

சென்னை,
தமிழ்நாட்டில் தெருநாய் தொல்லைகளை ஒழிக்கும் நடவடிக்கையில் இந்த ஆண்டு இறுதிக்குள் இலக்கு எட்டப்பட்டுவிடும் என்று தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.
தெருநாய் தொல்லையால் பலரும் பாதிக்கப்படுகிறார்கள். இந்த அவலத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. அதில் என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளது. எதிர்காலத்தில் நாய்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக அவற்றுக்கு செய்ய வேண்டிய கருத்தடை அறுவை சிகிச்சை குறித்தும், அதன் பிறகு அவற்றின் உயிருக்கான உத்தரவாதம் குறித்தும் சுப்ரீம் கோர்ட்டு திட்டம் வகுத்தளித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 2025-ம் ஆண்டு ஜனவரி-ஜூலை வரை 6 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டனர். 34 பேர் உயிரிழந்தனர். இந்த ஆண்டில் கடந்த 7 மாதங்களில் 4.6 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 24 பேர் உயிரிழந்துவிட்டனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு நாய்க்கடி பாதிப்பு குறைந்துள்ளதாக பொது சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
தமிழகத்தில் அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 28 ஆயிரம், நெல்லையில் 23 ஆயிரம், திருவள்ளூர் மாவட்டத்தில் 19 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தஞ்சாவூர், கோவை மாவட்டங்களில் நாய்க்கடியால் சுமார் 20 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த பாதிப்பை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் அனைத்து அரசு மருத்தவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய அளவில் நாய்க்கடி மருந்து இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. நாய் கடித்த பிறகு 4 தவணைகளில் ரேபிஸ் தடுப்பூசி உள்ளிட்ட ஊசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் தெரு நாய்த்தொல்லை தொடர்பான வழக்கு ஒன்றில் சென்னை ஐகோர்ட்டு சில கடுமையான கருத்துகளை கூறியிருந்தது. "காகித அளவில் அரசின் அறிக்கைகள் இருந்தாலும், நேரடி களத்தில் எந்தவித மாற்றமும் தெரியவில்லை. ஐகோர்ட்டு வளாகத்திலும் நாய்த் தொல்லை இருக்கிறதே" என்று நீதிபதிகள் குறிப்பிட்டு இருந்தனர். அதனடிப்படையில், தமிழ்நாட்டில் தெருநாய் தொல்லையை ஒழிக்கும் அரசின் நடவடிக்கை தோல்வி அடைந்துவிட்டதா? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு அரசு உயர் அதிகாரி ஒருவர் அளித்த பதில் வருமாறு:
தெருநாய் பிரச்சினையை நாங்கள் எளிதாக எடுத்துக்கொள்ளவில்லை. மக்களுக்கு நேரடியான பிரச்சினை என்பதால், அதனுடன் மாவட்ட கலெக்டர்களையும் தொடர்புபடுத்தி வாரந்தோறும் ஆய்வு செய்து வருகிறோம். இதனால்தான் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிக முன்னேற்றத்தை காண முடிகிறது. சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ள அனைத்து உத்தரவுகளையும் பின்பற்றி நடவடிக்கை எடுக்கிறோம். கடந்த ஜனவரி 24 முதல் ஜூலை 26-ந்தேதி வரை 3 லட்சத்து 38 ஆயிரத்து 135 நாய்களுக்கு ஏபிசி அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளது. குறுகிய காலத்தில் நடைபெற்ற அதிகபட்ச அறுவை சிகிச்சை எண்ணிக்கை இது. சென்னையில் 52 ஆயிரத்து 226 நாய்களுக்கு ஏபிசி அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
அனைத்து நாய்களுமே உயிருடன் உள்ளன. ஏபிசி மையங்களில் தனி அரங்குகள் உள்ளன. அங்கு அவை வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன. கால்நடை மருத்துவர்கள், மாநகராட்சி டாக்டர்கள், தன்னார்வ ஆர்வலர்களாக உள்ள டாக்டர்கள் அவற்றை கண்காணித்து வருவார்கள். அவர்களுக்கு எத்தனை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதற்கான இலக்குகள் அளிக்கப்படுகின்றன.
அடுத்ததாக, நாய்களுக்கு நோய் வரக்கூடாது என்பதற்காக தடுப்பூசிகளை (ஆன்டி ரேபிஸ்) அளிக்கிறோம். அனைத்து நாய்களுக்கும் தடுப்பூசிகள் போட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன் விலை ரூ.9 தான். எனவே போதுமான அளவில் அவற்றை வாங்கி வைக்க உத்தரவிட்டுள்ளோம். ஊசி போடப்பட்டதும் மீண்டும் பழைய இடத்திற்கே அவை கொண்டு விடப்படும். இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரை 1 லட்சத்து 68 ஆயிரத்து 878 நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முடிவதற்குள் அனைத்து நாய்களுக்குமே தடுப்பூசி போடும் அளவில் திட்டங்களை வகுத்துள்ளோம்.
