ஸ்பேம் அழைப்புகள்: 3 மாதங்களில் 1.24 லட்சம் செல்போன் இணைப்புகள் துண்டிப்பு

போலியான கே.ஒய்.சி. ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட 9,977 எண்களும் துண்டிக்கப்பட்டுள்ளன.
ஸ்பேம் அழைப்புகள்: 3 மாதங்களில் 1.24 லட்சம் செல்போன் இணைப்புகள் துண்டிப்பு
Published on: 

புதுடெல்லி,

தேவையற்ற (ஸ்பேம்) அழைப்புகள் தொல்லை காரணமாக 3 மாதங்களில் 1.24 லட்சம் செல்போன் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசின் டிராய் தெரிவித்துள்ளது.

டிராய் டி.என்.டி.

செல்போன் பயனர்களுக்குத் தினசரி பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ள தேவையற்ற விளம்பர அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளைக் (ஸ்பேம்) கட்டுப்படுத்த, இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) அதிரடி நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக 'டிராய் டி.என்.டி.' என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலமாக, செல்போனுக்கு வரும் தேவையற்ற அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளைத் தடுக்கவும், அவை குறித்து எளிதாகப் புகாரளிக்கவும் முடிகிறது.

ஜூலை முதல் செப்டம்பர் வரை

இந்தச் செயலி மூலம் பெறப்படும் புகார்களின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதை உறுதிப்படுத்தும் வகையில், மத்திய அரசின் டிராய் ஆணையம் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், நடப்பு நிதியாண்டின் 2-வது காலாண்டான ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான 3 மாதங்களில் 'டிராய் டி.என்.டி.' செயலி உள்ளிட்ட வழிகளில் 15.29 லட்சம் புகார்கள் பெறப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்போன் இணைப்புகள் துண்டிப்பு

இதன் அடிப்படையில், விதிகளை மீறிய 1 லட்சத்து 10 ஆயிரத்து 325 செல்போன் இணைப்புகளின் வெளிச்செல்லும் சேவைகள் 15 நாட்களுக்கு முடக்கப்பட்டன. தொடர்ந்து விதிகளை மீறிய 13 ஆயிரத்து 777 இணைப்புகள் ஓராண்டு காலத்திற்கு முழுமையாகத் துண்டிக்கப்பட்டன. மேலும், 374 நிறுவனங்கள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டு, 3,725 எஸ்.எம்.எஸ். முகவரிகள் முடக்கப்பட்டுள்ளன. இதுதவிர, போலியான கே.ஒய்.சி. ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட 9,977 எண்களும் துண்டிக்கப்பட்டுள்ளன.

ஏ.ஐ. தொழில்நுட்பம்

இதுதவிர, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பம் மூலம் 1,990 கோடி சந்தேகத்திற்குரிய அழைப்புகள் கண்டறியப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கிச் சேவைகளுக்கு '1600' மற்றும் டெலிவரி சேவைகளுக்கு '1601' ஆகிய சிறப்பு எண் வரிசைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம், வரும் அழைப்புகள் எத்தகையவை என்பதை வாடிக்கையாளர்கள் எளிதில் அடையாளம் காண முடிகிறது.

பாதுகாப்பு

டிராய் அமைப்பின் இந்தத் தொடர் நடவடிக்கைகள், வரும் காலங்களில் செல்போன் பயனர்களுக்கு நிம்மதியான மற்றும் பாதுகாப்பான தொலைத்தொடர்புச் சேவையை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X