத்தை எண்ணெய்யில் போட்டு, அதேபோல் பொன் நிறமாக வதக்கி எடுத்து வைத்துக்கொள்ளவும். அதே எண்ணெய்யில் வேர்க்கடலையையும் வறுத்து எடுக்கவும். அடுத்து தக்காளியை சிறிய துண்டுகளாக மிக்சி ஜாரில் வெட்டி போட்டு, அதை விழுதாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

அடுத்து, கத்தரிக்காய் தொக்கை செய்யத் தொடங்கலாம். முதலில் ஒரு பாத்திரத்தில் 3 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கவும். கடுகு, சோம்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். அடுத்து, பொடிப்பொடியாக வெட்டி வைத்த பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். அத்துடன், இஞ்சி, பூண்டு விழுதையும் சேர்க்கவும். வெங்காயம் நன்கு வதங்கி பொன் நிறமாக மாறியதும், மஞ்சள் பொடி, மல்லிப் பொடி, மிளகாய் பொடி ஆகியவை சேர்த்து நன்கு கிளறிவிடவும்.

அடுத்து, அரைத்து வைத்த தக்காளி விழுதையும் சேர்க்கவும். சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்துவிட்டு, எண்ணெய் பிரிந்து வரும்வரை வேகவிடவும். அடுத்து, ¾ கப் அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கிளறவும். அத்துடன் நாம் முதலிலேயே எண்ணெய்யில் வதக்கி வைத்த கத்தரிக்காய், சின்ன வெங்காயம், வேர்க்கடலை ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்க்கவும்.

புளியை தண்ணீரில் கரைத்து, அந்த கரைசலையும் சேர்க்கவும். தேவையான அளவு உப்பையும் சேர்த்து, எண்ணெய் பிரிந்து வரும்வரை வேகவிடவும். சுவையான கத்தரிக்காய் தொக்கு ரெடி. சாதம், டிபன் ஆகியவற்றுக்கு சிறந்த காம்பினேஷன்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com