

துவரம் பருப்பு - 200 கிராம்
காய்ந்த மிளகாய் - 7
பெருஞ்சீரகம் - 2 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
பூண்டு - 16 பல்
துருவிய தேங்காய் - 1 கப்
கடலை எண்ணெய் - 1½ டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு - ½ டீஸ்பூன்
வெந்தயம் - ¼ டீஸ்பூன்
மஞ்சள் பொடி - ¼ டீஸ்பூன்
வத்தல் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
மல்லிப் பொடி - 2 டேபிள் ஸ்பூன்
புளி - சிறிய எலுமிச்சை பழம் அளவு
கருவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
துவரம் பருப்பை தண்ணீரில் 2 முறை நன்கு கழுவி, ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊர வைக்கவும். மற்றொரு புறம், ஒரு மிக்சி ஜாரில் காய்ந்த மிளகாய், 1½ டீஸ்பூன் பெருஞ்சீரகம் ஆகியவற்றை பவுடராக இல்லாமல், துகள்களாக அரைத்துக்கொள்ளவும். அதனுடன் ஊறவைத்த துவரம் பருப்பை வடிகட்டி சேர்த்து, சிறிது நீர் தெளித்து கெட்டியாக அரைக்கவும்.
அரைத்த பருப்பை ஒரு பாத்திரத்தில் எடுத்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும். அதனுடன் சிறு சிறு துண்டுகளாக வெட்டிவைத்த பெரிய வெங்காயம் ஒன்று, 6 பல் பூண்டு (வெட்டியது), துருவிய தேங்காயில் ¼ கப் ஆகியவற்றை சேர்க்கவும். கொஞ்சம் கரிவேப்பிலை, கொத்தமல்லி இலையையும் சிறிது சிறிதாக வெட்டி சேர்த்து, நன்கு கலந்து உருண்டையாக பிடித்துக்கொள்ளவும்.
அடுத்து குழம்புக்கு ஒரு எலுமிச்சை அளவு புளியை 2 கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டிக்கொள்ளவும். அதன்பிறகு, குழம்பு வைக்கும் பாத்திரத்தில் கடலை எண்ணெயை ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை சேர்க்கவும். நன்கு பொரிந்து வந்ததும் அதனுடன் சிறிது கருவேப்பிலையும், வெட்டிவைத்த ஒரு பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய 10 பல் பூண்டு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
தொடர்ந்து, சிறிதாக வெட்டி வைத்த தக்காளியை சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து தக்காளியை நன்கு வதக்கவும். அனைத்தும் சேர்ந்து நன்றாக வெந்து வரும்போது, மஞ்சள் பொடி, வத்தல் பொடி, மல்லிப் பொடி ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் வதக்கவும். தொக்கு மாதிரி வந்தவுடன், கரைத்து வைத்த புளித்தண்ணீரை சேர்க்கவும். கூடுதலாக 3 கப் தண்ணீரையும் சேர்த்து கொதிக்க விடவும்.
6 நிமிடங்கள் நன்கு கொதித்த பிறகு, உருண்டைகளை ஒவ்வொன்றாக சேர்க்கவும். உடனே கரண்டியை விட்டு கிளரக்கூடாது. மிதமான தீயில் 10 முதல் 15 நிமிடங்கள் வரை உருண்டைகளை வேகவிடவும். அடுத்து, முக்கால் கப் தேங்காய், ½ டீஸ்பூன் பெருஞ்சீரகம் ஆகியவற்றை மிக்சியில் போட்டு சிறிது நீர் ஊற்றி அரைக்கவும்.
பருப்பு உருண்டை நன்கு வெந்தவுடன் மிதக்கத் தொடங்கும். அப்போது, அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும். அடுத்து 3 நிமிடங்கள் கொதிக்கவிட்டாலே போதும். கொத்தமல்லி, கருவேப்பிலை இலைகளை தூவி இறக்கவும். சுவையான பருப்பு உருண்டை குழம்பு ரெடி.