தலைமைச் செயலாளர்கள், சம்பந்தப்பட்ட துறைகளின் செயலாளர்கள், இயக்குனர்கள், கமிஷனர்கள் அவ்வப்போது ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதுபோன்ற நடவடிக்கைகளை கணக்கிட்டால், கடந்த ஆண்டைவிட 150 சதவீதம் அதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. இதில் மற்ற மாநிலங்களைவிட தமிழகம்தான் சிறப்பான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இதுபோன்ற நடவடிக்கைகளின் பலனை படிப்படியாகத்தான் அடைய முடியும். உயிர்கள் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால், ஒரே நாளில் சீர் செய்துவிட முடியாது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுகளையும் பின்பற்றியாக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை மாநகராட்சி கமிஷனர் சமீரன் கூறியதாவது:
சென்னையில் கடந்த 2024-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 1.81 லட்சம் தெரு நாய்கள் இருப்பது தெரியவந்தது. இதில் பள்ளிகள், கல்லூரிகள் போன்ற பகுதிகளில் 3,544 தெரு நாய்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. புளியந்தோப்பு, கண்ணம்மாபேட்டை, மீனம்பாக்கம், சோழிங்கநல்லூர், திருவொற்றியூர், மாதவரம், கண்ணப்பர்திடல், பெருங்குடி, லாயிட்ஸ் காலனி உள்ளிட்ட 11 இடங்களில் தெருநாய்கள் கருத்தடை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. தெரு நாய்கள் பிரச்சினையை குறைப்பதில் அவற்றிற்கு கருத்தடை செய்வதை அதிகரிக்க தீவிரம் காட்டி வருகிறோம்.
தற்போது நாள் ஒன்றுக்கு 100 முதல் 110 தெரு நாய்களுக்கு கருத்தடை செய்து அவற்றை பிடித்த இடத்திலேயே விடுகிறோம். நாள்தோறும் கருத்தடை செய்யும் எண்ணிக்கையை வரும் காலங்களில் 350 வரையில் அதிகரிக்க திட்டமிட்டு உள்ளோம். அதற்கேற்ப அம்பத்தூர், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய 4 இடங்களில் கூடுதலாக இனக்கட்டுப்பாட்டு மையங்கள் திறக்க உள்ளோம்.
ஆக்ரோஷ தன்மை கொண்ட நாய்களை பிடித்து அவற்றை பராமரிக்க மணலி மற்றும் பெருங்குடியில் தனிமைப்படுத்தல் மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. அடுத்த 2 மாதங்களில் இவை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இதில், 500 நாய்கள் வரை பராமரிக்க முடியும். கடந்த மே மாதம் 3,237 தெரு நாய்களுக்கும், ஜூன் மாதம் 4,765 தெரு நாய்களுக்கும் கருத்தடை செய்துள்ளோம். இதை வரும் காலங்களில் மாதம் தோறும் 9 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையில் அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். மண்டலத்திற்கு ஒரு கருத்தடை மையங்களை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
சென்னையை பொறுத்தவரை அதிகளவில் குப்பைகள் சேரும் இடங்களிலும் நாய்களின் தொல்லை உள்ளது. அந்த வகையில், சென்னையில் அதிக அளவில் குப்பைகளை உற்பத்தி செய்யும் 3,204 குடியிருப்பு வளாகங்கள் உள்ளன. அவர்கள் குப்பைகளை சரியான முறையில் அகற்றுகிறார்களா? என்பதை நாள்தோறும் கண்காணித்து வருகிறோம். பொதுமக்கள் சிலர் தாங்கள் சாப்பிட்ட உணவுகளை ஆங்காங்கே வீசி செல்கிறார்கள். அதை தேடி தெரு நாய்கள் வரும்போது, சாலையில் செல்லும் சிலரை கடிக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. சிலர் இரவு நேரங்களில் குப்பைகளை சாலையின் ஓரத்தில் போட்டுவிடுகிறார்கள். இதனால் அங்கே தெரு நாய்கள் அதிகரித்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.
இவ்வாறு உத்தரவுகளை மீறுவோருக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரையில் அபராதம் விதித்து வருகிறோம். என்னதான் விதிமுறைகள் இருந்தாலும் தெருநாய்கள் பிரச்சினையை கட்டுப்படுத்துவதில் பொதுமக்கள் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.